இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
செப்டம்பர் 8 அன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது வழக்கமான அமர்வில் உரையாற்றிய இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், 'இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் போன்ற நாட்டின் மீது திணிக்கப்படும் எந்தவொரு வெளிப்புற பொறிமுறையையும் கொழும்பு எதிர்க்கிறது' என்று அறிவித்தார்.
இலங்கை குறித்த பேரவையின் சமீபத்திய 16 பக்க அறிக்கையில் உள்ள ஒரு முக்கிய பரிந்துரைக்கே ஹேரத் இவ்வாறு பதிலளித்தார். ஆகஸ்ட் 12 அன்று, வெளியிடப்பட்ட இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஒரு 'சர்வதேச பொறிமுறையை' நிறுவ வேண்டும் என்று கோருகிறது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், பதவியேற்ற முதல் வருடத்திற்குள் மனித உரிமைகள் மற்றும் தேசிய நல்லிணக்கத்தில் 'முன்னேற்றம்' அடைந்துள்ளதாகக் கூறி, ஹேரத் இந்தக் கோரிக்கையை நிராகரித்தார். உண்மையில், சீர்திருத்தங்கள் என்று அழைக்கப்படுபவை வெறும் அலங்காரம் மட்டுமே.
செப்டம்பர் 10 அன்று, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, வடக்கு மசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியத்தையும் உள்ளடக்கிய இலங்கைக்கான அனுசரணையாளர் குழு, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முறையாக தாக்கல் செய்தது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து அறிக்கையிடுவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் (OHCHR) அலுவலகத்தின் அதிகாரத்தை நீடிப்பதற்கு இது முயல்கிறது. எதிர்கால யு.என்.எச்ஆர்.சி. அமர்வுகளில் வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வ புதுப்பிப்புகளையும், இறுதியில் பேரவையின் 66வது அமர்வில் ஒரு பல்பூரண அறிக்கை சமர்ப்பிப்பதையும் இது கோருகிறது.
ஆகஸ்ட் 12 அறிக்கை, இலங்கையில் 2025 ஜூலை வரையிலான மனித உரிமைகள் நிலைமையை மதிப்பாய்வு செய்கிறது. இது முந்தைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் கிட்டத்தட்ட முழு முதல் ஆண்டையும் உள்ளடக்கியதாகும்.
இந்த அறிக்கை, ஜூன் 23 முதல் 26 வரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் இலங்கை பயணத்தைத் தொடர்ந்து வெளிவருகிறது. தனது பயணத்தின் போது, டர்க் ஜனாதிபதி திசாநாயக மற்றும் பிற அரசியல் தலைவர்களைச் சந்தித்ததுடன் போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்குச் சென்று அங்கு அவர் தமிழ் கட்சித் தலைவர்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்களுடன் பேசினார்.
முன்னேற்றம் பற்றிய ஹேரத்தின் கூற்றுகளுக்கு மாறாக, திசாநாயக நிர்வாகத்தின் கீழ் பரவலான மனித உரிமை மீறல்களை யு.என்.எச்.ஆர்.சி. அறிக்கை ஆவணப்படுத்துகிறது. அவற்றில் அடங்குவன:
- குறிப்பாக தடுப்புக்காவல் நிலையங்களில் சித்திரவதை மற்றும் மோசமாக நடத்துவதை வழக்கமாக கொண்டிருத்தல்.
- சித்திரவதை அல்லது மோசமாக நடத்தப்படுவதன் காரணமாகக் ஏற்பட்டதாகக் கூறப்படும் பல தடுப்புக்காவல் மரணங்கள். அரசாங்க புள்ளிவிபரங்களின்படி, 2024 முதல் 13 தடுப்புக்காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
- தடுப்புக்காவல் மரணங்கள், சிறை மரணங்கள் மற்றும் போதைப்பொருள் சோதனைகளின் போது எதேச்சதிகாரமான கைதுகள் குறித்து விளைபயனுள்ள விசாரணைகளை நடத்தாமை.
- எதேச்சதிகாரமான கைதுகள் மற்றும் குற்றச்சாட்டு அல்லது விசாரணை இல்லாமல் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்படுவதற்கு வழிவகும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு. 23 மே 2025 நிலவரப்படி, 49 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். (2024 ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது ஜே.வி.பி./தே.ம.ச. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாக பொய்யாகக் கூறின.)
- பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் ஒருங்கிணைந்த விளைவால் உருவாக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு சட்ட கட்டமைப்பு, பேச்சு மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை கட்டுப்படுத்துதல்.
- நினைவு நிகழ்வுகள் அல்லது போராட்டங்களில் பங்கேற்றமைக்காக, பிரதானமாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட கைதுகள்.
இந்த அறிக்கை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் கண்காணிப்பு, மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் சம்பவங்களையும், இதில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் குறிவைக்கப்பட்டதையும் எடுத்துக்காட்டுகிறது. இராணுவம் மற்றும் அரசு நிறுவனங்களுடனான நீண்டகால காணி விவகாரங்கள் தீர்க்கப்படாமல் உள்ளன.
இடைக்கால நீதி என்று அழைக்கப்படுவதை செயல்படுத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தில் இணைவது உட்பட இலங்கை அரசாங்கமும் 'சர்வதேச சமூகமும்' - அதாவது ஏகாதிபத்திய சக்திகளும் - பரந்த அளவிலான சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஐ.நா. உயர் ஸ்தானிகர் அழைப்பு விடுத்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் மீதான தற்காலிகத் தடை மற்றும் நிழ்நிலை பாதுகாப்புச் சட்டம் போன்ற ஏனைய அடக்குமுறைச் சட்டங்களை ரத்து செய்தல்; பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீட்டைக் குறைத்தல் மற்றும் காணி விவகாரங்களில் நியாயமான தீர்வு வழங்குதலும் பிரேரிக்கப்பட்டுள்ள ஏனைய நடவடிக்கைகளில் அடங்கும். உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் தொடர்ச்சியான ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக கண்காணிப்பு, சட்ட சீர்திருத்தங்கள், இலக்கு வைக்கப்பட்ட தடைகள் மற்றும் வழக்குத் தொடருதல்களையும் உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார்.
2011 முதல், இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த அமெரிக்க ஆதரவுடனான யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானங்கள், ஒடுக்கப்பட்ட தமிழர்கள், முஸ்லிம்கள் அல்லது தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மீதான உண்மையான அக்கறையால் நிறைவேற்றப்படவில்லை. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களை ஆதரித்தன.
2009 மே மாதம் முடிவடைந்த போரின் இறுதி மாதங்களில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், பிரதானமாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சீனாவிலிருந்து தூர விலக்க அழுத்தம் கொடுக்கும் ஒரு புவிசார் அரசியல் சூழ்ச்சியாக.போர்க்குற்றங்கள் குறித்த கவலைகளை எழுப்பத் தொடங்கின
அது தோல்வியடைந்த போது, 2015 ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷவை மைத்ரிபால சிறிசேனவைக் கொண்டு பதிலீடு செய்வதற்காக, இந்திய ஆதரவுடன் ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை அமெரிக்கா ஆதரித்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து, சிறிசேனவின் அரசாங்கம், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை வாஷிங்டனை நோக்கி மறுசீரமைத்தது. தற்போதைய ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் இந்த அமெரிக்க சார்பு நோக்குநிலையைத் தொடர்வதுடன் சீனாவிற்கு எதிரான அமெரிக்க-இந்திய போர் உந்துதலில் இலங்கையின் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துகிறது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்கா யு.என்.எச்.ஆர்.சி.யில் இருந்து விலகியிருந்தாலும், இலங்கை மீதான அழுத்தம் ஏனைய பெரும் வல்லரசுகள் ஊடாகத் தொடர்கிறது. இந்த தோரணைக்கும் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்துவது அல்லது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
சர்வதேச பொறுப்புக்கூறலுக்கான ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் எதிர்ப்பு, ஏகாதிபத்திய தலையீட்டிற்கான எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல.
அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவி வெளியுறவுச் செயலாளர் டொனால்ட் லூ உட்பட சிரேஷ்ட அமெரிக்க மற்றும் இந்திய அதிகாரிகளை ஜனாதிபதி திசாநாயக கொழும்புக்கு வரவேற்றுள்ளார். ஏப்ரல் மாதம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்பு விஜயத்தின் போது, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் இந்தியாவுடன் முதல் முறையாக பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
சர்வதேச பொறிமுறையை நிராகரிப்பதற்கான உண்மையான காரணம் ஜே.வி.பி.யின் சிங்கள பேரினவாத அரசியலில் வேரூன்றியதாகும்.
சிங்கள மேலாதிக்கத்தின் இரக்கமற்ற ஆதரவாளரான ஜே.வி.பி., ஆரம்பத்தில் இருந்தே புலிகளுக்கு எதிரான கொழும்பின் இனவாதப் போரை ஆதரித்து, கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலப் போரின் போது இராணுவத்திற்கு அரசியல் ரீதியாக ஊக்கமளித்தது.
போரை நடத்திய மற்றும் அரசியல் படுகொலை உட்பட அவற்றின் இராணுவவாதம் மற்றும் தமிழர் விரோதப் பேரினவாதத்தின் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான அதன் சட்டத்திற்குப் புறம்பான வன்முறைக்கு பேர்போன அரசாங்கங்களில் ஜே.வி.பி. பங்கேற்றுள்ளது.
முந்தைய ஆட்சிகளைப் போலவே, ஜே.வி.பி.யும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள இராணுவத்தை பெரிதும் நம்பியுள்ளதுடன் போர்க்குற்றங்களை தொடர்ந்து மறுக்கிறது. கடந்த ஆண்டு தேர்தல்களின் போது அது இனவாதப் போருக்கு தலைமை தாங்கிய மேஜர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய முப்படைகளின் கூட்டு என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பை உருவாக்கியது.
போரின் இறுதி வாரங்களில் சுமார் 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.வின் முந்தைய விசாரணை மதிப்பிட்டுள்ளது. அவர்களில் பலர் கண்மூடித்தனமான இராணுவத் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர். சரணடைந்த பலர் காணாமல் ஆக்கப்பட்டனர், வெள்ளைக் கொடிகளை அசைத்து வந்த புலிகளின் தலைவர்கள் உட்பட ஏனையோரும் கொல்லப்பட்டனர்.
முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள முயன்ற வெளியுறவு அமைச்சர் ஹேரத், திசாநாயக நிர்வாகத்தின் தொடர்ச்சியான அலங்கார நடவடிக்கைகளை 'முன்னேற்றத்திற்கு' சான்றாகக் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய அல்லது மாற்றுவதற்கு முன்மொழிய ஒரு குழுவை அமைத்தல்; நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான திட்டங்கள்; தமிழ் தோட்டத் தொழிலாளர்களை ஒரு தனித்துவமான சமூகமாக அங்கீகரித்தல் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் உட்பட உள்நாட்டு நல்லிணக்க வழிமுறைகளை 'வலுப்படுத்துதல்' ஆகியவை இந்த அலங்காரங்களில் அடங்கும்.
இவை முந்தைய ஆட்சிகளில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட வாக்குறுதிகள் ஆகும். எடுத்துக்காட்டாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றி விசாரிக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் 2018 இல் நிறுவப்பட்டது. இது சில தரவுகளைச் சேகரித்த போதிலும், எந்த அர்த்தமுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த கால அரசாங்கங்கள் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முன்மொழிந்தன. இந்த நடவடிக்கையை நீதி கோரும் தமிழ் சமூகங்கள் இலஞ்சம் கொடுக்க வேண்டாம் என நிராகரித்தன.
தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், தங்கள் ஏகாதிபத்திய ஆதரவு திட்ட நிரலை மேலும் விரிவுபடுத்துவதற்காக யு.என்.எச்.ஆர்.சி. அறிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு, நீதி வழங்க கொழும்பிற்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
ஆகஸ்ட் 4 அன்று, அறிக்கை வெளியிடப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் நூறுக்கும் மேற்பட்ட சிவில் சமூகக் குழுக்களின் கூட்டணி, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு யு.என்.எச்.ஆர்.சி.ஐ வலியுறுத்தியது. கையொப்பமிட்டவர்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO), ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி (DTNA), தமிழ் தேசிய பசுமை இயக்கம் மற்றும் பிறவும் அடங்கும்.
செப்டம்பர் 9 அன்று, இலங்கை தமிழ் அரசு கட்சியானது பயங்கரவாத தடைச் சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாட்டைக் கண்டித்தது. பாதிக்கப்பட்டவர்கள் 'சர்வதேச உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை' என்று தமிழரசுக் கட்சித் தலைவர்கள் கூறியதாக கொழும்பின் டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், அதிகாரப் பகிர்வு, சமத்துவம் மற்றும் முன்கூட்டியே மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான இந்தியாவின் ஆதரவை தமிழரசுக் கட்சி வரவேற்றது.
இந்தக் கட்சிகள் உண்மையான ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடவில்லை. மாறாக மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வு வழங்க ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து வெளிப்புற ஆதரவைப் பெற முயல்கின்றன. உழைக்கும் மக்களை பேரழிவிற்கு உட்படுத்திய அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய ஆதரவு சிக்கன நடவடிக்கை திட்ட நிரலுடன் அவர்கள் முழுமையாக இணைந்துள்ளனர்.
தமிழ் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் மூலமாகவோ அல்லது மனித உரிமைகளை மீறுபவர்களான இலங்கை அரசாங்கத்திடமோ அல்லது ஏகாதிபத்திய சக்திகளிடம் முறையிடுவதன் மூலமாகவோ தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. இந்தியாவில் மோடி ஆட்சி, சிவில் உரிமைகள் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாக, இன மற்றும் மத சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கி வருகிறது.
அதனால்தான், சோசலிச சமத்துவக் கட்சி, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை இனவாத எல்லைகளுக்கு அப்பால் ஒன்றிணைத்து, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடுகிறது.
இந்த இயக்கம், தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து, ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிசக் குடியரசை நிறுவுவதற்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இந்தப் பாதையின் மூலம் மட்டுமே தமிழ் மக்கள், ஏனைய ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் முழு தொழிலாள வர்க்கத்திற்கும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த முடியும்.
மேலும் படிக்க
- வட இலங்கையில் காற்றாலை திட்டத்திற்கு எதிரான வெகுஜனப் போராட்டத்தின் மீது பொலிஸ் தாக்குதல்
- இலங்கை பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் முல்லைத்தீவு பத்திரிகையாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்
- முல்லைத்தீவில் தமிழ் இளைஞனின் மரணத்திற்கு இலங்கை இராணுவமே பொறுப்பு என சந்தேகிக்கப்படுகிறது
- வட இலங்கையின் செம்மணியில் புதிய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது