இலங்கை தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கம் மின்சார சபையை மறுசீரமைப்பதை ஆதரிக்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

22 ஜூலை 2025 அன்று கொழும்பில் உள்ள இ.மி.ச. தலைமையகத்திற்கு வெளியே மின்சார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது.

இலங்கை அரசாங்கம் இலங்கை மின்சார சபையை (இ.மி.ச.) அரசாங்கத்திற்குச் சொந்தமான நான்கு நிறுவனங்களாக பிரிக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இதன்படி அக்டோபர் இறுதிக்குள் ஊழியர்கள் இடம் மாற்றப்படுவார்கள்.

இ.மி.ச.யை கலைப்பதற்காக தேசிய முறைமை இயக்குனர், தேசிய பரிமாற்ற வலையமைப்பு சேவை வழங்குநர், இலங்கை மின்சார விநியோகம் மற்றும் இலங்கை மின்சார உற்பத்தி ஆகிய நிறுவனங்களை உருவாக்குவது, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான கோரிக்கையாகும். மின்சாரத் துறை மறுசீரமைப்புக்கான பணிப்பாளர் நாயகத்தின் படி, இந்த நிறுவனங்கள் சுமார் இரண்டு ஆண்டுகளில் பல நிறுவனங்களாகப் பிரிக்கப்படும்.

கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட புதிய இலங்கை மின்சார (திருத்த) சட்டத்தின் கீழ், அவர்கள் எந்த நிறுவனங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்பதைக் குறிக்கும் கடிதங்களை அரசாங்கம் அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பியுள்ளது.

இ.மி.ச.யின் 22,000 ஊழியர்கள் மத்தியில் இ.மி.ச. பிரிக்கப்படுவதற்கு பரவலான எதிர்ப்பு காணப்படுகிறது. தொழிலாளர்கள் தங்கள் தொழில்கள் மற்றும் வேலை நிலைமைகள் குறித்தும், 1969 இல் இ.மி.ச. நிறுவப்பட்டதிலிருந்து கடந்த கால போராட்டங்கள் மூலம் வென்றெடுத்த உரிமைகளை அழிக்கும் அச்சுறுத்தல்கள் காணப்படுவது குறித்தும் கவலைப்படுகிறார்கள். அவர்கள் அரசாங்கத்தின் தொழில் நியமனக் கடிதங்களை ஏற்கத் தயங்குகிறார்கள்.

தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான காட்டிக்கொடுப்புகளின் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ள ஆளும் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தால், இந்த பிரதான தொழிலாள வர்க்கப் பிரிவினரின் மீது அதன் தாக்குதலைத் தயாரிக்க முடிந்தது.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்று முன்னர் கூறி வந்த போதிலும், இ.மி.ச. தொழிலாளர்களை உள்ளடக்கிய அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களும் கடந்த வாரம் அரசாங்கத்தின் திட்டத்தை ஆதரிக்க அணிசேர்ந்து நின்றனர்,

ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை மின்சார ஊழியர் சங்கம் (இ.மி.ஊ.ச.) எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியுடன் கலந்துரையாடி, நியமனக் கடிதங்களை வழங்குவதில் உடன்பாட்டை வெளிப்படுத்தியது.

இ.மி.ச. தொழிலாளர்களிடையே ஒரு காலத்தில் மிகப்பெரிய தொழிற்சங்கமாக இருந்த இ.மி.ஊ.ச. ஆனது, ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே காட்டிக்கொடுப்புகளை செய்துவந்துள்ளதால் தொழிலாளர்கள் அதைக் கண்டித்து வெளியேறியுள்ளனர். 2025 ஜூனில் உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர், கடுவெல நகர சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினரான ரஞ்சன் ஜயலால் தொழிற்சங்கத்திற்கு தலைமை தாங்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று அரசாங்க உயர் மட்டத்தில் இருந்து ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டில் உள்ள பிற தொழிற்சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் கூட்டணி, ஆரம்பத்தில் இ.மி.ச. தொழிலாளர்களை நியமனக் கடிதங்களை ஏற்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதுடன் உறுப்பினர்களின் அழுத்தத்தின் கீழ், செப்டம்பர் 1 அன்று ஒரு அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்தது.

இருப்பினும், இ.மி.ச. தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கம் மற்றும் இ.மி.ச. கணக்காளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் 20 தொழிற்சங்க கூட்டணியுடன் முறித்துக் கொண்டு, ஆகஸ்ட் 26 அன்று அமைச்சருடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இ.மி.ஊ.ச. போலவே, அவர்களும் அரசாங்கத்தின் திட்டங்களுடன் இணைந்து செல்ல விருப்பம் தெரிவித்தனர்.

விரைவாக அதே வழியில் இறங்கிய கூட்டணியின் மீதமுள்ள தொழிற்சங்கங்கங்களின் அதிகாரிகள், ஏனைய தொழிற்சங்கங்கள் 'முயற்சியை காட்டிக் கொடுத்ததற்காக' குற்றம் சாட்டிக்கொண்டு, தங்கள் எதிர்ப்பைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அறிவித்துவிட்டனர். இந்த தொழிற்சங்கங்களில் எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியால் கட்டுப்படுத்தப்படும் ஸ்ரீலங்கா சுதந்திர ஊழயர் சங்கம் மற்றும் தேசிய ஊழியர் சங்கமும் அடங்கும்.

இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு விடுத்த ஒரு அறிக்கையில், '[22,000 ஊழியர்கள்] தங்கள் வேலைகளை இழப்பதை அனுமதிக்க எங்களுக்கு விருப்பமில்லை' என்று அறிவித்ததுடன், தொழிலாளர்கள் தொழில் நியமனக் கடிதங்களை ஏற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைத்தனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடிதங்களை ஏற்க மறுக்கும் எந்தவொரு தொழிலாளியையும் அவர்கள் கைவிட்டுவிடுவார்கள். 'போராட்டத்தை' தொடருவோம் என்று இந்த தொழிற்சங்க அதிகாரிகள் கபடத்தனமாக கூறினர்.

ஆகஸ்ட் 26 அன்று வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானியின்படி, புதிய நிறுவனங்களில் சேர விரும்பாத ஊழியர்கள் சுயவிருப்ப ஓய்வூதிய திட்டத்திற்கு (VRS) விண்ணப்பிக்கலாம். அவர்களின் சேவை ஆண்டுகளைப் பொறுத்து அவர்களுக்கு 900,000 ரூபாய் (US3,000) முதல் 5 மில்லியன் ரூபாய் (US16,600) வரையிலான மிகக் குறைந்த இழப்பீடு வழங்கப்படும்.

மின்சார (திருத்த) சட்டம், புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களில் ஊழியர்கள் அதே நிலையைத் தக்க வைத்துக் கொள்வார்கள் என்று கூறினாலும், அவர்களின் தற்போதைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் கடின உழைப்பால் வென்ற ஏனைய உரிமைகள் பற்றி அது எதுவும் குறிப்பிடவில்லை.

இந்த இன்றியமையாத அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்கு முந்தைய அரசாங்கம் எடுத்த முயற்சிகளுக்கு எதிராக போர்க்குணமிக்க போராட்டங்களைத் முன்னெடுத்த இ.மி.ச. தொழிலாளர்களை அனைத்து தொழிற்சங்கங்களும் கோழைத்தனமாக விற்றுத்தள்ளிவிட்டன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமானது புதிய சட்டத்தைத் தயாரிப்பதன் மூலம் இ.மி.ச. மறுசீரமைப்பைத் தொடங்கியது. இதற்கு பிரதிபலித்த 20,000 இ.மி.ச. தொழிலாளர்கள், நிர்வாகம் அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்து, கடுமையான அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை விதித்த போதும் அவற்றை மீறி மூன்று நாள் தேசிய சுகயீன விடுமுறை போராட்டத்தை நடத்தினர். அரசாங்கம் 62 ஊழியர்களை இடைநீக்கம் செய்வதன் மூலம் பழிவாங்கியது. அவர்கள் இப்போது கடுமையான நிபந்தனைகளின் கீழ் மீண்டும் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஜே.வி.பி.யின் தேர்தல் முன்னணியான தே.ம.ச., கடந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் போது, ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக பொய் வாக்குறுதியளித்தது. ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்களும் ஏனைய தொழிற்சங்கங்களில் உள்ள அவற்றின் சகாக்களும் அதே பொய்யைப் பரப்பினர்.

தனது வாக்குறுதிகளை விரைவாகக் கைவிட்ட திசாநாயக்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன வெட்டு நடவடிக்கைகளுக்கு அதன் முழு உறுதிப்பாட்டையும் அறிவித்தது. அரசாங்கம் இ.மி.ச.க்கு மேலாக, டஜன் கணக்கான அரச நிறுவனங்களை துரிதமாக மறுசீரமைப்பு செய்யவும் வணிகமயமாக்கவும் முன்னுரிமை அளித்துள்ளது. இவற்றில் இலங்கை துறைமுகங்கள், பெட்ரோலியம், தபால், இலங்கை தொலைத்தொடர்பு, இலங்கை ரயில், காப்புறுதிக் கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவை அடங்கும்.

மறுசீரமைப்புக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள் உள்ளன. இந்த செயல்முறை குறைந்தபட்சம் 500,000 அரச தொழில்களை அழிக்கும். இதை விரைவுபடுத்த, ஜே.வி.பி./தே.ம.ச. திசாநாயக்க அரசாங்கம் ஒரு 'விசேட-ஹோல்டிங் நிறுவனத்தை' உருவாக்க முன்மொழிந்துள்ளது.

அரசாங்கம் அதன் இ.மி.ச. மறுசீரமைப்புத் திட்டத்தைத் தயாரித்தபோது, ​​தொழிற்சங்க அதிகாரத்துவம் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன. ஜூலை 22 அன்று, சுமார் 16,000 இ.மி.ச. ஊழியர்கள் சுகயீன விடுமுறை எடுத்து மின்சார (திருத்த) சட்டத்திற்கு எதிராக ஒரு நாள் போராட்டத்தை நடத்தினர். தொழிலாளர்களின் கோபத்தைக் கலைக்கவும், அரசியல் ரீதியாக அவர்களை நிராயுதபாணியாக்கவும் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.

இ.மி.ச. ஊழியர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்புகளை நிராகரித்து, தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கத் தயாராக வேண்டும்.

இலங்கைத் தொழிலாளர்களின் அதிகரித்து வரும் கோபமும் போர்க்குணமும் ஆகஸ்ட் 17 அன்று 19 கோரிக்கைகளுக்காகப் போராடும் 17,000 அஞ்சல் ஊழியர்களின் தேசிய வேலைநிறுத்தத்தில் தெளிவாகக் காட்டப்பட்டன. அரசாங்கம் இராணுவத்தையும் பொலிசையும் கொண்டு தொழிலாளர்களை ஒடுக்கிய பின்னர், அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு விரைவாக அடிபணிந்த தபால் தொழிற்சங்கத் தலைவர்கள், ஒரு வாரத்தின் பின்னர் ஒரு கோரிக்கையை கூட வெல்லாமல் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

போர்க்குணம் மட்டும் போதாது. தொழிற்சங்கங்களின் கட்டமைப்பிற்குள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட முடியாது என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். திசாநாயக்க அரசாங்கமும் இலங்கை முதலாளித்துவ வர்க்கமும் ஆழமடைந்து வரும் பொருளாதார பேரழிவில் சிக்கியுள்ளதுடன் அந்த சுமையை உழைக்கும் மக்களை சுமக்க வைப்பதில் உறுதியாக உள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), முதலாளித்துவ அமைப்புக்குள்ளும் அதைப் பாதுகாக்கும் தொழிற்சங்க எந்திரங்களுக்குள்ளும் தொழிலாளர்களுக்கு எந்த தீர்வும் கிடையாது என்று வலியுறுத்துகிறது.

இ.மி.ச. மற்றும் நாடு முழுவதும் உள்ள அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வேலைத் தளங்களில் உள்ள தொழிலாளர்கள், அனைத்து தொழில்கள், உரிமைகள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாப்பதற்கு சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை நிறுவுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் இந்தக் குழுக்களில் அனுமதிக்கப்படக்கூடாது.

சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட்டு, அரசாங்கமும் முதலாளித்துவ வர்க்கமும் கட்டவிழ்த்துவிடும் தாக்குதலுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தைத் தொடங்க தொழிலாள வர்க்கம் தயாராக வேண்டும்.

அனைத்து அரச நிறுவனங்களும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும். தொழிலாள வர்க்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நிராகரித்து, வெளிநாட்டுக் கடனை நிராகரித்தல் மற்றும் வங்கிகள், பெரிய நிறுவனங்கள், தொழில்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குதல் உட்பட சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராட வேண்டும். இதற்கு சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டம் ஒன்று அவசியமாகும்.

Loading