இனப் படுகொலையையும் இனச் சுத்திகரிப்பையும் மூடிமறைக்கும் காஸா “சமாதான” உடன்படிக்கை அம்பலப்பட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காஸா நகரில் இஸ்ரேலிய வான் மற்றும் தரைவழி தாக்குதலால் ஏற்பட்ட அழிவுக்கு மத்தியில், பாலஸ்தீனியர்கள் ஒரு லாரியில் இருந்து தண்ணீர் சேகரிக்க சிறிய கொள்கலன்களை எடுத்துச் செல்கின்றனர். அக்டோபர் 16, 2025 வியாழக்கிழமை. [AP Photo/Jehad Alshrafi]

அக்டோபர் 9 அன்று, ஹமாஸும் இஸ்ரேலும் மீதமுள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் விடுவிப்பது மற்றும் காஸாவை இஸ்ரேல் நிரந்தரமாக ஆக்கிரமிப்பது சம்பந்தப்பட்ட ஒரு “சமாதான” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான இந்த உடன்படிக்கை, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அனைத்துப் பிரிவுகளாலும், மத்திய கிழக்கில் உள்ள முதலாளித்துவ ஆட்சிகளாலும், விதிவிலக்கு இல்லாமல், “சமாதானத்தை” நோக்கிய ஒரு படியாகப் பாராட்டப்பட்டது.

இந்த உடன்படிக்கை, “மத்திய கிழக்கில் நம்பிக்கையின் அரிய தருணம்” என்றும், “பேரழிவை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ட்ரம்பின் முயற்சிகளைப் பாராட்ட வேண்டும்” என்றும் பைனான்சியல் டைம்ஸ் பாராட்டியது. நியூ யோர்க் டைம்ஸ் இதை “நம்பிக்கைக்குரியது” என்று அழைத்தது. அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி உறுப்பினரான நியூ யோர்க் மேயர் வேட்பாளரான ஜோஹ்ரான் மம்தானி, இந்த உடன்படிக்கை குறித்த பிரமைகளை பரப்பி, “இனப்படுகொலை முடிவுக்கு வந்தால், அது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்று நான் நினைக்கிறேன், ட்ரம்ப் பாராட்டுக்கு தகுதியானவர்” என்று அறிவித்தார்,

மத்திய கிழக்கிலும், ஆசியாவிலும் உள்ள முதலாளித்துவ ஆட்சிகள் இந்த உடன்படிக்கையையும் அதன் வடிவமைப்பாளரான ட்ரம்பையும் புகழ்ந்து பாராட்டின. “நமது பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கான வாய்ப்பின் ஜன்னல் திறக்கப்பட்டுள்ளதாக” துருக்கி அறிவித்தது. ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வெளிட்ட ஒரு கூட்டு அறிக்கையில், “ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்பின் தலைமையையும், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அவரது உண்மையான முயற்சிகளையும் தங்கள் அரசாங்கங்கள் வரவேற்பதாகவும், அமைதிக்கான பாதையைக் கண்டுபிடிக்கும் அவரது திறனில் தங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாகவும்” அறிவித்தனர்.

ஒரு இனப்படுகொலை செய்துவரும் போர் வெறியரும், சர்வாதிகாரியுமான ட்ரம்ப் மத்திய கிழக்கில் “சமாதானத்தை” நாடுகிறார் என்ற அபத்தமான கூற்றுக்களுக்கு மாறாக, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இந்த உடன்படிக்கை “பாலஸ்தீனியர்களின் உரிமைகளை நசுக்கி, எரிசக்தி வளம்மிக்க மத்திய கிழக்கு மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டைப் வலுப்படுத்தும் ஒரு ஏகாதிபத்திய பாதுகாவலரை உருவாக்குகிறது” என்று விளக்கியது.

இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, WSWS ன் மதிப்பீட்டின் சரியான தன்மை மறுக்க முடியாது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த “சமாதான” உடன்படிக்கை, காஸாவின் பெரும் பகுதியை நிரந்தரமாக இஸ்ரேல் ஆக்கிரமித்து இணைத்துக் கொள்வதையும், தினசரி படுகொலைகள் மற்றும் மக்களை வேண்டுமென்றே பஞ்சத்துக்குள் தள்ளுவதையும் புனிதப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் இன்னும் காஸா மக்களை ஆக்கிரமித்தும், படுகொலைகள் செய்தும், பட்டினியால் வாட்டி வதைத்தும் வருகிறது என்ற உண்மையைப் பொருட்படுத்தாமல், “சமாதானம்” அடைந்துவிட்டது என்ற அபத்தமான பொய்யானது, அமெரிக்காவையும் சர்வதேச ஊடகங்களையும் இனப்படுகொலை பற்றிய செய்திகளை மறுபடியும் நிறுத்துவதுக்கு அனுமதித்துள்ளது.

“போர் நிறுத்த” உடன்படிக்கை கையெழுத்திட்டதிலிருந்து, இஸ்ரேல் 80 க்கும் மேற்பட்ட தனித்தனி மீறல்களை மேற்கொண்டுள்ளது. இதில் 100 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 230 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கொடிய நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேலிய இராணுவம் டசின் கணக்கான தனித்தனி தாக்குதல்களில் 45 பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்தது.

ஒவ்வொரு நாளும் காஸாவுக்குள் 600 உதவி லாரிகளை அனுமதிப்பதாக உறுதியளித்த இஸ்ரேல், அதில் பாதி எண்ணிக்கையை மட்டுமே அனுமதித்ததோடு, பின்னர் அது உதவி விநியோகத்தை முற்றிலும் நிறுத்துவதாக அறிவித்தது.

“சமாதான” உடன்படிக்கை, இஸ்ரேலை காஸாவின் பெரும்பகுதியை அதன் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு, அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நிரந்தரமாக்குவதற்கான களத்தை அமைத்துள்ளது.

கடந்த புதன்கிழமை, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் தனது வருகை “ஒரு குழந்தையை கண்காணிப்பது போல [போர் நிறுத்தத்தை] கண்காணிப்பதற்கான நோக்கம் கொண்டதல்ல” என்று கூறினார். இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாலஸ்தீனியர்களை தொடர்ந்தும் படுகொலை செய்வதற்கு இஸ்ரேல் நிர்வாகத்துக்கு பச்சை விளக்கு காட்டப்பட்டுள்ளது என்பதாகும்.

“போர் நிறுத்தத்திற்கு” பின்னால் உள்ள உண்மையான திட்டத்தை வான்ஸ் தெளிவுபடுத்தினார். “இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், புதிய காஸா கட்டுமானத்தை ஆரம்பிப்பதற்கான பரிசீலனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன” என்று அவர் கூறினார்.

இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ட்ரம்ப் அறிவித்த “சமாதான” உடன்படிக்கைக்கும், அமெரிக்கா/இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஸா மற்றும் அவரது காஸா “உல்லாச நகர” கட்டுமானத்திற்கான திட்டங்களுக்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பதாகும். மாறாக, இந்த “சமாதான” உடன்படிக்கை, காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை ஒருங்கிணைத்து நிலைநிறுத்துவதுடன், படுகொலைகள், பஞ்சம் மற்றும் அங்கு வாழும் மக்களின் கட்டாய இடம்பெயர்வுக்கான நிலைமைகளை உருவாக்கும்.

கடந்த புதன்கிழமையன்று வெளிவந்த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் “காஸாவை இரண்டாகப் பிரிக்கும் அமெரிக்காவின் திட்டம் - இஸ்ரேலால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மண்டலம், ஹமாஸால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மண்டலம்” என்ற கட்டுரை, இஸ்ரேலின் காஸா மீதான ஆக்கிரமிப்பையும், அதன் நீண்டகால இணைப்புத் திட்டத்தின் அடித்தளத்தையும் தெளிவுபடுத்துகிறது. மேலும், காஸாவை இரண்டு மண்டலங்களாகப் பிரிக்கும் அமெரிக்க ஆதரவிலான இந்த திட்டத்தையும் அது கோடிட்டுக் காட்டுகிறது, மறுசீரமைப்பு உதவிகள் “பாதுகாப்பான மண்டலங்கள்” என்று முத்திரை குத்தப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே செல்கின்றன. ஜெராட் குஷ்னர் மற்றும் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம், இஸ்ரேலிய இராணுவ பாதுகாப்பின் கீழ் ஒரு “புதிய காஸாவை” கட்டியெழுப்புவதே இதன் நோக்கம் என்று கூறினார்.

உண்மையில், இந்தத் திட்டம் காஸாவை நிரந்தரமாக பிரித்து வெற்றி கொள்வதற்கான ஒரு வரைபடமாகும். ஜேர்னல் அப்பட்டமாக கூறுவது போல், “காலப்போக்கில், இஸ்ரேல் ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்து அதிக நிலப்பரப்பை கைப்பற்ற முடியும்.” மேலும், “பாதுகாப்பான பகுதிகளின்” விரிவாக்கம் என்று அழைக்கப்படுவது, கொலை, பட்டினி மற்றும் இடப்பெயர்வு மூலம் காஸாவை படிப்படியாக இணைப்பதைக் குறிக்கிறது. இவ்வாறாக, இந்தத் திட்டம் காஸாவை அழிப்பதற்கும், எஞ்சியுள்ளவற்றை இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு சேவை செய்யும் ஆக்கிரமிக்கப்பட்ட, இராணுவமயமாக்கப்பட்ட காலனியாக மாற்றுவதையும் குறிக்கிறது.

காஸாவின் சில பகுதிகளை இஸ்ரேல் இணைத்துக் கொள்வது, உடன்பாட்டின் கட்டமைப்பிற்குள், காஸா அரசாங்கத்திற்கான வெளிப்படையான காலனித்துவ ஏற்பாட்டின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், காஸா, “ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப் தலைமையில்” முன்னாள் [இங்கிலாந்து] பிரதமர் டோனி பிளேயர் உட்பட ஒரு “சமாதான வாரியத்தால்” நிர்வகிக்கப்படும்.

இந்த ஏற்பாடு, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும். இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மக்களின் சுயநிர்ணய உரிமையையும் காலடியில் போட்டு மிதிக்கிறது.

காஸாவில் ஏற்பட்ட “சமாதான” ஒப்பந்தம், மேற்குக் கரையை இஸ்ரேல் இணைப்பதற்கான நிபந்தனைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த வாரம், “இஸ்ரேல் அரசின் சட்டங்கள், நீதி அமைப்பு, நிர்வாகம் மற்றும் இறையாண்மை ஆகியவை யூதேயா மற்றும் சமேரியாவில் உள்ள அனைத்து குடியேற்றப் பகுதிகளுக்கும் பொருந்தும்” என்று அறிவிக்கும் மசோதாவை முன்வைத்தபோது, இதற்கு இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 25-24 என்ற வாக்குகளில் வாக்களித்தனர்.

காஸா உடன்படிக்கையின் மோசடியானது, காஸா இனப்படுகொலையை நிறுத்துவதற்கும் ஏகாதிபத்திய போர் மற்றும் நவ-காலனித்துவத்தை எதிர்ப்பதற்கும் போராடும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீண்டகால படிப்பினைகளைக் கொடுத்துள்ளது. டெல் அவிவ், வாஷிங்டன் அல்லது மத்திய கிழக்கின் தலைநகரங்களில் இருந்தாலும் சரி, இந்தக் குற்றத்தை ஆதரிக்கும் அல்லது மன்னிக்கும் ஒவ்வொரு அரசாங்கமும், அரசியல் போக்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு எதிரியாக அம்பலப்படுத்தப்படுகின்றன. பாலஸ்தீன மக்களின் மீதான காலனித்துவ அடிமைத்தனத்தை நிரந்தரமாக்கும் மற்றும் நடந்து வரும் இனப்படுகொலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கும் ஒரு உடன்பாட்டிற்கு அவர்கள் தங்கள் ஒப்புதல் முத்திரையை வழங்கியுள்ளனர்.

இரண்டு வருடங்களாக இடம்பெற்றுவரும் பாரிய படுகொலைகளுக்குப் பின்னர், இனப்படுகொலையை எதிர்க்க அமெரிக்கா அல்லது ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகத்திற்கு அழுத்தம் கொடுப்பதை இலக்காகக் கொண்ட அனைத்து எதிர்ப்பு போராட்டங்களும் முற்றிலும் பயனற்றவை என்பதை சுட்டிக் காட்டியுள்ளன.

நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையை நிறுத்துவதற்கான ஒரே வழி, ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் போருக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய இயக்கத்தை கட்டியெழுப்புவதேயாகும்.

உலக சோசலிச வலைத்தளம் “சமாதான” உடன்படிக்கைக்கு அதன் பதிலில் எழுதியது போல்:

முன்னேறிய நாடுகளில் ஒரு புரட்சிகர இயக்கம் இல்லாததால் தொழிலாள வர்க்கத்தின் ஆதரவை அவர்கள் இழந்துள்ளனர் என்பதுதான் பாலஸ்தீனியர்களின் துயரம் ஆகும். மத்திய கிழக்கில் நீண்டகாலமாக துன்பப்படும் வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை அடைவதற்கும், அமைதியான சகவாழ்வுக்கான ஒரு உண்மையான அடித்தளத்தை ஸ்தாபிப்பதற்குமான ஒரே வழி நிரந்தரப் புரட்சி முன்னோக்கிற்கான போராட்டமாகும்.

அரபு, யூத, ஈரானிய, துருக்கிய மற்றும் குர்திஷ் தொழிலாளர்கள் இந்தப் பிராந்தியத்தில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிராகவும், உலக சோசலிச கூட்டமைப்பின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கில் ஐக்கிய சோசலிச அரசுகளை தோற்றுவிப்பதற்கும், ஒரு பொதுப் போராட்டத்தில் ஐக்கியப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தில், அவர்களின் கூட்டாளிகள் ஏகாதிபத்திய ஆதரவு மற்றும் ஊழல் நிறைந்த சியோனிச மற்றும் அரபு ஆளும் வர்க்கங்களில் காணப்படவில்லை. மாறாக, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தொழிலாள வர்க்கத்தில் காணப்படுகிறார்கள்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதன் தினசரி பத்தரிகையான உலக சோசலிச வலைத் தளமும் போராடி வருகின்ற புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே, இனப்படுகொலை, ஏகாதிபத்தியப் போர் மற்றும் அனைத்து வகையான காலனித்துவ பாணி ஒடுக்குமுறைக்கும் மூல காரணமான முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதற்கு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் மற்றும் தொழில்துறை இயக்கமாக இந்தக் கூட்டணியை உருவாக்குவது அவசியமாகும்.

இனப்படுகொலை மற்றும் போரை உருவாக்கும் முதலாளித்தவ அமைப்புமுறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு நனவான, ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டமாக மில்லியன் கணக்கானவர்களின் கோபத்தை மாற்றுவதே இப்போதுள்ள பணியாகும். சோசலிச சமத்துவக் கட்சியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களையும், இளைஞர்களையும், அதன் பிரிவுகளை கட்டியெழுப்பி, இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளுமாறும், தேசிய மற்றும் மத எல்லைகளைத் தாண்டி ஒன்றிணைந்து, உலக சோசலிச மறு ஒழுங்கமைப்பிற்காக போராடுமாறும் அழைப்பு விடுக்கின்றன.

Loading