வட இலங்கையில் காற்றாலை திட்டத்திற்கு எதிரான வெகுஜனப் போராட்டத்தின் மீது பொலிஸ் தாக்குதல்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் மீது பொலிஸ் தாக்குதல் நடத்தியதை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம். [Photo: Facebook/Wasantha Mudalige]

இலங்கையில் போரால் நாசமாக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் செப்டெம்பர் 26 அன்று காற்றாலை-மின்சாரத் திட்டத்தை எதிர்த்து இரவுவேளையில் நடத்திய அமைதிப் போராட்டத்தின் மீது பொலிஸ் நடத்திய கொடூரத் தாக்குதலைக் கண்டித்து, செப்ரம்பர் 29 அன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மீனவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களும் சேர்ந்து பாரிய ஒரு முடக்கல் போராட்டத்தை நடத்தினர்.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர்கள், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அனுப்புவதற்காக மன்னார் மாவட்ட அரச அதிபரிடம் ஒரு கடிதத்தை சமர்பித்தனர். அந்தக் கடிதம் பொலிஸ் தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்த அழைப்பு விடுத்ததோடு அரசாங்கம் காற்றாலை-மின்சக்தி வேலைத்திட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையையும் மீண்டும் வலியுறுத்தியது. அந்த மக்கள், சுற்றுப்புறச் சூழல் மற்றும் தமது வாழ்க்கை நிலைமைகள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு காரணமாக இந்த வேலைத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதம், ஜனாதிபதி திசாநாயக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர்களைச் சந்தித்து, இந்த வேலைத்திட்டத்தால் உருவான சுற்றுப்புறச் சூழல் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை திட்டம் காலதாமதப்படுத்தப்படும் என உறுதியளித்தார்.

எவ்வாறாயினும், செப்ரம்பர் 26 மாலை வேளையில் காற்றாடிகள் கட்டுமானத்தளத்திற்கு கொண்டு செல்லப்படுவதை மக்கள் கண்டனர். இரவு 10 மணியளவில் அமைதியான முறையில் நூற்றுக்கணக்காண போராட்டகாரர்கள் ஒன்று கூடி, வீதி அமர்வுப் போராட்டத்தை நடத்தி, பொருட்கள் மன்னாருக்குள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க முயன்றனர்.

இந்த வேலைத்திட்டத்தை நிறுத்துவதாக திசாநாயக வாக்குறுதியளித்த போதிலும், அவர் தங்களது கோரிக்கையை காட்டிக்கொடுத்துவிட்டதாக குற்றம் சாட்டிய போரட்டகாரர்கள் உரத்து கோஷமிட்டு பொலிசாரோடு வாக்குவாத்தில் ஈடுபட்டுனர். அப்போது, அவப்பேறு பெற்ற விசேட அதிரடிப் படை உறுப்பினர்கள் உட்பட நுாற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய பொலிஸ் அதிகாரிகள் போராட்டக்காரர்களை பொல்லுகள் மற்றும் கேடயங்களாலும் கொடூரமாக தாக்கினர். பெண்கள் உட்பட பலர் இந்தத் தாக்குதலால் காயமடைந்து மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டனர்.

மறுநாள், இந்தத் தாக்குதலில் காயமடைந்த மூவர் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவரும் கிறிஸ்தவ பாதிரியாருமான மார்கஸ் உட்பட ஒன்பது போராட்டக்காரர்களுக்கு எதிராக மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸ் வழக்கு தாக்கல் செய்தது.

சமீபத்திய இந்த பொலிஸ் தாக்குதல், பல்வேறு விதத்தில் பொலிஸ் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட மன்னார் மாவட்ட மக்கள், கிட்டத்தட்ட இரண்டு மாதகாலமாக நடத்திய போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்பட்டது ஆகும்.

மன்னாரில் காற்றாலையை எதிர்க்கும் போராட்டக்காரர்களை சுற்றிவளைத்துள்ள பொலிசார். [Photo: Facebook/Roobam Media Groups]

மன்னார் நகரமானது, பிரதான நிலத்தில் இருந்து கடல் பாலம் ஊடாக இணைக்கின்ற 130 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு ஆகும். 70,000 குடியிருப்பாளர்களில் கணிசமானளவு முஸ்லீம் சமூகத்தினருடன் தழிழ் மக்களே பெரும்பான்மையானர்வர்கள் ஆவார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் கொடூரமான இனவாத யுத்தத்தின் போது இந்த மக்கள் இரக்கமற்ற இராணுவ ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். 29 குழந்தைகள் உட்பட் சுமார் 346 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடங்கிய மிகப் பெரிய மனிதப் புதைகுழி ஒன்று மன்னார் நகரில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையானது (இ.மி.ச.), மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் இருந்து சுற்றாடல் பாதிப்பு மதிப்பீட்டைப் பெற்ற பின்னர், 2019 மார்ச் மாதத்தில் உலக வங்கியின் உதிவியுடன் முதலாவது  காற்றாலை மின்சாரத் திட்டத்தை தொடங்கியது.

எவ்வாறாயினும், இந்த காற்றாலை செயற்திட்டமானது, மீன்களின் தொகையில் வீழ்ச்சி, அதன் கட்டுமானங்களால் மழைநீர் கடலுக்கு வழிந்தோடுவதில் தடங்கல் மற்றும் இடம்பெயர்வுப் பறவைகளின் வழியிடத்தில் குழப்பங்களை தோற்றுவிப்பதற்கும் இட்டுச்சென்றது. மீன்பிடியை தமது வாழ்வாதாரமாக நம்பியுள்ள பல மக்கள், தாம் பிடிக்கும் மீனின் அளவு பெருமளவில் குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த வேலைத்திட்டத்தின் இரண்டாவது பாகம் முன்மொழியப்பட்டபோது, மத்திய சுற்றாடல் அதிகார சபை ஒரு மதிப்பீட்டைச் சமர்ப்பித்தது. இதில் விஷேடமாக இந்தப் பிரச்சினைகள் தொடர்பான கரிசனைகள் எழுப்பப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க அரசாங்கம், இந்த வேலைத்திட்டத்தை அமைப்பதற்கு இந்திய கோடீஸ்வர முதலீட்டாளரான கௌதம் அதானிக்கு சொந்தமான பசுமை எரிசக்தி நிறுவனத்துடன் ஒரு உடன்படிக்கையை கைச்சாத்திட்டது. அதன் சுற்றாடல் பாதிப்பு மதிப்பீட்டில், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதி சான்றிதலைப் பெறாமலேயே உடன்பாடு கைச்சாத்திடப்பட்டதால் அது சர்ச்சையை உண்டாக்கியது.

கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, திசாநாயக்க மற்றும் அவரது மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சகதியும் (ஜே.வி.பி./தே.ம.ச.) சுற்றாடல் பாதிப்பை மேற்கோள் காட்டியும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு இதைக் கொடுப்பதால் அது இலங்கையின் ”வலுச்சக்தி இறைமையை கீழறுக்கும்” என வாதாடி, வாயளவில் இந்த வேலைத்திட்டத்தை எதிர்த்தது. ஜே.வி.பி.யின் நீண்டகால இந்திய-விரோத பேரினவாதத்துடன் பிணைக்கப்பட்ட இந்த தேசியவாத வாயச்சவடால், மன்னார் மாவட்டத்தில் வாக்குகளை வெல்வதற்காக இந்த வெகுஜன எதிர்ப்பை சுரண்டிக்கொள்ளும் முயற்சியாகவே இருந்தது.

எவ்வாறாயினும் 2024 இல் ஆட்சிக்கு வந்த பின்னர், திசாநாயக அரசாங்கம் அதானி உடன்படிக்கை மீதான அதன் நிலைப்பாட்டை மாற்றி, மின்சார விலை சம்பந்தமான கலந்துரையாடலுக்குள் நுழைந்தது. ஆனால் இறுதியில், அதானி நிறுவனம் பெப்ரவரியில் இந்த உடன்படிக்கையில் இருந்து விலகியது.

மே மாதத்தில் திசாநாயக்க அரசாங்கம் இந்த செயற்திட்டத்தை அமைப்பதற்கு இலங்கையின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஹேலிஸ் குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனமான ஹேலிஸ் ஃபென்டோன்ஸ் நிறுவனத்துடனான புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. தமது ஆரம்பப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளதால் குடியிருப்பாளர்கள் உடனடியாக போரட்டத்தை மீண்டும் தொடங்கினர்.

ஆகஸ்ட் 13 அன்று போராட்டத் தலைவர்கள் திசாநாயகவைச் சந்திந்தித்த போது, ஒரு விஷேட குழுவின் அறிக்கை கருத்தில் எடுக்கப்படும் வரையில் இந்த வேலைத்திட்டம் மீண்டும் தொடங்கப்படமாட்டாது, என உறுதியளித்தார்.

எவ்வாறாயினும், அந்த அறிக்கையை பரிசீலனை செய்த பின்னர், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்க, மீண்டும் இந்த வேலைத்திட்டத்தை தொடங்குமாறு செப்ரம்பர் 22 அன்று வலுசக்தி அமைச்சருக்கு உத்தியோகபூர்வமாக எழுதினார். அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை அறிந்திராத குடியிருப்பாளர்கள், கோபமடைந்து, அந்தப் பிரதேசத்திற்குள் காற்றாடிகளைக் கொண்டுசெல்வதை தடுக்க முயற்சித்தனர்.

மன்னாரில் உள்ள கடற்றொழிலாளர்கள் முதலாவது பாக வேலைத்திட்டத்தின் போது பிடிக்கப்படும் மீன்களின் அளவு கூர்மையாக குறைந்துள்ளது என புகாரளித்தனர். முன்னர் அதிகளவு மீன்கள் பிடிபட்டன. ஆனால் இப்போது, குறிப்பாக கடற்கடையோரம் இயங்கும் காற்றாலைகளால் பாதிக்கபட்ட இடங்களில் உள்ள கடற்பரப்புகளில் பிடிபடும் மீன்களின் அளவு குறைவடைந்துள்ளது.

பருவமழை காலங்களின் போது இந்த இடங்களில் இருந்து சில கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ள பேசாலை கிராமத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். காற்றாலையின் அத்திவாரங்கள் இயற்கை நீரோட்டங்களை தடுக்கின்றன. இந்த வேலைத்திட்டம் கட்டப்பட்டபோது, வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு சரியான முறையில் மதகுகள் அமைக்கப்படவில்லை.

இந்த உள்ளுர் கோபங்களுக்குள், இந்த பிரதேசத்தில் உள்ள கனிய-வள மண்களை அகழந்தெடுக்க ஊக்குவிக்கும் கொழும்பு அரசாங்கத்தின் தொடரச்சியான முயற்சியும் அடங்கும். அவுஸ்திரேலிய நிறுவனமான வரையறுக்கப்பட்ட டைட்டானியம் சான்ட் லிமிட்டெட் 2022 இல் இருந்து ஆய்வு செய்யும் அனுமதியை வைத்துள்ளது.

விஞ்ஞான ஆய்வுகள், மன்னார் மாவட்டம் இல்மனைட், ருடைல், சிர்கோன் மற்றும் கார்நெற் போன்ற பெறுமதிமிக்க கனிமப் பொருட்களை கொண்டுள்ளது. கொழும்பைத் தளமாக கொண்டு இயங்கும் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் படி, இந்த பிரதேசமானது 53 மில்லியன் மெட்றிக் தொன் அளவில் இந்த தாதுப்பொருட்களை கொண்டுள்ளது என சுற்றாடல் ஆய்வு மற்றும் சுரங்க அதிகாரசபையும் மதிப்பிட்டுள்ளதாக காட்டியுள்ளது.

சமூகப் போராட்டத்தின் காரணமாக, இன்னும் நிறைவுசெய்யப்படாத சுற்றாடல் பாதிப்பு மதிப்பீடு செயற்படுத்தப்படாத நிலையில், டைட்டனியம் சான்ட் லிமிட்டெட் தற்போது சுற்றாடல் ஆய்வு மற்றும் சுரங்க அதிகாரசபை உடன் சுரங்க அகழ்விற்கான அனுமதியை உறுதிப்படுத்த பேச்சுவாரத்தையில் ஈடுபட்டுள்ளது. தற்போது வரைக்கும் தனது நிறுவனம் 2 பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளதாகவும் அனுமதி பெற்ற உடன் 24 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்படும் எனவும் அதன் இயக்குனர் ஜாசொன் பெர்ரிஸ் டைம்ஸ்க்கு கூறியுள்ளார். வளர்ந்துவரும் எதிர்ப்பை பிரதிபலித்து, இளைஞர்கள் ”கறுப்பு மண்ணைப் பாதுகாத்திடு” என்ற சுலோகத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் 6 அன்று மன்னாரில் போராட்டம் செய்தனர்.

செப்ரம்பர் 29 அன்று நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஆளும் ஜே.வி.பி. தலைமையிலான தே.ம.ச. அரசாங்கத்துடன் இணைந்த சிவில் உரிமைகள் குழுவான ஜனோதனய இயக்கம், இந்த பொலிஸ் தாக்குதலை கடுமையாகக் கண்டித்து வியாழன் அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. மக்கள், தே.ம.ச. அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை வைத்துள்ளனர் அனால் பொலிஸ் அடக்குமுறை நம்பிக்கையீனத்தை விதைத்துள்ளதாாக அது அறிவித்தது.

தெளிவான அரசியல் மூடிமறைப்பில், ஜனோதய இயக்கமானது, இந்தப் பொலிஸ் தாக்குதல் ”அரசாங்கத்திற்கு எதிராக பிரிவினை மற்றும் விரோதத்தை வேண்டுமென்றே உருவாக்குவதற்கு சதிகார சக்திகள் இன்னமும் பொலிசிற்குள் உள்ளதா என்ற மோசமான கேள்வியை எழுப்புகின்றது” என வினாவியது.

எவ்வாறாயினும், திசாநாயக அரசாங்கம் அதன் நிர்வாகத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் வளர்ந்து வரும் வெகுஜன கோபங்களை அடக்குவதற்கான அதன் முயற்சியின் ஒரு பாகமாக, இந்த சமீபத்திய தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பொலிஸ் சுயாதீனமாக செயற்பட்டது எனக் கூறுவது பொய் ஆகும். ஹேலிஸ் முதலீட்டுக்கு அனுமதி வழங்கிய அரசாங்கமே, தனது பெருவணிக உடன்படிக்கைக்கு விரோதமான எதிர்ப்பை நசுக்குவதற்கு அதிகாரத்தைப் பயன்படுத்த கட்டளையிட்டிருக்கும்.

ஆகஸ்ட் 24 அன்று, அரசாங்கம் ஒரு வாரமாக நீடித்த தபால் ஊழியர்களின் தேசிய வேலை நிறுத்தத்தை உடைக்க பொலிசையும் இராணுவத்தையும் அனுப்பியதுடன், செப்டம்பர் 21 அன்று, தனியார் மயமாக்கலுக்கு எதிராகவும் வேலை வெட்டுகளுக்கு எதிராகவும் போராடிய இலங்கை மின்சார சபை ஊழியர்களை அச்சுறுத்த அத்தியவசிய சேவைகள் சட்டத்தை அமுல்படுத்தியது. இவை சமீபத்திய மாதங்களில் அரசாங்கம் எவ்வாறு தொழிலாளர்கள் மற்றும் போராட்டம் செய்பவர்களை பலவந்தமாக அடக்கியது என்பதற்கான இரு உதாரணங்கள் ஆகும்.

ஜனோதனய இயக்கத்தின் பேச்சாளர்கள், மன்னார் மக்களின் துயரங்களை சுரண்டிக்கொள்வதன் பேரில், ”அதிகார பசி பிடித்த சக்திகள்” பற்றி அம்மக்களை விழிப்போடு இருக்குமாறு எச்சரித்தனர். இது கபடத்தனமான திசைதிருப்பல் ஆகும். உண்மையில் வெற்றியடைவதற்காக அவர்களின் துயரங்களை சுரண்டிக்கொண்டு அதிகாரத்திற்கு வந்த பின்னர் காட்டிக்கொடுத்தது ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமே ஆகும்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த தாக்குதலை கண்டித்தும் ”அரச-பயங்கரவாத”திற்கு எதிராக எச்சரித்தும் வாயளவிலான அறிக்கைகளை வெளியிட்டனர்.

இந்தக் கருத்துகள் வெறுமையாவை. நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளோடு இந்த கட்சிகளும் ”பொருளாதார மீட்சிக்கு” அத்தியவசியமானவை என கூறிக்கொண்டு அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய சிக்கனக் கொள்கைகளுக்கு அதரவளிக்கின்றன. மன்னார் மக்கள் மீதான கொடூரமான பொலிஸ் தாக்குதல் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீதான பரந்த அடக்குமுறையும், சர்வதிகார வழிமுறைகளை நோக்கி அரசாங்கம் நகர்ந்துகொண்டிருப்பதை காட்டும் மேலதிக எடுத்துக்காட்டுகளாகும்.

சுற்றாடலைப் பாதுகாக்கவும் அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் அதன் பெரு-வணிக வேலைத்திட்டத்திற்கு எதிராக, வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் முதலாளித்துவ-விரோத மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இனவாத எல்லைகளைக் கடந்த தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை முன்வைக்கின்றன.

Loading