முன்னோக்கு

அமெரிக்க நகரங்கள் மீதும் "உள்ளே இருக்கும் எதிரி" மீதும் ட்ரம்ப் யுத்தப் பிரகடனம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

யுத்த அமைச்சர்” பீட் ஹெக்செத், (இடது) மற்றும் நூற்றுக்கணக்கான ஜெனரல்கள் மற்றும் கடற்படை அட்மிரல்கள் குவாண்டிகோ கடற்படை தளத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 30, 2025 [AP Photo/Evan Vucci]

வாஷிங்டன் டி.சி.க்கு வெளியே ஒரு கடற்படைத் தளத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான இராணுவ ஜெனரல்கள் மற்றும் கடற்படை அட்மிரல்களுக்கு முன்பாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் “யுத்த அமைச்சர்” பீட் ஹெக்செத் ஆகியோர் அமெரிக்காவில் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ஒரு திட்டத்தை வகுத்துள்ளனர். அமெரிக்காவிற்குள் உள்ளே இருக்கும் தனது அரசியல் எதிரிகளை அடக்குவதில் இராணுவ உயர்மட்டத்தினர் ஒரு முக்கிய பாத்திரத்தை வகுப்பார்கள் என்றும், அவ்வாறு செய்ய விரும்பாத எந்த அதிகாரியும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ட்ரம்ப் இராணுவத் தளபதிகளிடம் கூறினார்.

குவாண்டிகோவில் இடம்பெற்ற காட்சி என்பது ஹிட்லரின் வாஃபென் எஸ்.எஸ் விசேட இராணுவப் படைப்பிரிவின் அமெரிக்க பதிப்பை உருவாக்கும் முயற்சியாகும். வெள்ளை மாளிகையின் துணைத் தலைமை அதிகாரி ஸ்டீபன் மில்லர், ட்ரம்பின் ஜோசப் கோயபல்ஸின் பாத்திரத்தை வகிக்கிறார் என்றால், யுத்த அமைச்சர் ஹெக்ஸெத் ஹிட்லரின் தலைமை இராணுவ ஆலோசகரான ரெய்ன்ஹார்ட் ஹெய்ட்ரிச்சின் பாத்திரத்தை ஏற்றுக்கொள்கிறார்.

அமெரிக்க நகரங்களுக்கு எதிராக இராணுவப் பலத்தை பரவலாகப் பயன்படுத்துவதை நியாயப்படுத்துவதே ட்ரம்பினுடைய உரையின் நோக்கமாக இருந்தது. “நாங்கள் இவற்றை ஒவ்வொன்றாக நேராக்கப் போகிறோம், இந்த அறையில் உள்ள சிலருக்கு இது ஒரு முக்கிய பகுதியாக இருக்கும். அதுவும் ஒரு போர்தான். இது உள் நாட்டிலிருந்து வரும் போர்,” என்று ட்ரம்ப் கூறினார்.

ட்ரம்ப் இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். கடந்த மாதம், அவர் “உள்நாட்டுக் கலவரங்களை அடக்க உதவும் வகையில், விரைவு தாக்குதல் படைக்கு பயிற்சி வழங்குவதற்கான நிர்வாக உத்தரவில்” கையெழுத்திட்டார். “இந்த அறையில் உள்ளவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாக இருக்கும், ஏனென்றால் இது உள்ளே இருந்து வரும் எதிரி, இது கட்டுப்பாட்டை மீறுவதற்கு முன்பு நாம் அதைக் கையாள வேண்டும்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

லொஸ் ஏஞ்சல்ஸுக்கு தேசிய காவல்படை மற்றும் கடற்படையினரை அனுப்பியதன் மூலம் ட்ரம்ப் ஏற்கனவே இந்தக் கொள்கையை செயல்படுத்தத் தொடங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து நாட்டின் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யை, குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அரை டசின் மாநிலங்களிலிருந்து அதிக ஆயுதம் ஏந்திய மத்திய கூட்டாட்சி முகவர்கள் மற்றும் தேசிய காவல்படை துருப்புக்கள் ஆக்கிரமித்துள்ளனர். கடந்த வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி, மத்திய கூட்டாட்சி படைகள் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டில் நிலை கொள்வதுக்கு உத்தரவிட்டார். தேசிய காவலர் துருப்புகள் இந்த வாரம் டென்னசியின் மெம்பிஸில் நிலைநிறுத்தப்பட உள்ளன. மேலும், சிக்காகோ அடுத்ததாக இருக்கும் என்று தனது இராணுவக் கூட்டத்தில் கூறிய ட்ரம்ப், அதே நேரத்தில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் நியூ யோர்க்கை எதிர்கால இலக்குகளாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக உறைய வைக்கும் ஒரு கருத்தில், ட்ரம்ப் ஹெக்செத்தை மேற்கோள் காட்டுகையில், “இந்த நகரங்களில் சிலவற்றை நமது இராணுவத்திற்கான பயிற்சி மைதானங்களாகப் பயன்படுத்த வேண்டும் என்று நான் பீட் ஹெக்செத்திடம் சொன்னேன் - தேசிய காவல்படை, ஆனால் இராணுவம்” என்றார். இந்தப் “பயிற்சி” எதைக் கொண்டிருக்கும்? மக்கள் போராட்டங்கள் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை முறையாக அழித்தொழிப்பதை கொண்டிருக்கும்.

தேசியப் பாதுகாப்புப் படைக்கும் மேலதிகமாக இராணுவத்தின் பாத்திரத்தை வலியுறுத்தியதன் மூலமாக, ட்ரம்ப் அமெரிக்க நகரங்களில் பரவலாக கடமையில் உள்ள இராணுவத் துருப்புக்களை நிலைநிறுத்துவது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை தெளிவுபடுத்தினார், இது போஸ் கொமிடாட்டஸ் சட்டத்தை (Posse Comitatus சட்டமானது, குடிமக்கள் அரசாங்கத்தின் விவகாரங்கள், நீதி நிர்வாகம் அல்லது எந்தவொரு நீதித்துறை நடவடிக்கைகளிலும் இராணுவம் தலையிடுவதைத் தடைசெய்கிறது) பகிரங்கமாக மீறுவதாகும்.

ட்ரம்ப்பின் வார்த்தையை நாம் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். “உள்ளே இருக்கும் எதிரி” என்ற அவரது அழைப்பு, அமெரிக்க மக்களுக்கு எதிரான, எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு யுத்தப் பிரகடனமாகும். கடந்த செப்டம்பர் 19 அன்று, வெளியிட்ட ஒரு அறிக்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, “கட்டவிழ்ந்து வருவது இராணுவம், பொலிஸ், துணைப்படை படைகள் மற்றும் பாசிசக் கும்பல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ஒரு உந்துதல் என்பதைக் காட்டிலும் குறைவானது என்று கருதுபவர்கள், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் அனைத்து நம்பிக்கைகளையும் ஒதுக்கி வைக்க வேண்டியது அவசியமாகும்” என்று எழுதியது.

வரவிருக்கும் அரசாங்க பணிநிறுத்த முடக்கத்துடன், இராணுவ ஜெனரல்களுடனான ட்ரம்ப்பின் மாநாடு தற்செயலாக இடம்பெற்றது அல்ல. அமெரிக்க அரசை பாரியளவில் மறு கட்டமைப்பு செய்வதற்கும் தொழிலாள வர்க்கத்தின் மீது முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு ஒரு தாக்குதலுக்கு தயாரிப்பு செய்வதற்கும் இந்த பணிநிறுத்தத்தை ஒரு பொறிமுறையாகப் பயன்படுத்த ட்ரம்ப் உத்தேசித்துள்ளார். அனைத்திற்கும் மேலாக, அடுத்த ஆண்டில் இடைக்கால தேர்தல்கள் நடத்தப்பட்டாலும், அவை அடக்குமுறை மற்றும் இராணுவமயமாக்கல் நிலைமைகளின் கீழ் நடைபெறும். அமெரிக்கா உண்மையில் நடைமுறையில் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட நாடாக இருக்கும்.

ட்ரம்பின் கருத்துக்களுக்கு முன்னதாக, யுத்த அமைச்சர் ஹெக்ஸெத் வெளியிட்ட கருத்துக்களில், ட்ரம்பின் தனிப்பட்ட கட்டுப்பாட்டிற்கும், நிர்வாகத்தின் பாசிச திட்டத்திற்கும் ஏற்ப, இராணுவத்தை முற்றிலும் கீழ்ப்படியச் செய்வதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான உத்தரவுகளை வெளியிட்டார். சில உத்தரவுகள், அமெரிக்க இராணுவப் படைகள் பொதுமக்களைப் படுகொலை செய்வதற்கும், பிற போர்க்குற்றங்களைச் செய்வதற்கும் எந்தவிதமான பின்விளைவுகளுக்கும் பயப்படாமல், குற்றவியல் வழக்குத் தொடரப்படாமல், சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. பெண்கள் அல்லது சிறுபான்மை இராணுவத்தினர் தங்கள் தளபதிகளுக்கு எதிராக பாலியல் அல்லது இன துஷ்பிரயோகம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை திறம்பட சாத்தியமற்றதாக ஆக்குவதற்கும் ஹெக்செத் முன்மொழிந்தார்.

ட்ரம்ப் மற்றும் ஹெக்செத்தின் கருத்துக்களில் இனவெறியின் ஒரு தெளிவான கூறு இருந்தது. ஹெக்செத் “விழித்தெழுந்த குப்பைகளுக்கு” எதிராக கடுமையாக சாடியதுடன், “நாங்கள் இந்த குப்பைகளை முடித்துவிட்டோம்” என்று அறிவித்தார். ஹெக்செத்தின் உத்தரவுகளில் சிறுபான்மை படையினர்களை விரட்டுவதை நோக்கமாகக் கொண்ட பல விஷயங்கள் அடங்கும். அதாவது, தாடியைத் தடை செய்வது, இது கருப்பின படையினர்களையும் மத்திய கிழக்கு வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும் விகிதாசாரமாகப் பாதிக்கும்.

பெருமளவில் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்கும் அதிகளவிலான ஆபிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் ஹிஸ்பானிக் மக்கள்தொகை கொண்ட பெரிய நகரங்களைப் பற்றிய தனது குறிப்புகளில், ட்ரம்ப் “தொழில்கள்” என்று தான் கூறியதை - அதாவது “தொழில் குற்றவாளிகள்” என்று கண்டனம் செய்தார். மேலும் அவர்; “நாங்கள் அவர்களை சிறந்த பள்ளிகளுக்கு அனுப்பலாம், ஆனால், அவர்களால் மனதளவில் அதை அணுக முடியாது... அவர்கள் கடுமையான குற்றவாளிகள். எனவே எனக்குத் தெரியாது, ஒருவேளை அவர்கள் அப்படிப் பிறந்திருக்கலாம். சிலருக்கு நான் அப்படிச் சொல்வது பிடிக்காது, ஆனால் ஒருவேளை அவர்கள் அப்படித்தான் இருந்திருக்கலாம்” என்று குறிப்பிட்டார்.

ஒரு கட்டத்தில், அணு ஆயுதப் போரின் சாத்தியக்கூறை எழுப்பிய ட்ரம்ப், “நான் அதை N-சொல் என்று அழைக்கிறேன். இரண்டு N-சொற்கள் உள்ளன, இரண்டையும் நீங்கள் பயன்படுத்த முடியாது” என்று கூறினார். அவர், வெறும் எழுத்தறிவு இல்லாத மொழியில், “நீங்கள் அதைப் பயன்படுத்தினால், வேறு எவரையும் விட எங்களிடம் அதிகம் உள்ளது. எங்களிடம் சிறந்தது. எங்களிடம் புதியது உள்ளது” என்று கூறினார்.

ட்ரம்பின் உரையின் முன்னெப்போதும் இல்லாத ஒரு அம்சம் என்னவென்றால், அதன் வெளிப்படையான கட்சிவாதமாகும். கூடியிருந்த இராணுவ ஜெனரல்கள் மற்றும் கடற்படை அட்மிரல்களிடம் அமெரிக்காவின் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியாக அல்ல, மாறாக தனது உள்நாட்டு எதிரிகளுக்கு எதிரான, உள்நாட்டுப் போரை முன்னெடுப்பதில் அவர்களின் விசுவாசத்தை நாடுகின்ற ஒரு அரசியல் கட்சியின் தலைவராக ட்ரம்ப் உரையாற்றினார்.

ட்ரம்ப் தனது சொந்த தேர்தல் வெற்றிகளைப் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு, மக்கள் வாக்குகளைப் பெற்ற “சிவப்பு” மாவட்டங்களை ஜனநாயகக் கட்சி வைத்திருந்த நீல மாவட்டங்களுடன் வேறுபடுத்தி, அவரது வார்த்தைகளில், “துண்டுகளாகவும் சிதறடிக்கப்பட்ட பகுதிகளாகவும்” குறைத்தார். (உண்மையில், அமெரிக்க மக்களில் பெரும்பான்மையினரின் தாயகமாக இருக்கும் பெருநகரங்கள்).

ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் தொடங்கி, அரசியல் எதிர்ப்பின் இந்தப் பகுதிகளை அகற்றுவதே இராணுவத்தை நிலைநிறுத்துவதன் நோக்கம் என்று ட்ரம்ப் தெளிவுபடுத்தினார். ஒரு பிரிவின் அரசியல் தலைவராக, மற்றொரு பிரிவின் மீது தனது வெற்றியைப் பாதுகாக்க உதவுமாறு இராணுவ ஜெனரல்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம், எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும் இராணுவத்திடம் இந்த வழியில் உரையாற்றியதில்லை.

இது மில்லர், பிற ஜனநாயகக் கட்சியினரை “உள்நாட்டு தீவிரவாதிகள்” என்று கண்டிப்பதோடு இணைந்து, ஜனநாயகக் கட்சியின் தொடர்ச்சியான மௌனத்தை இன்னும் அசாதாரணமாக்குகிறது. மக்களை எச்சரிப்பதற்கு அல்லது எதிர்ப்பை அணிதிரட்டுவதற்குப் பதிலாக, ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க நகரங்கள் மீது ஆயுதப் படைகளை கட்டவிழ்த்து விடுவதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் குறித்து ஏறத்தாழ மௌனமாகவே உள்ளனர்.

இதற்கு மாறாக, ஜனநாயகக் கட்சி ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை முன்னெடுத்துச் செல்வதிலும், சீனாவுடனான மோதலைத் தயாரிப்பதிலும், அமெரிக்க ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் – நீதிமன்றங்கள், இராணுவம், உளவுத்துறை – எப்படியாவது ட்ரம்பை கட்டுப்படுத்துவார்கள் என்ற மாயையை ஊக்குவிப்பதிலும் உறுதியாக உள்ளது. சக் ஷூமர் மற்றும் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் ட்ரம்பின் அச்சுறுத்தல்களை புறக்கணித்துள்ளனர்.

கட்சியிலுள்ள “இடதுசாரி” என்று கூறப்படுபவர்களான அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் பேர்னி சாண்டர்ஸ் ஆகியோர் மௌனமாக உள்ளனர். இராணுவ ஜெனரல்களின் சந்திப்பு குறித்து இருவரும் எதுவும் கூறவில்லை. அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளுடன் தொடர்புடைய முக்கிய வெளியீடான ஜாகோபின் இதழும், அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகள் மீதான முன்னெப்போதும் இல்லாத தாக்குதல் பற்றி முடிந்தவரை குறைவாகவே எழுதிவரும் அவர்களின் கட்டுரை கொள்கைக்கு ஏற்ப எதையும் எழுதவில்லை.

ட்ரம்பின் திட்டங்கள் குறித்த எந்தவொரு தீவிர அம்பலப்படுத்தலும் போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக ஏற்கனவே எழுச்சி பெற்று வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய இயக்கத்தை ஊக்குவிக்கும் என்று ஜனநாயகக் கட்சியினர் அஞ்சுகின்றனர். இந்த வழியில், ஜனநாயகக் கட்சியும் உடந்தையாக இருந்து, சர்வாதிகார ஆட்சியை பலப்படுத்துவதில் தனக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை வகித்து வருகிறது.

கடந்த மாத நிகழ்வுகள் ஒரு திட்டவட்டமான வர்க்க தர்க்கத்தைப் பின்பற்றுகின்றன. இந்த மாத தொடக்கத்தில் தொழில்நுட்ப தன்னலக்குழுக்களுடனான சந்திப்பு, “தீவிர இடது” மீதான இடைவிடாத கண்டனங்கள், அமெரிக்க நகரங்களில் தேசிய காவல்படை துருப்புக்களை நிலைநிறுத்தியது, சார்லி கிர்க் கொலை தொடர்பாக கொந்தளித்த பாசிச வெறித்தனம், போர்ட்லாந்தை இராணுவரீதியில் ஆக்கிரமிப்பதற்கான அச்சுறுத்தல், இராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் ட்ரம்ப் ஆற்றிய உரை மற்றும் அரசாங்கத்தை முடக்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டமிடப்பட்ட பாரிய பணிநீக்கங்கள் - இவை அனைத்தும் ஒருங்கிணைந்த திட்டத்தின் ஒரு பாகமாக உள்ளன.

கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் ட்ரம்பின் பாசிச பாதையை மட்டுமல்ல, மாறாக ஜனநாயகக் கட்சியின் இயலாமை மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதிற்கு, ஆளும் வர்க்கத்திற்குள் எந்தவொரு ஆதரவும் இல்லாததையும் எடுத்துக்காட்டுகிறது. சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை தற்போதுள்ள நிறுவனங்களின் கட்டமைப்பிற்குள் நடத்த முடியாது.

சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்ட, “ட்ரம்பின் பாசிச சதித் திட்டத்தை எதிர்த்து எவ்வாறு போராடுவது: ஒரு சோசலிச மூலோபாயம்” என்ற அதன் செப்டம்பர் 19 அறிக்கையில், சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு இயக்கத்திற்கான அமைப்பு, வேலைத்திட்டம் மற்றும் மூலோபாயத்தை விரிவாகக் கூறியது. அது, “தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி, ட்ரம்ப் ஆட்சிக்கு எதிராக அதன் பரந்த தொழில்துறை மற்றும் பொருளாதார சக்தியை அணிதிரட்டக்கூடிய ஒரு புதிய அமைப்பு வடிவத்தை” கட்டியெழுப்புவதற்கு அழைப்பு விடுத்தது.

சோசலிச சமத்துவக் கட்சியால் முன்மொழியப்பட்ட இந்த புதிய அமைப்பு சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கொண்டுள்ளது. ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பை ஒழுங்கமைக்க அவை ஒவ்வொரு தொழிற்சாலையிலும், பணியிடத்திலும், பள்ளியிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் ஸ்தாபிக்கப்பட வேண்டும். இந்தக் குழுக்கள், ட்ரம்பின் பாசிச அரசாங்கம், இதற்கு ஜனநாயகக் கட்சியினரின் உடந்தை மற்றும் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான பரந்த தாக்குதலுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் (குறிப்பாக, தொழில்துறை, தளவாடங்கள், போக்குவரத்து, உணவகங்கள் மற்றும் துரித உணவுகள், சமூக சேவைகள், சட்ட பாதுகாப்பு, கல்வி, கலை மற்றும் கலாச்சாரம், பொழுதுபோக்கு, மருத்துவம், சுகாதாரப் பாதுகாப்பு, அறிவியல், கணினி தொழில்நுட்பம், நிரலாக்கம் மற்றும் பிற உயர்சிறப்பு வாய்ந்த தொழில்கள்) மாணவர் இளைஞர்களையும் ஒன்றிணைத்து, எதிர்ப்பின் மையங்களாக மாற்ற வேண்டும்.

“முதலாளித்துவ தன்னலக்குழு தொழிலாள வர்க்கத்தின் மீது போர்ப் பிரகடனம் செய்துள்ளது,” என்று சோசலிச சமத்துவக் கட்சி எழுதியது. இதற்கு “முதலாளித்துவத்தின் மீது தொழிலாள வர்க்கம் போர்ப் பிரகடனம் செய்வதே அவசியமான பதிலாகும். இதன் விளைவாக, சமூகத்தில் சோசலிச மறு ஒழுங்கமைப்பு ஏற்பட வேண்டும்.” இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டம் ஒரு சோசலிச தலைமையைக் கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது. இந்த முன்னோக்குடன் உடன்படும் அனைத்து தொழிலாளர்களையும் இளைஞர்களையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading