இலங்கை: பேராதனைப் பல்கலைக்கழகம் IYSSE ஏற்பாடுசெய்த விரிவுரை மீதான தடையை நியாயப்படுத்த முயற்சிக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டெரன்ஸ் மதுஜித், வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில், “’சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவது எப்படி?’ என்ற தலைப்பிலான பொதுக் கூட்டம் தொடர்பாக பல்வேறு குழுக்கள் எழுப்பிய அக்கறைகளை பல்கலைக்கழகம் நிவர்த்தி செய்ய விரும்புகிறது” என்று கூறினார்.

ஜனவரி 3 அன்று திட்டமிடப்பட்டிருந்த, சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பின் கூட்டத்தை பற்றியே இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தக் கூட்டமானது, அன்று காலை பதில் துணைவேந்தர் ரஞ்சித் பல்லேகம அனுப்பிய கடிதத்தின் விளைவாக தடைசெய்யப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறையில் உள்ள அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கம் (அ.வி.மா.ச.) அனுசரணையளித்திருந்தது.

அந்த ஊடக அறிக்கை, திட்டமிடப்பட்ட கூட்டம் அங்கீகரிக்கப்படாத நிகழ்வு என்று குறிப்பிட்டதோடு மட்டுமன்றி, எதிர்கால கூட்டங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் திணிக்கப்படபோவதையும், இதனால் பல்கலைக்கழகத்தில் கருத்து சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படப்போவதையும் முன்னறிவித்தது.

இந்த வெளிப்படையான ஜனநாயக விரோத நடவடிக்கை, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் கல்வியாளர்கள், புத்திஜீவிகள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் சீற்றத்தைத் தூண்டிவிட்டதால், ஏழு நாட்களுக்குள் துணைவேந்தர் தனது விளக்கத்தை வெளியிட விரைந்தார்.

முதலாவதாக, பதில் துணைவேந்தர் அப்பாவித்தனமாக கூட்டத்தின் தலைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தவே கோரினார் என்று கூறிய மதுஜித், இந்தக் கூட்டம் தடை செய்யப்படவில்லை, என்றார். இந்தக் கோரிக்கை வெளிப்படையான அச்சுறுத்தலுடன் வந்ததால் இந்தக் கூற்று பொய்யானதாகும்.

அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதத்தில், 'கூட்டம் அரசாங்கக் கொள்கைகளை சவால் செய்வதாகத் தோன்றாதபடி” அதன் தலைப்பு “மாற்றப்பட வேண்டும் இல்லையேல் கூட்டம் உடனடியாக இடைநிறுத்தப்படுவதாகக் கருதப்படவேண்டும்' என்று குறிப்பாக அறிவுறுத்தப்பட்டது.

இரண்டாவதாக, மாணவர் அமைப்பான அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கமானது, பல்கலைக்கழகத்தில் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை; அதற்காக ஒப்புதல் பெற தொடர்புடைய அதிகாரிகளை நாடவில்லை என்றும்  அந்த ஊடக அறிக்கை சுட்டிக்காட்டியது. இதன் விளைவாக, அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கம், ஒரு 'சர்வதேச அமைப்பை', அதாவது ஐ.வை.எஸ்.எஸ்.இ.யை கூட்டத்தை நடத்த அனுமதித்தது.

அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கத்தைப் பொறுத்தவரை, கூட்டத்திற்காக விஞ்ஞானத்துறைத் தலைவரிடமிருந்து அனுமதியைப் பெற்று, நிகழ்விற்கான விரிவுரை அறையையும் ஒதுக்கிக்கொண்டு, ஐ.வை.எஸ்.எஸ்.இ.க்குத் தெரிவித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஐ.வை.எஸ்.எஸ்.இ.க்கு மட்டுமன்றி, பிற அமைப்புகளுக்கும் விரிவுரைகளை நடத்த அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கம் அனுசரணை வழங்கியுள்ளது.

அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கம் அனுசரணையளித்த பல விரிவுரைகளை ஐ.வை.எஸ்.எஸ்.இ. நடத்தியுள்ளது: உக்ரைன் போரை எவ்வாறு நிறுத்துவது, என்ற விரிவுரை 22 ஆகஸ்ட் 2023 இடம்பெற்றது; வரலாற்று பொருள்முதல்வாதத்திற்கான அறிமுகம், 26 அக்டோபர் 2023 நடந்தது; 07 டிசம்பர் 2023 அன்று சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய செயலாளர் ஜோ கிஷோர் உரையாற்றிய ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு என்னும் விரிவுரை நிகழ்ந்தது; மற்றும் 21 பெப்ரவரி 2024 அன்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை குறித்து ஒரு உரை இடம்பெற்றது.

சில கல்வியாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுடன் சேர்ந்து பல மாணவர்களும் இந்த விரிவுரைகளில் பங்கேற்று, விவாதத்திலும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

26 அக்டோபர் 2023, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஐ.வை.எஸ்.எஸ்.இ. விரிவுரையில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்

இம்முறைதான், 'சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவது எப்படி?' என்ற தலைப்பில் ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஒரு விரிவுரையை நடத்தவிருந்தபோது, அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கமும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் உரிய அனுமதியைப் பெறவில்லை என பல்கலைக்கழக அதிகாரிகள், குற்றம் சாட்டுகின்றனர்!

இது தற்செயலானதல்ல. புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட, இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை முழுமையாக செயற்படுத்துவதை மையமாக் கொண்டு செயல்படும் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தை ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) மட்டுமே அம்பலப்படுத்தி வருகின்றன. அதனால்தான், பின்னர் வெளியிட்ட மறுப்புக்கள் ஒருபுறம் இருக்க, பிரதமர் அலுவலகத்திலிருந்து விரிவுரை பற்றியும் அதன் நோக்கம் குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ளது.

'பேராதனைப் பல்கலைக்கழகமானது கல்வி சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கும் விமர்சனப்பூர்வமான ஆய்வுகள் மற்றும் அறிவுசார் ஈடுபாட்டு கலாச்சாரத்தை வளர்ப்பதற்குமான அதன் அர்ப்பணிப்பில் உறுதியாக உள்ளது...' என்று பாசாங்குத்தனமாக அறிவித்து துணைவேந்தர் தனது ஊடக அறிக்கையை முடிக்கிறார்.

எவ்வாறாயினும், இந்த 'விமர்சனப்பூர்வமான ஆய்வு மற்றும் அறிவுசார் ஈடுபாட்டைக் கொண்ட கலாச்சாரம்' கடுமையாக வரையறுக்கப்பட உள்ளது. 'பல்கலைக்கழக பாதுகாவலர் தலைமை மார்ஷல் மற்றும் ஏனைய தொடர்புடைய அதிகாரிகள் ஊடாக [கூட்டங்களுக்கு] உப துணைவேந்தர் / துணைவேந்தரிடமிருந்து முன் அனுமதியைப் பெற வேண்டும்' என்ற 'கடுமையான கொள்கையை' பல்கலைக்கழகம் கொண்டுள்ளது என்று முந்தைய பத்தி அறிவிக்கிறது.

பல்கலைக்கழக அதிகாரிகள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக திடீரென்று இந்த 'கடுமையான கொள்கையை' தோண்டி எடுத்துள்ளனர். ஐ.வை.எஸ்.எஸ்.இ.யை தடை செய்யும் கடிதம் தெளிவுபடுத்தியிருப்பது போல், குறிக்கோள் மிகவும் தெளிவாக உள்ளது: அதாவது 'அரசாங்கக் கொள்கைகளை சவால் செய்யும்' ஒரு கூட்டத்தை அல்லது செயல்பாட்டை தடை செய்வதாகும்.

மேலும், ஆங்கிலத்தில் அல்லாமல் சிங்கள மொழியிலான தனது செய்திக் குறிப்பில், துணைவேந்தர் குறிப்பாக ஐ.வை.எஸ்.எஸ்.இ.யை குறிவைப்பதாகத் தெரிகிறது.

'இந்த சங்கங்கள் பல்கலைக்கழகத்தின் அனுமதியின்றி துண்டுப் பிரசுரங்களையும் ஏனையவற்றையும் விநியோகித்து, பீடங்களுக்குள் கூட்டங்களை நடத்தி, பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை நாசப்படுத்த முயற்சித்துள்ளன' என்றும் அது அறிவிக்கிறது.

எங்கள் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஐ.வை.எஸ்.எஸ்.இ. 'அனுமதியின்றி' அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், 'பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை நாசப்படுத்த முயற்சித்தது' என்று அவதூறான குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இது மாணவர்களையும் கல்வியாளர்களையும் அச்சுறுத்துவதற்கும், அரசியல் விஞ்ஞான மற்றும் ஏனைய பீடங்களில் அரசியல் கலந்துரையாடலை நசுக்குவதற்கும், ஐ.வை.எஸ்.எஸ்.இ.யை வளாகத்திற்கு வரவிடாமல் தடுப்பதற்குமான ஒரு முயற்சி என்பது தெளிவாகிறது.

பல்கலைக்கழக அதிகாரத்துவத்தினரும் அரசாங்கமும் பீதியடைந்திருப்பது, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீது திணிக்கத் தயாராகும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மாணவர்கள் எதிர்க்கத் தொடங்குவார்கள் என்பதைப் பற்றியே ஆகும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் செல்வாக்கின் கீழ், மாணவர்கள் ஏற்கனவே ஒரு பிரமாண்டமான சமூக நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புவதோடு, ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்ப உதவுவார்கள், என பீதியடைந்துள்ளனர்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களை நாங்கள் எச்சரிக்கிறோம்: பேச்சுரிமை மற்றும் சங்கங்கள் மீது பேராதனை பல்கலைக்கழக அதிகாரிகள் தொடுத்துள்ள தாக்குதல்களுக்கு பதிலளிக்காவிட்டால் மற்றும் எதிர்த்துப் போராடாமல் விட்டால், ஏனைய பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கும் இது நீட்டிக்கப்படும்.

இலங்கை பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபட உரிமை உண்டு, என்பது நீண்டகால பாரம்பரியம் ஆகும். கடந்த காலங்களில், அரசியல் கட்சிகளும் அவற்றின் இளைஞர் அமைப்புகளும் பல்கலைக்கழகங்களில் அவற்றின் கிளைகளை கொண்டிருந்தன, பொது சொற்பொழிவுகள், கூட்டங்கள் மற்றும் விவாதங்களை ஏற்பாடு செய்துள்ளதுடன் சில சமயங்களில் சர்வதேச பிரமுகர்களை உரையாற்ற அழைத்திருக்கின்றன.

கல்விக்கான நிதியை குறைப்பதற்க்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் வெகுஜன போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதோடு, பல பிரச்சினைகள் குறித்து பிரச்சாரம் செய்துள்ளனர். அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பிற்போக்கு பகிடிவதை சம்பவங்களைப் பயன்படுத்திக்கொண்டு, மாணவர்களின் சட்டபூர்வமான நடவடிக்கைகளைத் தடுக்க சட்டங்களையும் விதிமுறைகளையும் அதிகளவில் கொண்டு வந்துள்ளன.

இப்போது, ​​ஜே.வி.பி./தே.ம.ச. சார்பாக, பேராதனை பல்கலைக்கழக அதிகாரிகள் அரசாங்கக் கொள்கைகளை சவால் செய்யும் அரசியல் நடவடிக்கைகளைத் தடை செய்யத் தயாராகி வருகின்றனர். இது ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் வலதுசாரி ஜனநாயக விரோத தன்மையை மட்டுமன்றி, இலங்கை முதலாளித்துவத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் பிரமாண்டத்தையும் குறிக்கிறது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. மீதும் நடத்தப்படும் இந்தத் தாக்குதலை மாணவர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

·        'சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவது எப்படி?' என்ற ஐ.வை.எஸ்.எஸ்.இ. விரிவுரையின் மீதான தடையை விலக்கிக்கொள்!

·        பேச்சு சுதந்திரத்திலும் கல்வி சுதந்திரத்திலும் கை வைக்காதே!

·        இலவசக் கல்வியைப் பாதுகாத்திடு! தேவைப்படும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், கல்வி வசதிகளை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் பில்லியன் கணக்கான நிதியை ஒதுக்கீடு செய்!

·        பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. கிளைகளைக் கட்டியெழுப்பு!

என ஐ.வை.எஸ்.எஸ்.இ. அழைப்பு விடுக்கின்றது.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. விரிவுரையின் மீதான பேராதனை பல்கலைக்கழக அதிகாரிகளின் தடையைக் கண்டிக்குமாறும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம். பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு  உங்கள் எதிர்ப்புக் கடிதங்களை அனுப்புவதோடு அதன் பிரதிகளை ஐ.வை.எஸ்.எஸ்.இ.க்கும் அனுப்பிவையுங்கள்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர்

மின்னஞ்சல்: vc@pdn.ac.lk

ஐ.வை.எஸ்.எஸ்.இ. மின்னஞ்சல்: iysseslb@gmail.com

மேலும் படிக்க

Loading