இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்
நேபாளம், திங்களன்று வெடித்த பல்லாயிரக்கணக்கான, பிரதானமாக இளைஞர்களை உள்ளடக்கிய மூன்று நாட்கள் வெகுஜன போராட்டங்களால், அரசியல் நெருக்கடியில் மூழ்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் யூடியூப் உட்பட 26 சமூக ஊடக தளங்களுக்கு அரசாங்கம் தடை விதித்ததே உடனடி தூண்டுதலாக இருந்தபோதிலும், வாய்ப்புகள் இல்லாமை, ஊழல் மற்றும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமூக இடைவெளி சம்பந்தமாக நிலவும் பரவலான விரக்தியையும் கோபத்தையுமே இந்தப் போராட்டங்கள் பிரதிபலிக்கின்றன.
சமூக ஊடகங்கள் மீதான தடையை இளைஞர்கள் தணிக்கையிடலாக பார்த்தார்கள். அது விதிக்கப்படுவதற்கு முன்பு, #nepokids என்ற ஹேஷ் குறியீட்டைப் பயன்படுத்தி ட்விட்டர் மற்றும் டிக்டொக்கில் இடப்பட்ட பதிவுகள், அரசியல்வாதிகளின் குடும்பங்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறையை அம்பலப்படுத்தின. சரியாக உறுதிப்படுத்தப்படாத, ஆனால் பரவலாகப் பகிரப்பட்ட, ஒரு அமைச்சரின் மகன் ஆடம்பர வர்த்தக நாமம் கொண்ட பெட்டிகளுடன் காட்சிக் கொடுக்கும் புகைப்படங்களும், ஒரு முன்னாள் நீதிபதியின் மகன் உயர்ரக உணவகங்களில் உணவருந்துவதையும் மெர்சிடெஸ் காரின் அருகில் நிற்பதையும் காட்டும் வீடியோவும் சமீபத்தில் வைரஸ் போல் பரவியிருந்தன.
'[பிரதமர்] ஒலி ஒரு திருடன், நாட்டை விட்டு வெளியேறு', 'சமூக ஊடகங்களை அன்றி ஊழலை நிறுத்து,' 'இழந்த உயிர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் வேண்டும்,' 'எங்கள் எதிர்காலத்திற்காக நாங்கள் இங்கே நிற்கிறோம்' மற்றும் 'பொருளாதார வாய்ப்பை வழங்கு' போன்ற சுலோகங்கள் ஆர்ப்பாட்டங்களில் இடம்பெற்றன.
நேபாளமானது நான்கில் ஒருவர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்ற உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். கடந்த ஆண்டு உத்தியோகப்பூர்வ வேலையின்மை 10.7 சதவீதமாகவும், (15-24 வயதுடைய) இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை 22.7 சதவீதமாகவும் இருந்தது. பல இளைஞர்கள் வேலை தேடி நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
கண்ணீர்ப்புகை, ரப்பர் தோட்டாக்கள், நீர் பீரங்கிகள் மற்றும் துப்பாக்கி தோட்டாக்களைப் பயன்படுத்தி கொடூரமான பொலிஸ் அடக்குமுறை முன்னெடுக்கப்பட்ட போதிலும் போராட்டங்கள் விரைவாக கட்டுப்பாட்டை மீறிச் சென்றன. போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் தீவிர முயற்சியில், உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் திங்களன்று ராஜினாமா செய்ததுடன் அரசாங்கம் சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்குவதாக அறிவித்தது.
இருப்பினும், தலைநகர் கத்மண்டுவில் மட்டுமன்றி, நாடு முழுவதும் உள்ள பிற நகரங்களிலும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவையும் போராட்டக்காரர்கள் மீறினர். பொலிஸ் வன்முறையால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், பொலிசாருடன் மோதிக் கொண்டு, நாடாளுமன்றக் கட்டிடம், உச்ச நீதிமன்றம் மற்றும் ஏனைய அரச கட்டிடங்கள் உட்பட அரசியல் ஸ்தாபனத்தின் சின்னங்களை குறிவைத்துத் தாக்கினர்.
நேபாளி காங்கிரஸ் கட்சியின் ஷேர் பகதூர் தியூபா மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட் மையம்) புஷ்ப கமல் தஹால் ஆகிய இரண்டு முன்னாள் பிரதமர்கள் உட்பட முன்னணி அரசியல்வாதிகளின் வீடுகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. நேபாளி காங்கிரஸ் ஆளும் கூட்டணியில் ஒரு பகுதியாகும். தீ மூட்டல்களால் கத்மண்டுவின் விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டது.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (CPN-UML) எனப்படுவதை சேர்ந்த பிரதமர் கே.பி. சர்மா ஒலி, அரசாங்கம் போராட்டங்களை கையாண்ட விதம் குறித்து ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பரவலான காணப்பட்ட விமர்சனங்களை அடுத்து செவ்வாயன்று ராஜினாமா செய்தார். தலைமை ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல், ஒலியை ராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்ததாக சில செய்திகள் குறிப்பிடுகின்றன. ஒலி இடைக்கால பிரதமராக தொடர்கிறார்.
இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதோடு தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில், முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை இடைக்கால பிரதமராக பரிந்துரைத்து, தொழில்நுடப் அறிஞரின் கீழான இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு முன்மொழிந்துள்ள போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன், இராணுவம் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
புதன்கிழமை, பல சிறைகளில் கைதிகள் சிறைச்சாலைகளை உடைத்தனர். சுமார் 3,000 முதல் 13,500 பேர் வரை தப்பியோடியுள்ளதாக காட்டும் மதிப்பீடுகள் பரவலாக வேறுபடுகின்றன. கொள்ளையர்கள் மற்றும் கலகக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இராணுவம் எச்சரித்த நிலையில், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த துருப்புக்கள் தெருக்களில் இறக்கப்பட்டுள்ளன. கொள்ளையடித்தல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டமைக்காக சுமார் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுகாதார அமைச்சகமானது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக புதன்கிழமை தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், மன்னர் ஞானேந்திர ஷாவை பதவி விலக நிர்ப்பந்தித்ததுடன், நாட்டின் 240 ஆண்டுகால முழுமையான முடியாட்சியை முறையாக ஒழிப்பதை விளைவாக்கியது. அதன் பின்னர் தலை தூக்கியுள்ள இந்த எதிர்ப்பு இயக்கம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அந்த ஆட்சிமுறை மாற்றத்தின் பின்னர், கடந்த 17 ஆண்டுகளில் 14 அரசாங்கங்களுடன் நேபாளம் அரசியல் ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாங்கங்களில் எதுவும் ஐந்து ஆண்டுகள் முழு பதவிக் காலத்தை நிறைவு செய்யவில்லை. கடந்த ஆண்டு, 73 வயதான ஓலி நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை தீர்க்க எந்த பிரதான கட்சிகளாலும் முடியவில்லை. ஓலியின் CPN-UML மற்றும் புஷ்ப கமல் தஹாலின் சி.பி.என். (மாவோயிஸ்ட் மையம்) உட்பட பல்வேறு ஸ்ராலினிசக் கட்சிகள், குறிப்பாக இளைஞர்களைப் பாதித்த நெருக்கடியின் சுமையை, மீண்டும் உழைக்கும் மக்கள் மீதே சுமத்துவதில், பழமைவாத நேபாளி காங்கிரஸைப் போலவே இரக்கமற்றவையாக நடந்து கொண்டன.
புஷ்ப கமல் தஹால், சி.பி.என். (மாவோயிஸ்ட்) பிளவுபடுவதற்கு முன்பு, அதன் தலைவராக இருந்தார். அது இராணுவம் மற்றும் முடியாட்சிக்கு எதிராக நீடித்த கொரில்லாப் போரை நடத்தியது. முடியாட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, அது தனது ஆயுதங்களைக் கைவிட்டு கத்மண்டு அரசியல் ஸ்தாபனத்தில் இணைந்து, ஏற்கனவே இருக்கின்ற கட்சிகளுக்கு எதிரான எதிர்ப்பையும் கோபத்தையும் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது.
பின்னர் மூன்று முறை பிரதமராகப் பணியாற்றிய தஹால், நேபாள முதலாளித்துவம் மற்றும் பெருவணிக நலன்களின் தீவிர பாதுகாவலராகவும், சந்தை சார்பு சீர்திருத்தங்களை ஆதரிப்பவராகவும் நிரூபிக்கப்பட்டுள்ளார். நேபாள மாவோயிஸ்டுகள் முதலாளித்துவ ஆட்சியின் நம்பகமான முட்டுக்கட்டைகளாக மாற்றமடைவதானது முதலாளித்துவத்தையும் முதலாளித்துவத்தின் முற்போக்கு அடுக்குகள் என்று அழைக்கப்படுவதையும் அரவனைத்துக்கொள்வதை நியாயப்படுத்துகின்ற, ஸ்ராலினிச இரண்டு-கட்ட கோட்பாட்டின் பிற்போக்குப் பண்பின் மற்றொரு தெளிவான வெளிப்பாடாகும்.
அரசியல் கொந்தளிப்பின் அடிநிலையில் இருப்பது நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியே ஆகும். வணிக வட்டாரங்களில் விரக்தியையும் கவலைகளையும் வெளிப்படுத்திய ஏப்ரல் மாதம் வெளியான அன்னபூர்ணா எக்ஸ்பிரஸில் வெளிவந்த ஒரு கருத்து குறிப்பிட்டதாவது:
'பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது, குடிமக்கள் கூக்குரலிடுகிறார்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் பண கடதாசி துண்டுகளால் தங்கள் காதுகளை அடைத்துக் கொள்கிறார்கள். நாடு தற்போது எதிர்கொள்ளும் மந்தநிலை பல தசாப்தங்களாக ஊழல், திறமையின்மை மற்றும் தவறானவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதன் விளைவாகும்.'
USAID முடிவுக்கு வந்ததால் வெளிநாட்டு உதவி இல்லாமல் போவதை சுட்டிக்காட்டிய அது, 'எதிர்காலத்தில் சில கடினமான காலங்கள்' குறித்து எச்சரித்தது. நம்பிக்கையான வளர்ச்சியை காட்டும் புள்ளிவிவரங்கள் வெளிப்படுவது கேள்விக்குரியாக இருப்பதாக சுட்டிக்காட்டிய பிறகு, சுற்றுலா, விவசாயம் மற்றும் புலம்பெயர்ந்தோர் வருவாயை சார்ந்திருக்கும் பின்தங்கிய முதலாளித்துவப் பொருளாதாரத்தின் படத்தை அது வரைந்தது. சுமார் 67 சதவீத உழைப்புப்படை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பங்கிற்கும் குறைவாகவே பங்களிப்புசெய்கிறது.
இளைஞர்களுக்கு வாய்ப்புகள் இன்மைக்கும் பெருகிவரும் விரக்திக்கும், எந்தவொரு பாரம்பரியக் கட்சியிடமும் எந்த தீர்வும் கிடையாது என்பதில் ஆச்சரியமில்லை. 2022 ஜூனில் ஸ்தாபிக்கப்பட்டு, ஊழல்-எதிர்ப்பு அடிப்படையில் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்து, 20 நாடாளுமன்ற ஆசனங்களை வென்றுள்ள ஜனரஞ்சகவாத ரஷ்ரிய ஸ்வதந்த்ரதா கட்சி (ஆ.எஸ்.பி.) மட்டுமே போராட்டக்காரர்களுக்கு ஆதரவையோ அல்லது அனுதாபத்தையோ வெளிப்படுத்தியது.
முதலாளித்துவமே நேபாளத்தில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணமாகும், ஊழல் அல்ல. முதலாளித்துவமே, சமீபத்திய வாரங்களில் இந்தோனேசியாவில் வெடித்த இளைஞர்களின் வெகுஜன போராட்டங்கள் உட்பட, பிராந்தியம் முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் வெகுஜன அதிருப்தியையும் கோபத்தையும் தூண்டிவிட்டு வருகிறது.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிசத்திற்கான அரசியல் போராட்டத்தில் மட்டுமே ஒரே முற்போக்கான தீர்வு காணப்பட முடியும். இந்த முன்னோக்கிற்காக மட்டுமே போராடும் உலக சோசலிச வலைத் தளத்தையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் தொடர்பு கொள்ளுமாறு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.