இலங்கை அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்ட நிரலுக்கு இலங்கை மின்சார சபை தொழிலாளர்களின் எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் அடக்குகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

அரசுக்கு சொந்தமான இலங்கை மின்சார சபையில் (இ.மி.ச.) உள்ள 25 தொழிற்சங்கங்கள் ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. செய்திகளின்படி, தலைமை அலுவலகம், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துணை மையங்களில் உள்ள ஏராளமான இ.மி.ச. தொழிலாளர்கள் தொழில்துறை போராட்ட நடவடிக்கையில் பங்கேற்கின்றனர்.

22 ஜூலை 2025 அன்று கொழும்பில் உள்ள இ.மி.ச. தலைமையகத்திற்கு வெளியே மின்சார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு இணங்க, மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வ.பி./தே.ம.ச.) அரசாங்கம், இ.மி.ச.யை நான்கு தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. தொழிற்சங்கத் தலைமைகள் அரசாங்கத்தின் நடவடிக்கையை முழுமையாக ஆதரிப்பதாலேயே, இ.மி.ச.யின் 22,000-பலமான தொழிலாளர்களின் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான இந்த செலவுக் வெட்டுத் தாக்குதலை அரசாங்கத்தால் முன்னெடுக்க முடிந்தது.

பொறியாளர்கள் சங்கம், தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கம், சுதந்திர ஊழியர் சங்கம், சுயாதீன பொறியாளர்கள் சங்கம், இ.மி.ச. தொழில்நுட்ப அறிஞர்கள் சங்கம் மற்றும் தேசிய ஊழியர் சங்கம் உட்பட இ.மி.ச. தொழிற்சங்கங்களின் கூட்டணியாலேயே இந்த ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இ.மி.ச.யின் மறுசீரமைப்புக்குப் பிறகும் மின்சாரத் தொழிலாளர்களின் தற்போதைய சம்பளம், ஓய்வூதியம், கொடுப்பனவுகள், வேலை நேரம் மற்றும் பதவி உயர்வுகளைப் பெற வேண்டும் என்று கோரி கூட்டணியின் தலைவர்கள் அரசாங்கத்திடம் 24 அம்சக் கோரிக்கைகளுடன் கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளனர். ஊழியர்கள் நான்கு புதிய நிறுவனங்களுக்குள் பிரிக்கப்படுவதற்கு முன்னதாக இந்தக் கோரிக்கைகளுக்கு உடன்படுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதே இந்த ஒத்துழையாமை போராட்டத்தின் நோக்கமாகும்.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை முழுமையாக ஆதரிக்கும் ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை மின்சார ஊழியர் சங்கம், ஒத்துழையாமை போராட்டத்தை எதிர்க்கிறது. அரசாங்கத்திற்கு ஆதரவான தொழிற்சங்கத்தின் நிலைப்பாட்டில் கோபமடைந்த பல இலங்கை மின்சார ஊழியர் சங்க உறுப்பினர்கள், தொழிற்சங்கத்திலிருந்து ராஜினாமா செய்துள்ள அதே நேரம், மீதமுள்ள உறுப்பினர்களில் கணிசமான எண்ணிக்கையிலானோர் ஒத்துழையாமை போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

மின்சாரத் தொழிலாளர்கள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், ஒத்துழையாமை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கத் தலைமைகள் உட்பட தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதில் உறுதியாக உள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த சுதந்திர ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரியந்த பிரபாத், செப்டம்பர் 8 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெளிவுபடுத்தினார்.

'நாங்கள் மறுசீரமைப்பை ஆதரிக்கிறோம். இந்த நடவடிக்கை [மறுசீரமைப்பு] திறன் இன்றியும் சட்டவிரோதமாகவும் மேற்கொள்ளப்பட்டதாலேயே நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்கியுள்ளோம்,' என்று அவர் கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு / தனியார்மயமாக்கல் திட்டத்தை மிகவும் திறனுடன் திணிக்க விரும்புகின்றன.

பிரபாத் மேலும் கூறியதாவது: “நுகர்வோரைப் பாதிக்காத, ஆனால் அரசாங்கத்தை உணரச் செய்யும் வகையில் நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துகிறோம். செப்டம்பர் 16 ஆம் திகதிக்குப் பின்னர், மறுசீரமைப்பு குழுக்களில் இருந்து விலகவும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அலுவலகங்களை மூடவும் முடிவு செய்துள்ளோம். அதன் பிறகு, வேலைநிறுத்தங்கள் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம்.” போலியான போர்க்குணமிக்க நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பிரபாத், தொழிற்சங்க நடவடிக்கைகளை 'இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது' என்று கூறினார்.

செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க, 'எங்கள் கோரிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவதும் அதன் கண்களைத் திறப்பதுமே' ஒத்துழையாமை போராட்டத்தின் நோக்கம் என்று கூறினார். இருப்பினும், அரசாங்கம் ஒரு கலந்துரையாடலுக்கு கூட ஒப்புக் கொள்ளவில்லை என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.

செப்டம்பர் 3 நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், புதிய நிறுவனங்கள் வேலைகள் மற்றும் ஊதியங்களைக் குறைக்கத் தொடங்கி, லாபத்தை அதிகரிக்க வேலை வேகத்தை அதிகரிக்கத் தொடங்கும்போது, ​​தொழிலாளர்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்று உலக சோசலிச வலைத் தள நிருபர் சுதந்திர ஊழியர் சங்கத் தலைவர் பிரபாத்திடம் கேட்டபோது, ​​அவர் பின்வருமாறு பதிலளித்தார்:

'மின் துறையில் பணிபுரியும் கடைசி ஊழியரைக் கூட பாதுகாக்கும் வகையிலான 21 அம்சங்களுடன் தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.' கோரிக்கைகளைப் பற்றி கலந்துரையாட நியமிக்கப்பட்ட குழுவுடன் செப்டம்பர் 15 அன்று ஒரு சந்திப்பை நடத்துவதாக அமைச்சர் உறுதியளித்ததாக அவர் மேலும் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் ஒப்பந்தத்தையும், அந்த ஒப்பந்தத்தின்படி எரிசக்தித் துறையை தனியார்மயமாக்குவதற்கான அதன் தயாரிப்புகளையும் நியாயப்படுத்திய பிரபாத், 'நாங்கள் இன்னும் ஒரு ஏழை நாடு, [ஆனால்] நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் முன்னேறி வருகிறோம். பெரிய மின் திட்டங்களுக்கு வெளிநாட்டு முதலீடு தேவை,' என்றார்.

பிரபாத் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை தலைகீழாக மாற்றுகிறார். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு மானியம் வழங்கவில்லை, ஆனால் திருப்பிச் செலுத்த வேண்டிய 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனை வழங்குகிறது.

ஏப்ரல் 2022 இல் இலங்கை வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியபோது, ​​சர்வதேச வங்கியாளர்கள் மற்றும் ஏனைய கடன் வழங்குநர்களின் சார்பாக தலையிட்ட சர்வதேச நாணய நிதியம், பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, கொழும்பை கடுமையான சிக்கனத் திட்டத்தை அமுல்படுத்துமாறு உத்தரவிட்டது. சர்வதேச நாணய நிதிய நடவடிக்கைகள், அரசதுறை மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயமாக்கல் மற்றும் வரி அதிகரிப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களில் வெட்டுக்கள் மூலம் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளிடமிருந்து அதிகபட்சம் நிதியை கறந்தெடுக்கும் பாரிய திட்டத்தை உள்ளடக்கியதாகும்.

முந்தைய விக்ரமசிங்க நிர்வாகத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி திசாநாயக்கவின் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், 2028 இல் இலங்கையின் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்தத் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிடுகிறது. நிறுவனத்தின் மறுசீரமைப்பு குழுக்களில் தீவிரமாக உறுப்பினர்களாக உள்ள இ.மி.ச. தொழிற்சங்கங்கள் உட்பட இலங்கை தொழிற்சங்க அதிகாரத்துவம் இந்த செயல்முறையின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கின்றது.

இ.மி.ச. நிர்வாகத்துடன் ஒரு 'கூட்டு ஒப்பந்தத்தை' செய்துகொள்வது சாத்தியம் என்றும், எதிர்கால நிறுவனங்களுக்குத் தலைமை தாங்குபவர்கள் தொழிலாளர்களை ஆதரிப்பார்கள் என்றும் நம்புவது ஒரு ஆபத்தான மாயை ஆகும். தொழிற்சங்க அதிகாரத்துவம் தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை, மாறாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் அரசாங்கத்திற்காக சேவை செய்வதுடன், வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் உதவுவதாக உறுதியளித்துள்ளது.

திசாநாயக்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத் திட்டத்திற்கான தனது உறுதிப்பாட்டை கைவிடாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

மின்சக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூறியது போல், அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்டம் 'தேசியத் தேவைகளுக்கு' ஏற்ப செயல்படுத்தப்படுவதோடு மறுசீரமைப்புக்கு இணங்க முடியாதவர்களுக்கு கட்டாய ஓய்வூதியம் திணிக்கப்படலாம்.

தொழிலாளர்கள் தொழில்துறை போராட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு எதிராக நேரடியாக அச்சுறுத்திய அவர், 'ஒரு சிலரின் கோரிக்கைகளுக்காக பொதுமக்களை பிணைக் கைதிகளாக வைத்திருக்க முடியாது' என்று மேலும் கூறினார்.

கடந்த மாதம், திசாநாயக்க அரசாங்கம் ஆயிரக்கணக்கான தபால் ஊழியர்கள் ஊதியம், மேலதிக நேர ஊதியம், தொழில் நிரந்தரம் மற்றும் ஏனைய கோரிக்கைகளுக்காகவும் நடத்திய தேசிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க பொலிஸ் மற்றும் இராணுவத்தை அணிதிரட்டியது. அஞ்சல் தொழிற்சங்கத் தலைமை தங்கள் உறுப்பினர்களைக் காட்டிக் கொடுத்து, எந்தவொரு கோரிக்கையையும் வெற்றிபெறாமல் வேலைநிறுத்தத்தை விரைவாக கைவிட்டது.

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை 'நியாயமற்றது' என்று கண்டனம் செய்ததுடன் இ.மி.ச. அல்லது வேறு எந்த அரச நிறுவனத்திலும் தொழிலாளர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்தவொரு தொழில்துறை போராட்ட நடவடிக்கைக்கும் எதிராக எச்சரிக்கை விடுத்தார்.

இ.மி.ச. ஊழியர்கள் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தில் இருந்தும் தங்களின் சொந்த போராட்டங்களிலிருந்தும் இன்றியமையாத அரசியல் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொண்ட ஒரு தொழிலாளி, அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்டம் ஏற்கனவே இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டதால் அதை எதிர்த்துப் போராடுவதற்கு சில ஊழியர்கள் 'மிகவும் தாமதமாகிவிட்டதாக நினைக்கிறார்கள்' என்று எமது நிருபர்களிடம் கூறினார். இது ஒரு தவறு.

அரசாங்கம் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் கூட்டணி சேர்ந்து அதன் திட்ட நிரலுடன் முன்னேறிச் செல்லும்போது, இ.மி.ச. தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைய வேண்டும்.

உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்ததைப் போல: திசாநாயக்கவின் சிக்கன நடவடிக்கைத் திட்டத்திற்கு எதிரான மற்றும் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான மறுசீரமைப்பு தாக்குதலுக்கும் எதிரான போராட்டத்தை, தொழிற்சங்க எந்திரத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே கட்டியெழுப்பினால் மட்டுமே முன்னேற முடியும். இதன் பொருள் அனைத்து தொழிற்சங்க அதிகாரிகளையும் தவிர்த்து, ஒவ்வொரு இ.மி.ச. வேலைத் தளத்திலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதாகும். இந்தக் குழுக்கள், அதே மறுசீரமைப்பு/தனியார்மயமாக்கல் திட்டங்களை எதிர்கொள்ளும் ஏனைய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களுடன் இணைக்கப்பட வேண்டும்.

திசாநாயக்க அரசாங்கத்தால் தொழில்கள் மற்றும் வேலை நிலைமைகளை வெட்டுவதற்கு குறிவைக்கப்படும் பெட்ரோலியம், தபால், ரயில், துறைமுகங்கள், வங்கிகள் மற்றும் ஏனைய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளை இ.மி.ச. தொழிலாளர்கள் அணுக வேண்டும்.

அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பிற்கு பிரதிபலிக்கும் விதமாக, தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களின் கோபத்தைத் தணிக்கவும், அரசாங்கத்திற்கு பயனற்ற வேண்டுகோள் விடுப்பதில் அவர்களை சிக்க வைக்கவும் தனிமைப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலடியாக, தொழிலாளர்கள் தங்கள் சுயாதீனமான வர்க்க வலிமையைத் திரட்டி, அரசாங்கத்தின் கொள்கைகளைத் தோற்கடித்து ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராட ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புகளைத் தொடங்க வேண்டும்.

இதில் அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் ரத்து செய்வதற்கான கோரிக்கைகளும், அனைத்து வங்கிகள், பெரிய நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் பிற முக்கிய பொருளாதார மையங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதற்கான கோரிக்கைகளும் அடங்க வேண்டும். இந்த முதலாளித்துவ எதிர்ப்புத் திட்டம் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தை உள்ளடக்கியதாகும்.

இந்த இன்றியமையாத அரசியல் பிரச்சினைகளை மறுபரிசீலனை செய்யுமாறும், உங்கள் வேலைத் தளத்தில் ஒரு நடவடிக்கைக் குழுவை எவ்வாறு நிறுவுவது என்பது குறித்து எங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் இ.மி.ச. தொழிலாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மின்னஞ்சல்: wswscmb@sltnet.lk

தொலைபேசி: +94773562327

Loading