மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) அரசியல் ஐக்கியம் கொண்டிருக்கும் சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலம் (துருக்கி), 2025 ஜூன் 13–15 தேதிகளில் அதன் ஸ்தாபக மாநாட்டை நடத்தியது. கட்சியின் அதிகாரப்பூர்வ உருவாக்க செயல்முறை கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. கட்சியின் காங்கிரஸில் ஒருமனதாக பின்வரும் மூன்று தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன: அவை, “கொள்கை அறிக்கை” (அதிகாரப்பூர்வ வேலைத்திட்டம்), “சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலத்தின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள்” மற்றும் “அரசியலமைப்பு” ஆகியவையாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் “கொள்கை அறிக்கையின்” இரண்டாவது பகுதியை நாங்கள் இங்கே வெளியிடுகிறோம். பகுதி ஒன்றைப் படிக்க இங்கே சொடுக்கவும். அடுத்த பகுதிகள் விரைவில் தொடர்ந்து வெளியிடப்படும்.
ஏகாதிபத்தியமும் போரும்
16. பொருளாதார அமைப்புமுறை உலகளாவிய அளவில் செயல்பட்டு வருகின்ற அதேவேளையில், தொழில்துறையும் நிதியும், பன்னாட்டு பெருநிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட்டாலும், முதலாளித்துவம் தேசிய-அரசுகளின் அமைப்புமுறையில் வேரூன்றி உள்ளது. இறுதி ஆய்வில், ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கமும், உலக அரங்கில் அதன் நலன்களைப் பின்தொடர்கின்ற நடவடிக்கைகளின் ஒரு தளமாக தேசிய அரசு சேவையாற்றுகிறது. பூகோள அரசியல் மேலாதிக்கம், செல்வாக்கு மண்டலங்கள், சந்தைகள், இன்றியமையாத வளங்கள் மீதான கட்டுப்பாடு, மற்றும் மலிவு உழைப்புக்கான அணுகல் ஆகியவற்றிற்கான, முதலாவதும் முக்கியமுமாக அமெரிக்கா உட்பட, பிரதான ஏகாதிபத்திய அரசுகளின் கட்டுப்பாடற்ற உந்துதல், தவிர்க்கவியலாமல் போருக்கு இட்டுச் செல்கின்றன.
17. “பயங்கரவாதத்தின் மீதான போர்” அல்லது “மனித உரிமைகள்” என்ற சாக்குப்போக்கின் கீழ், ஏகாதிபத்திய நாடுகளும் அவற்றின் உள்ளூர் முதலாளித்துவ கூட்டாளிகளும் இராணுவ வன்முறையைப் பயன்படுத்துவதை சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கிறது. வெளிநாட்டு இராணுவங்கள் தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதை எதிர்க்கும் அனைவரையும் அரசாங்கமும் ஊடகங்களும் “பயங்கரவாதிகள்” என்று முத்திரை குத்துகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி இந்த ஏகாதிபத்திய-உந்துதல் கொண்ட அவதூறைக் கண்டனம் செய்வதுடன், நவ-காலனித்துவ படையெடுப்பாளர்களுக்கு எதிராக தங்களையும், தங்கள் வீடுகளையும் தங்கள் நாடுகளையும் பாதுகாக்க மக்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்கிறது. இந்தக் கொள்கை ரீதியான நிலைப்பாடு, ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலோ அப்பாவி பொதுமக்களை குறிவைக்கும் வன்முறை நடவடிக்கைகளுக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் எதிர்ப்பைக் குறைக்காது. பயங்கரவாதம் என்று சட்டபூர்வமாக வரையறுக்கின்ற இத்தகைய நடவடிக்கைகள், அரசியல்ரீதியில் பிற்போக்குத்தனமானவையாகும். அப்பாவி பொதுமக்கள் மீதான படுகொலைகள் பொதுமக்களை கோபப்படுத்துகிறது, திசைதிருப்புகிறது மற்றும் குழப்புகிறது. இது ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டிற்குள் மதவெறி மற்றும் இனவாத பிளவுகளை ஆழப்படுத்துகிறது. சர்வதேச அளவில் பயங்கரவாதம் நடைமுறைப்படுத்தப்படும்போது, அது தொழிலாள வர்க்க ஒற்றுமைக்கான போராட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மேலும், ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ நாடுகளில் உள்ள சக்திகளின் கைகளில் அது விளையாடுகிறது. அவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளைப் பயன்படுத்தி போரில் ஈடுபடுவதை நியாயப்படுத்துகிறார்கள்.
18. 1991 இல் ஸ்டாலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததில் இருந்து, ஒட்டுமொத்த உலகமும் எப்போதும் விரிவடைந்து வரும் ஏகாதிபத்திய போர் சுழலில் சிக்கியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளும், துருக்கி போன்ற அவற்றின் பிராந்திய கூட்டாளிகளும், ஆப்கானிஸ்தான் முதல் ஈராக், சிரியா, லிபியா மற்றும் ஏமன் வரையிலான நாடுகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு, பல மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் ரஷ்யாவை இலக்கு வைத்து நேட்டோவின் கிழக்கு ஐரோப்பா நோக்கிய விரிவாக்கம் ஆகியவை, பிப்ரவரி 2022 இல் உக்ரேனில் போர் வெடிப்பதற்கு இட்டுச் சென்றன. ரஷ்யா மற்றும் சீனாவை இலக்கு வைத்து, உலகை மீள்பங்கீடு செய்வதற்கான அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளின் போர் உந்துதல், இப்போது ரஷ்யாவுடனான ஒரு போராக மாறிவிட்டது. ஒரு அணுவாயுத மூன்றாம் உலகப் போர் அபாயம் அதிகரித்து வருவதை, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஏகாதிபத்திய போருக்கு எதிராக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பாரியளவில் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே முடிவுக்குக் கொண்டுவர முடியும்.
19. ஏகாதிபத்திய நேட்டோ சக்திகளால் தொடங்கப்பட்ட லிபியா மற்றும் சிரியாவில் இடம்பெற்ற ஆட்சி மாற்றப் போர்களை துருக்கிய ஆளும் வர்க்கம் ஆதரித்தது. இந்தப் போர்கள் 2011 இல் துனிசியா மற்றும் எகிப்தில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிகளுக்கு ஏகாதிபத்தியத்தின் பிரதிபலிப்பாக இருந்தன. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணிக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்படும் துருக்கிய ஆளும் வர்க்கம், மத்திய கிழக்கு, கிழக்கு மத்தியதரைக் கடல், வட ஆபிரிக்கா மற்றும் காகசஸில் இயற்கை வளங்கள் மற்றும் புவிசார் அரசியல் நலன்களை மறுபகிர்வு செய்வது தொடர்பான தொடர்ச்சியான போராட்டத்தில், அதன் நலன்களை முன்னேற்றுவதற்கான முக்கிய வழிமுறையாக அமெரிக்க-நேட்டோவிற்கும், ரஷ்யா மற்றும் சீனாவிற்கும் இடையிலான சூழ்ச்சிகளையும், வெளிப்படையான அல்லது மறைமுக இராணுவத் தலையீடுகளையும் காண்கிறது.
உலகை மறுபங்கீடு செய்வதற்கான ஒரு பரந்த ஏகாதிபத்திய உந்துதலின் பாகமாக, துருக்கிக்கும் கிரேக்கத்துக்கும் இடையிலான பழைய மோதல் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது. இது, நிச்சயமற்ற விளைவுகளைக் கொண்ட ஒரு நேரடி இராணுவ மோதலுக்கான ஆபத்தான சாத்தியத்தை எழுப்புகிறது. துருக்கிய மற்றும் கிரேக்க தொழிலாள வர்க்கமானது “தங்கள்” ஆளும் வர்க்கங்களின் இராணுவவாதத்தையும், தேசியவாதத்தையும் நிராகரிக்கவும், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தைச் சுற்றி தங்கள் படைகளை ஒன்றிணைக்கவும், சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. நேட்டோவை விட்டு வெளியேறி இந்த ஏகாதிபத்திய போர் அமைப்பின் தளங்களை மூடுவதற்கான கோரிக்கை இந்தப் போராட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
20. சைப்ரஸ், பாலஸ்தீனம், சிரியா, லிபியா, ஈராக், யேமன், ஆப்கானிஸ்தான் மற்றும் ஏனைய அனைத்து ஒடுக்கப்பட்ட நாடுகளிலும் உள்ள ஆக்கிரமிப்புப் படைகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது. துருக்கிய ஆளும் வர்க்கமானது, இந்தப் போர்கள், தலையீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளில் பங்கேற்பதை சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கிறது என்பதுடன், பரந்த யூரேசிய பிராந்தியங்களில் மேலாதிக்கம் செலுத்துவதற்காக குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனாவை இலக்கு வைக்கும் அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பின் உலகளாவிய ஆபத்துகள் குறித்தும் வெகுஜனங்களை எச்சரிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சியோனிச இஸ்ரேலின் பிராந்திய நலன்களுக்கு தடையாகக் காணப்படும் ஈரான் மற்றும் பிற சக்திகளுக்கு எதிரான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.
ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அவற்றின் முதலாளித்துவ கூட்டாளிகளின் இராணுவவாதம் மற்றும் போர் திட்டங்களுக்கு எதிரான பரந்த வெகுஜன போராட்டங்களை சோசலிச சமத்துவக் கட்சி ஊக்குவித்து ஆதரிக்கிறது. ஆனால், போருக்கான காரணங்கள் சமூகத்தின் பொருளாதார கட்டமைப்பிலும் தேசிய-அரசுகளாக அதன் அரசியல் பிளவுகளிலும் பொதிந்துள்ளன என்ற உண்மையை எடுத்துக் கொண்டால், ஏகாதிபத்திய இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டம், ஒரு சர்வதேச புரட்சிகர மூலோபாயம் மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் அளவிற்கு மட்டுமே வெற்றிகரமாக இருக்க முடியும். ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கம், அரசாங்கங்கள் தங்கள் கொள்கைகளை மாற்ற வேண்டும் என்று கோரும் திவாலான முன்னோக்கை நிராகரிக்க வேண்டும். தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி போருக்கு மூல காரணமான முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டுவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
21. சோசலிச சமத்துவக் கட்சி, போர் எதிர்ப்பு இயக்கத்திற்கான அத்தியாவசிய அரசியல் அடித்தளங்களாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பின்வரும் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறது:
- போருக்கு எதிரான போராட்டம் என்பது, சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதன் பின்னால் மக்கள்தொகையில் உள்ள அனைத்து முற்போக்கான கூறுபாடுகளையும் ஐக்கியப்படுத்த வேண்டும்.
- புதிய போர்-எதிர்ப்பு இயக்கம் முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிசமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படைக் காரணமான நிதி மூலதனத்தின் சர்வாதிகாரம் மற்றும் பொருளாதார அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தைத் தவிர, போருக்கு எதிரான எந்தவொரு தீவிரமான போராட்டமும் இருக்க முடியாது.
- ஆகவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கம், அவசியமான, முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முற்றிலும் மற்றும் ஐயத்திற்கிடமின்றி சுயாதீனமானதாகவும், அவற்றுக்கு விரோதமானதாகவும் இருக்க வேண்டும்.
- எல்லாவற்றிற்கும் மேலாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை, சர்வதேச அளவில் அணிதிரட்ட வேண்டும். தேசிய அரசு அமைப்பு முறையை ஒழித்துக்கட்டி, உலக சோசலிச கூட்டமைப்பை நிறுவுவதை மூலோபாய நோக்கமாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கால், முதலாளித்துவ வர்க்கத்தின் நிரந்தரப் போரை எதிர்கொள்ள வேண்டும். இது, பூகோள வளங்களின் பகுத்தறிவு மற்றும் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை சாத்தியமாக்குவதுடன், மேலும் இந்த அடிப்படையில், வறுமையை ஒழித்து, மனிதக் கலாச்சாரத்தை புதிய உயரங்களுக்கு உயர்த்தும்.
முதலாளித்துவ அரசு, ஜனநாயகம் மற்றும் தொழிலாளர் அதிகாரம்
22. சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான இன்றியமையாத முன்நிபந்தனை தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் தொழிலாளர் அதிகாரத்தை ஸ்தாபிப்பதும் ஆகும். தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கான போராட்டத்தில், தனக்குக் கிடைக்கும் அனைத்து ஜனநாயக மற்றும் சட்டபூர்வ உரிமைகளையும் பயன்படுத்த வேண்டும் என்றாலும், பரந்த வரலாற்று அனுபவத்தில், முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ அரசின் தற்போதைய நிறுவனக் கட்டமைப்பிற்குள் சமூகத்தின் சோசலிச மறுஒழுங்கமைப்பை அது நடத்த முடியாது என்பதை நிரூபித்துள்ளது. வர்க்க ஆட்சியின் ஒரு கருவியான அரசு பற்றிய உன்னதமான மார்க்சிய வரையறையானது, “வெறுமனே ஆயுதமேந்திய மனிதர்களை மட்டுமல்ல, சடரீதியான துணை நிறுவனங்கள், சிறைச்சாலைகள் மற்றும் அனைத்து வகையான கட்டாய நிறுவனங்களையும் அரசு உள்ளடக்கியுள்ளது” (ஏங்கல்ஸ்). இது, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததை விட இன்று இன்னும் உண்மையாக உள்ளது.
சீர்திருத்தவாதிகள் வழக்கமாக வலியுறுத்துவது போல, அரசு சமூக மோதலின் நடுநிலை நடுவர் அல்ல. சமூகம் சமரசம் செய்ய முடியாத பகைமை வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ளது என்பதற்கு அதன் இருப்பே சாட்சியமளிக்கிறது. முதலாளித்துவ அரசு என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் ஒரு கருவியாகும். சட்ட விஷயமாக இருந்தாலும்கூட, முதலாளித்துவம் அதன் அடிப்படை வர்க்க நலன்களுக்கு ஒரு ஆபத்தை உணரும் போது, அடிப்படை அரசியலமைப்பு பாதுகாப்புகள் மற்றும் நடைமுறைகளை ஒதுக்கித் தள்ளும் உரிமையைக் கொண்டுள்ளது.
23. ஜூலை 15, 2016 அன்று, துருக்கியில் நேட்டோ ஆதரவிலான இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி துருக்கிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தீவிர எச்சரிக்கையாக இருந்தது. பாரிய எதிர்ப்பால் ஆட்சிக்கவிழ்ப்பு சதி தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து “ஜனநாயகத்தின் மறுமலர்ச்சி” துருக்கியில் ஏற்படவில்லை. மாறாக, அடிப்படை ஜனநாயக உரிமைகளை பெருகிய முறையில் ஒழித்துக்கட்டும் ஒரு ஜனாதிபதி ஆட்சி கட்டமைக்கப்பட்டது. முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி மற்றும் சமூக சமத்துவமின்மையின் முடிவற்ற வளர்ச்சியில் இருந்து எழும் புவிசார் அரசியல் மற்றும் வர்க்கப் பதட்டங்கள், ஜனநாயக ஆட்சி வடிவங்களின் உலகளாவிய பொறிவுக்கு அடித்தளமிடுகின்றன. வெளிநாடுகளில் போருக்குச் செல்லவும், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கித் தள்ளவும் தயாராகி வரும் ஆளும் வர்க்கங்கள், ஒவ்வொரு நாட்டிலும் அதிவலதுசாரிகளை பலப்படுத்தி, சர்வாதிகார ஆட்சிகளை நோக்கித் திரும்புகின்றன.
24. துருக்கியில் தனது ஆட்சியை நியாயப்படுத்தவும், வெளிநாடுகளில் தனது இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும், ஜனநாயக வாய்வீச்சைப் பயன்படுத்தும் அதே வேளையில், சமகால துருக்கிய குடியரசின் அரசு “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் இணையற்ற அளவிலான அடக்குமுறை வழிமுறைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது: ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு சிறை அமைப்பு; ஒரு பாரிய மற்றும் கனரக ஆயுதமேந்திய போலீஸ் படை; முதலாளித்துவ சட்டக் கொள்கைகளைக் கூட மிதித்துத் தள்ளும் மற்றும் அரசியல் முடிவுகளால் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சட்ட அமைப்புமுறை; அவசரகால நிலை இயல்பாக்கப்படும் ஒரு அரசாங்க வடிவம்; இராணுவவாத மற்றும் ஜனநாயக விரோத உணர்வுகளால் நிரம்பிய ஒரு பிரமாண்டமான சக்திவாய்ந்த மற்றும் ஆடம்பரமாக நிதியளிக்கப்பட்ட இராணுவ சக்தி; மற்றும் அசாதாரண அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள ஒரு பரந்த “தேசிய பாதுகாப்பு” எந்திரம் என்பன குறிப்பிடத்தக்கவை. இந்த நிறுவனங்கள் அனைத்தின் மீதும் மக்கள் எந்தவிதமான திறமையான மேற்பார்வையையும் கட்டுப்பாட்டையும் நடைமுறையில் செலுத்துவதில்லை.
25. கடந்த காலத்தில் நிறுவப்பட்ட ஜனநாயக உரிமைகள் கடுமையாக அரிக்கப்பட்டுவிட்டன. ஜனநாயகத்தைப் பற்றிய புரிதல் பணக்காரர்களின், பணக்காரர்களால், மற்றும் பணக்காரர்களுக்கான விதியாக மாறிவிட்டது. ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் பெரு வர்த்தகர்களின் ஆதரவுடன் முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் ஏகபோகங்களை உடைப்பதை தடுக்கும் ஜனநாயக விரோத தேர்தல் சட்டங்களால் வாக்களிக்கும் உரிமையும், தேர்தலில் நிற்கும் உரிமையும் முறியடிக்கப்படுகிறது. தற்போதுள்ள தேர்தல் அமைப்பு, அரசியல் ஸ்தாபனத்தை எதிர்க்கும் கட்சிகளின் திறமையான பங்கேற்பை விலக்குகிறது. இந்த அடிப்படை ஜனநாயக உரிமையை புறக்கணிக்கும் “அறங்காவலர்களை” திணிப்பது இயல்பாக்கப்பட்டுவிட்டது. தேர்தல் வரம்புகள், நிதி உதவி மற்றும் வாக்குச்சீட்டு அணுகல் சட்டங்கள் என்பன முதலாளித்துவ ஆட்சிக்கு எந்தவொரு சவாலையும் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், முக்கிய ஊடக நிறுவனங்கள் சக்திவாய்ந்த பெருநிறுவன நலன்களால் கட்டுப்படுத்தப்படும் போது, பத்திரிகை சுதந்திரத்திற்கு அதிக மதிப்பு இல்லை. அனைத்திற்கும் மேலாக, மாற்றுக் கருத்துக்களைக் கேட்பதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ள இணையம், அதிகரித்தளவில் கடுமையான ஒழுங்குமுறை மற்றும் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது.
26. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளது. ஜனநாயகம் இல்லாமல் சோசலிசம் இருக்க முடியாது என்பதைப் போலவே, சோசலிசம் இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியாது. பொருளாதார சமத்துவம் இல்லாமல் அரசியல் சமத்துவம் சாத்தியமற்றது. போருக்கு எதிரான போராட்டத்தைப் போலவே, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் விரிவுபடுத்துவதற்குமான போராட்டத்திற்கும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வும் அவசியமாகும். ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் பின்னிப்பிணைந்திருப்பது, குறிப்பாக துருக்கி போன்ற தாமதமாக முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த நாடுகளில், 20 ஆம் நூற்றாண்டு மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களின் வரலாற்றுப் படிப்பினைகளால் நிரூபிக்கப்பட்டபடி, லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது:
- ஒடுக்கப்பட்ட மற்றும் முன்னாள் காலனித்துவ அல்லது அரைக் காலனித்துவ நாடுகள் உட்பட, உலகில் எந்தவொரு நாட்டிலும், முதலாளித்துவ ஆளும் வர்க்கமோ அல்லது அதன் அரசியல் பிரதிநிதிகளோ ஒருபோதும் முற்போக்கான பாத்திரத்தை வகிக்க மாட்டார்கள்.
- அனைத்து நாடுகளிலும், சமரசம் இன்றி ஒரு ஜனநாயக வேலைத்திட்டத்தை செயல்படுத்தவும், பாதுகாக்கவும் இயலுமை கொண்ட ஒரே அடிப்படை புரட்சிகர சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். ஜனநாயகத்திற்கான போராட்டம், சர்வதேச அளவில் சோசலிசம் மற்றும் தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்துடன் இணைந்துள்ளது. வறிய விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை வழிநடத்தக்கூடிய, ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே, உலக சோசலிசப் புரட்சியின் பாகமாக தொழிலாளர்களின் அதிகாரத்தை ஸ்தாபித்து, அதன் வரலாற்றுக் கடமைகளை தீர்க்க முடியும்.
- எந்தவொரு நாட்டிலும் இடம்பெறும் போராட்டம் ஒரு சர்வதேச மூலோபாயத்தால் வழிநடத்தப்பட வேண்டும். துருக்கிய தொழிலாளர்களைப் பொறுத்தவரை, மத்திய கிழக்கு, காகசஸ், பால்கன் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை, தேசியம், மதம் அல்லது ஏனைய பிரிவுகளையும் கடந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பிராந்திய ஆளும் உயரடுக்கினருக்கும், அவர்களின் ஏகாதிபத்திய எஜமானர்களுக்கும் எதிரான, சோசலிசத்திற்கான பொதுவான போராட்டத்தில், ஒன்றிணைத்தால் மட்டுமே சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியும்.
27. தொழிலாளர் அதிகாரத்தை நிறுவுவதற்கு, முதலாளித்துவ அரசின் தற்போதைய நிறுவனங்களுக்கு சோசலிச வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் மிக அதிகம் தேவைப்படுகிறது. புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களின் போக்கில் தோன்றி, மக்களில் தொழிலாள வர்க்கப் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் உண்மையான பங்கேற்பு, ஜனநாயகத்தின் புதிய வடிவங்கள் மற்றும் கட்டமைப்புகள் தொழிலாளர் அரசாங்கத்தின் அடித்தளங்களாக உருவாக்கப்பட வேண்டும்; அதாவது, தொழிலாளர்களால், தொழிலாளர்களுக்காக, தொழிலாளர்களின் அரசாங்கம்.
பொருளாதார வாழ்க்கையின் சோசலிச மாற்றத்திற்கு அவசியமான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதில், அத்தகைய அரசாங்கத்தின் கொள்கை, முடிவெடுக்கும் செயல்முறைகளில் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக ரீதியான பங்கேற்பின் பரந்த விரிவாக்கத்தையும், அவற்றின் மீதான அதன் கட்டுப்பாட்டையும் தீவிரமாக ஊக்குவிப்பதும் ஆகும். ஜனநாயக செயல்முறைகளை முடக்கும் அல்லது மக்களுக்கு எதிரான சதித்திட்ட மையங்களாக செயல்படும் தற்போதைய நிறுவனங்களை ஒழித்துக் கட்டுவதை இது ஆதரிக்கும். இந்த மற்றும் பிற அவசியமான ஆழமான ஜனநாயகத் தன்மை கொண்ட மாற்றங்கள், வெகுஜனங்களால் தீர்மானிக்கப்பட வேண்டும், சோசலிச நனவு ஊட்டப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் பாரிய அணிதிரட்டல் சூழலில் மட்டுமே இவை சாத்தியமாகும்.
தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம்
28. அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் முகவர்களிடம் இருந்து தொழிலாள வர்க்கத்தின் நிபந்தனையற்ற அரசியல் சுயாதீனம் தேவைப்படுகிறது. தொழிலாள வர்க்கமானது, ஏனைய வர்க்க நலன்களைக் கொண்டிருக்கின்ற அரசியல் பிரதிநிதிகளுடன் அரசியல்ரீதியில் பலவீனமான சமரசங்களால் பிணைக்கப்பட்டிருந்தால், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒருபுறம் இருக்க, அதிகாரத்திற்கு வர முடியாது.
முதலாவதாகவும் முக்கியமாகவும் இதன் பொருள், முதலாளித்துவ எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சிகளுடன் ஒப்பிடும்போது, “குறைவான தீமையை” பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்ற பழமையான மற்றும் மோசடியான புராணத்தை உறுதியாக நிராகரிப்பது அவசியமாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் மிக முக்கியமான அரசியல் பொறுப்புகளில், தொழிலாள வர்க்கம் முழு முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்துடன், ஒரு தீர்க்கமான மற்றும் அவசியமான முறிவை ஏற்படுத்த ஊக்குவிக்கிறது.
29. சோசலிச சமத்துவக் கட்சியானது, அரசியல் போக்குகளை மதிப்பீடு செய்வதில், இந்த அல்லது மற்றொரு கேள்வியில், அவற்றின் குறிப்பிட்ட நிலைப்பாடுகளை கொண்டிருக்கவில்லை, மாறாக அவற்றின் வரலாறு, வேலைத்திட்டம், முன்னோக்கு, வர்க்க அடித்தளம் மற்றும் நோக்குநிலை ஆகியவற்றையே தீர்க்கமான அளவுகோலாகக் கொண்டிருக்கிறது. தேர்தல் கூட்டணிகளை உருவாக்குவதன் மூலம், தொழிலாள வர்க்கம் ஒரு அரசியல் தடுமாற்றத்திற்கு இட்டுச் செல்லப்பட்டதற்கு வரலாறு எண்ணற்ற உதாரணங்களை வழங்குகிறது. இந்த தேர்தல் கூட்டணிகள், வாக்குச் சாவடிகளில் தற்காலிகமான ஆதாயங்களை அடைவதற்காக, தொழிலாளர்கள் தங்களது மிக முக்கியமான அரசியல், சமூக மற்றும் பொருளாதார நலன்களை தியாகம் செய்ய வேண்டும் என்று கோரின. 1930களில் ஸ்டாலினிஸ்டுகளாலும் சமூக-ஜனநாயகக் கட்சிகளாலும் உருவாக்கப்பட்ட “மக்கள் முன்னணி” கூட்டணிகள், குறுகிய பார்வை கொண்டவர்களின் விளைவுகளுக்கு மிகவும் துன்பகரமான உதாரணங்களை வழங்குகின்றன. மேலும், இவை பரந்த அடிப்படையிலான, பல-வர்க்க மற்றும் பொருந்தாத சமூக நலன்களைக் கொண்டிருக்கும் கூட்டணிகளைப் பின்தொடர்வதில் வரலாற்று மற்றும் நீண்டகால நலன்களை துரோகத்தனமாக கைவிட்டன.
தொடரும்.....