எரிசக்தி அமைச்சரின் அச்சுறுத்தலை எதிர்த்திடு! அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்டத்தை எதிர்த்துப் போராட இ.மி.ச. நடவடிக்கைக் குழுவை உருவாக்கு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளின் கீழ், இலங்கை மின்சார சபையை (இ.மி.ச.) நிறுவனங்களாகப் பிரித்து, இறுதியில் தனியார்மயமாக்கும் செயல்முறைக்கு எதிராக இ.மி.ச. தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் தொழிற்சங்கத் தலைவர்கள் செப்டம்பர் 17-18 சுகயீன விடுமுறை என்ற வரையறுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்கத் தள்ளப்பட்டனர். இதற்கு அரசாங்கம் அச்சுறுத்தல்களுடன் பதிலளித்துள்ளது.

22 ஜூலை 2025 அன்று கொழும்பில் உள்ள இ.மி.ச. தலைமையகத்திற்கு வெளியே மின்சார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது.

இ.மி.ச. ஏற்கனவே நான்கு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்கள் அந்த நிறுவனங்களுக்குள் வேலையில் அமர்த்தப்படுவார்கள் என அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி செப்டம்பர் 15 அன்று  தெரிவித்தார். தங்கள் தொழில் பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத இந்தத் திட்டத்தை எதிர்க்கும் தொழிலாளர்களை அச்சுறுத்திய எரிசக்தி அமைச்சர், 'இதை விரும்பாதவர்கள் விலகிக்கொள்ளலாம்' என்றார்.

இவ்வாறு விலகிக்கொள்ளும் தொழிலாளர்களுக்கு 5 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த அற்ப இழப்பீட்டை ஏற்றுக்கொண்டால், இ.மி.ச. மற்றும் வங்கிக் கடன்களைக் கழித்த பின்னர், தொழிலாளர்கள் ஒரு சிறிய தொகையை மட்டுமே பெறுவர். அதற்கு அப்பால், அவர்களின் வாழ்க்கை நரகத்திற்குச் செல்லட்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

இ.மி.ச. மறுசீரமைப்பு என்பது, அமைச்சர் கூறுவது போல், தொழிலாளர்களின் வேலைகளைப் பாதுகாப்பதற்கானது அல்ல. இ.மி.ச. அதன் தற்போதைய வடிவத்தில் இருந்திருந்தால், செப்டம்பர் 17 ஆம் திகதிக்குள் 12,000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய அமைச்சரவை முடிவு செய்திருக்கும் என்று அமைச்சர் கூறினார். தொழில் பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் சுயவிருப்புடன் ஓயவுபெற கட்டாயப்படுத்துவதன் மூலம், அரசாங்கம் மற்றொரு வழியில் அதே தொழில் அழிப்பைச் செயல்படுத்துகிறது.

எரிசக்தி அமைச்சரும் அவரது மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கமும் தொழிற்சங்கத் தலைவர்களும், சர்வதேச நாணய நிதியத்தால் 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடன் வழங்குவதற்கான நிபந்தனையாக விதிக்கப்பட்ட சிக்கனத் திட்டத்தின் கீழேயே இ.மி.ச.யின் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது என்ற உண்மையை தொழிலாளர்களிடமிருந்து மூடிமறைக்கின்றனர். இ.மி.ச. உட்பட 400க்கும் மேற்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் இந்த வழியில் மறுசீரமைக்கப்பட உள்ளதுடன், இதன் விளைவாக 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழில்கள் அழிக்கப்படுவதோடு மீதமுள்ள ஊழியர்கள் மீது சம்பள வெட்டுக்களும் கடுமையான வேலை நிலைமைகளும் திணிக்கப்பட உள்ளன.

'அரச-தனியார் பங்காண்மை' மாதிரியின் கீழ், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான கதவுகளைத் திறந்து விடுவதன் மூலம், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அரசாங்கம் ஒரு பொறுப்புடமை நிறுவனத்தை ஸ்தாபிக்கவும், அரச-தனியார் பங்காண்மையை சட்டப்பூர்வமாக்கும் சட்டத்தை நிறைவேற்றவும் தயாராகி வருகிறது.

ஒத்துழையாமை போராட்டத்தை அரசாங்கம் அலட்சியம் செய்ததை அடுத்து, தொழிற்சங்கத் தலைவர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள அதேநேரம், தங்கள் உறுப்பினர்களை இ.மி.ச. கொழும்பு தலைமை அலுவலகத்தின் முன் மறியல் போராட்டங்களை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர். பொறியாளர்கள் சங்கம், தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கம், சுதந்திர ஊழியர் சங்கம், சுயாதீன பொறியாளர்கள் சங்கம், இ.மி.ச. தொழில்நுட்ப அறிஞர்கள் சங்கம் மற்றும் தேசிய ஊழியர் சங்கம் உட்பட 25 தொழிற்சங்கங்களின் கூட்டணியே போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது. அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பு, தனியார்மயமாக்கலை எதிர்ப்பவர்களாக பொய் கூறி, தொழிலாளர்களை தவறாக வழிநடத்திய ஜே.வி.பி.யின் இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் தலைவர்கள், தற்போதைய போராட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கத்துடனும் அமைச்சருடனும் அணிசேர்ந்து நிற்கிறார்கள்.

மறுசீரமைப்புக்கு எதிராக தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க இ.மி.ச. ஊழியர்கள் மத்தியில் உள்ள உறுதிப்பாட்டையும் போர்க்குணத்தையும் நடவடிக்கைக் குழுவினராகிய நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அது மட்டும் போதாது.

ஜூலை 22 அன்று, 16,000 தொழிலாளர்கள் சுகயீன விடுமுறை எடுத்துக்கொண்டதோடு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இ.மி.ச. தலைமையகத்தின் முன் மறியலில் ஈடுபட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதன் பின்னர், நீங்கள் ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடங்கினீர்கள். இப்போது, ​​நீங்கள் எடுக்கும் நடவடிக்கையால், 'நீங்கள் விரும்பினால் இருக்கலாம், அல்லது ஓய்வு பெற்று வீட்டிற்குச் செல்லலாம்!' என்று அமைச்சர் மிரட்டியுள்ளார். மறுசீரமைப்புத் திட்டத்தை அரசாங்கம் கைவிடாது என்று அவர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி திசாநாயக்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதிய திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதாக சபதமெடுத்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த திட்டத்தை தோற்கடிக்காமல், மின்சாரத் துறையிலோ அல்லது மறுசீரமைப்புக்கு பட்டியலிடப்பட்டுள்ள வேறு எந்த அரச நிறுவனத்திலோ உள்ள ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. உண்மை என்னவென்றால், ஊழியர்களின் தொழில்கள், சம்பளம் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமானது அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் போராட்டமாக மாறியுள்ளது. தொழிலாளர்களை ஒவ்வொரு இடங்களுக்கும் அழைத்துச் சென்று, அவர்களைத் தனிமைப்படுத்தி, கலைத்து, அவர்களை சுற்றிவளைந்து செல்லும் பாதையில் வழிநடத்துகின்ற தொழிற்சங்க அதிகாரிகளின் செயற்பாடுகள் மூலம் அத்தகைய போராட்டத்தை முன்னெடுக்க முடியாது.

அனைத்து இ.மி.ச. தொழிற்சங்கத் தலைவர்களும் சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு விசுவாசமானவர்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த ஸ்ரீலங்கா மின்சாரத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பிரபாத் தங்களின் திட்டத்தை இவ்வாறு விவரித்தார்: 'நுகர்வோரை பாதிக்காத, ஆனால் அரசாங்கத்தை கொஞ்சம் உணரச் செய்கின்ற வகையில் நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம்.' சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் குறித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கருத்தையும் வெளிப்படுத்திய அவர், 'நாங்கள் இன்னமும் ஒரு ஏழை நாடு. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். பெரிய மின்சாரத் திட்டங்களுக்கு வெளிநாட்டு முதலீடு தேவை' என்றார். சர்வதேச நிதி மூலதனத்தின் கொள்ளையடிக்கும் நலன்களுக்காக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் ஆழ்த்தும் சர்வதேச நாணய நிதியம், ஏழை நாடுகளுக்கு சாதகமாக செயல்படுகிறது என்ற இந்தக் கூற்றை தொழிலாளர்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

அரசாங்கம் முன்னெடுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கீழ், தொழிலாளர்கள் அதை எதிர்த்துப் போராட முடியாது. வேலைநிறுத்தம் செய்பவர்களை பலவீனப்படுத்தவும், அரசாங்கத்தின் திட்டத்திற்கு அவர்களை அடிபணியச் செய்யவும், அவர்கள் 'அரசாங்கத்தை கொஞ்சமாக உணரச் செய்யும்' செயல்களில் இ.மி.ச. தொழிலாளர்களை சிக்க வைத்துள்ளனர். இந்தத் தலைவர்கள் இ.மி.ச.யை நான்கு நிறுவனங்களாக உடைத்து முன்னெடுக்கத் தொடங்கியுள்ள திட்டத்தை செயல்படுத்தும் குழுக்களின் உறுப்பினர்கள் ஆவர்; அவர்கள் இப்போது செயல்படுத்தப்படும் திட்டத்தில் பங்காளிகளாக உள்ளனர்.

செப்டம்பர் 7 முதல் ஒரு வாரம் நீடித்த அஞ்சல் ஊழியர்களின் போராட்டத்தின் பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத் திட்டத்தை அமுல்படுத்த அர்ப்பணித்துக்கொண்டுள்ள அரசாங்கம், அதன் ஒரு பகுதியாக தபால் சேவையை மறுசீரமைக்கவும் திட்டமிட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த மறுசீரமைப்புத் திட்டத்திற்கும், தபால் துறையில் பல தசாப்தங்களாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கும் எதிராகப் போராடத் தீர்மானித்துள்ள தபால் ஊழியர்களின் அழுத்தம் காரணமாகவே தொழிற்சங்கத் தலைவர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். இருப்பினும், இது ஒரு பரவலான போராட்டமாக மாறுவதைத் தடுக்க, அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே அதை ஏனைய தொழிலாளர்களிடம் இருந்து ஒதுக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட, நீர்த்துப்போன போராட்டமாக மாற்றின. இந்த சூழ்நிலையில், அரசாங்கம் தொழிலாளர்களின் போராட்டத்தை முறியடிக்க இராணுவத்தையும் பொலிசையும் அனுப்பியபோது, ​​அதற்கு அடிபணிந்த தொழிற்சங்கத் தலைவர்கள் 'இறுதிவரை போராடுவதற்கான' தங்கள் உறுதிப்பாட்டை விலக்கிக்கொண்டனர். அஞ்சல் சேவை மற்றும் ஏனைய நிறுவனங்களிலும் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தங்கள் அதே தலைவிதியை எதிர்கொள்ளும் என்று தபால் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்தார்.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கடந்த ஆண்டு இ.மி.ச. மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றியதிலிருந்தே, இ.மி.ச. [மற்றும் ஏனைய வேலைத் தளங்களிலும்] தொழிலாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்கள் முன்வைத்துள்ள வேலைத் திட்டத்தைச் சுற்றி ஒன்றிணைவதை இனிமேலும் தாமதப்படுத்தக் கூடாது

இ.மி.ச. தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை எப்படிச் செய்வது? மின்சார சபை ஊழியர்கள் தங்களது ஒவ்வொரு வேலைத் தளத்திலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவது முதல் படியாகும். தொழிற்சங்க அதிகாரத்துவம் இந்தக் குழுக்களில் தலையிடக்கூடாது. தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளையும் அவற்றுக்கான போராட்டத்தையும் ஜனநாயக ரீதியான கலந்துரையாடலின் மூலம் தீர்மானிக்க வேண்டும்.

அத்தகைய குழுக்களை அமைப்பதன் மூலம், தங்களைப் போலவே அரசாங்கத்தின் தாக்குதலுக்கு உள்ளாகும் தொழிலாளர்களை அணுகி, பொதுவான மற்றும் பரந்த போராட்டத்தை ஒழுங்கமைக்க வேண்டியது அவசியம். அத்தகைய போராட்டத்திற்கான பின்வரும் நடவடிக்கையை நாங்கள் முன்மொழிகிறோம்:

மறுசீரமைப்பு / தனியார்மயமாக்கலை நிறுத்து! மறுசீரமைப்புக்கு உட்பட்ட அல்லது உட்படாத அனைத்து அரச நிறுவனங்களையும், தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திடு!

தொழில் பாதுகாப்பு, வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற ஊதியம், ஓய்வூதியம் மற்றும் நல்ல வேலை நிலைமைகள் வேண்டும்!

வெளிநாட்டுக் கடன்களை செலுத்தவதை மறுப்போம்!

இந்தப் போராட்டம் ஒரு பரந்த அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். ஏனெனில், இது முதலாளித்துவ அமைப்பினதும் அதைப் பாதுகாக்கும் வெளிநாட்டு மூலதனத்தினதும் பாதுகாவலரான திசாநாயக்க அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமாகும்.

தொழிலாளர் நடவடிக்கைக் குழுவினராகிய நாங்கள், இந்தப் போராட்டத்திற்காக சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) முன்வைத்துள்ள வேலைத்திட்டத்தை ஆதரிக்கின்றோம். அனைத்து வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களையும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதற்கும், அதைச் செயல்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்கும் தொழிலாள வர்க்கம், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைக்கும் போராட்டத்தில் சோ.ச.க. ஈடுபட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைக்கு சாதகமாக பிரதிபலித்து, இதுபோன்ற நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க ஏற்கனவே எங்களிடம் கலந்துரையடலுக்கு வந்துள்ள இ.மி.ச. தொழிலாளர்களை நாங்கள் வரவேற்கிறோம்.

ஏனைய எல்லா நாடுகளிலும் போலவே, இலங்கையின் தொழிலாளர்களும், சர்வதேச நிதி மூலதனத்தினதும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினதும் ஒருங்கிணைந்த தாக்குதலை எதிர்கொள்கின்றனர்.

எனவே, சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் தங்கள் ஒற்றுமையை பலப்படுத்துவதற்காக, தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் ஒருங்கிணைவதற்காக இலங்கைத் தொழிலாளர்களுக்கும் நாங்கள் முன்மொழிகிறோம்.

இந்த இன்றியமையாத அரசியல் பிரச்சினைகள் குறித்து உங்கள் கவனத்தை செலுத்துமாறும், உங்கள் வேலைத் தளத்தில் ஒரு நடவடிக்கைக் குழுவை உருவாக்குவது பற்றி கலந்துரையாட எங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் நாங்கள் முன்மொழியும் நடவடிக்கையில் ஆர்வமுள்ள இ.மி.ச. உட்பட அனைத்து தொழிலாளர்களிடமும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களைத் தொடர்பு கொள்ளவும்:

action.committees.sl@gmail.com

வாட்ஸ்அப் 0763815909

தொலைபேசி: +94773562327

Loading