முன்னோக்கு

"கடுமையான தாக்குதலுடன்" நிர்வாகத்தைத் தொடங்கும் ட்ரம்ப்க்கு பின்னால், ஜனநாயகக் கட்சியினரும், ஊடகங்களும் அணிவகுத்து நிற்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025 அன்று வாஷிங்டனில் வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையில் பேசுகிறார். [AP Photo/Julia Demaree Nikhinson]

ட்ரம்ப் நிர்வாகம் அதன் பிற்போக்குத்தனமான சர்வாதிகார நடவடிக்கைகளின் தாக்குதலை கட்டவிழ்த்து விடுகின்ற நிலையில், ஜனநாயகக் கட்சியும் அதனுடன் இணைந்த ஊடகங்களும் ட்ரம்புக்கு பின்னால் அணிவகுத்து நிற்கின்றன.

ஏதோவொரு புள்ளியில், மிகவும் தொலைவில் இல்லாத எதிர்காலத்தில், வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் திரும்பியதிலிருந்து ஏற்படும் அரசியல் பேரழிவின் பரிமாணங்கள் தெளிவாகத் தெரியும் போது, ​​ஜனநாயகக் கட்சியும், ஊடகங்களும் அமெரிக்க ஜனநாயகத்தின் வீழ்ச்சியில் தங்களைக் குற்றமற்றவர்களாகக் காட்ட முயற்சிக்கின்றனர். எனவே, அவர்கள் செய்ததையும் எழுதியதையும் பதிவுசெய்து வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.

இது, முதலில் ட்ரம்பின் பதவியேற்பு விழாவிற்குப் பொருந்தும். திங்களன்று, இந்த விழாவில் கூடியிருந்த ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் மீது ஒரு வக்கிரமான, தனிநபர் தாக்குதல் உட்பட ட்ரம்பின் பாசிசவாத வெறிப்பேச்சின் போது, அவர்களில் எவரும் எழுந்து நின்று வெளிநடப்பு செய்வது ஒருபுறம் இருக்கட்டும், ஒரேயொரு வார்த்தை கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது ஆச்சரியமல்ல. ஆனால், எவ்வாறிருப்பினும் இது அசாதாரணமானது.

பதவியேற்புக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, முன்னணி ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்புடன் “இணைந்து பணியாற்றுவதற்கான” தங்கள் உறுதிப்பாட்டை அறிவித்தனர். இதில், “வரவிருக்கும் நிர்வாகம்” வெற்றிபெற வாழ்த்துவதாக தனது பிரியாவிடை உரையில் கூறிய பைடென், “ஒத்துழைப்பதற்கு கவனம் செலுத்தி” அழைப்பில் ட்ரம்பின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த நியூ யோர்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல், “ஜனாதிபதி ட்ரம்ப் இந்த நாட்டின் உழைக்கும் குடும்பங்களுடன் நிற்கும்போது அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக” கடந்த வாரம் எழுதிய வெர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் உட்பட மேலும் பலர் இதில் அடங்குவர்.

திங்களன்று, ட்ரம்பின் தனிநபர் தாக்குதல்களின் ஒரு குறிப்பிட்ட இலக்காக இருக்கும் கலிபோர்னியாவின் ஆளுநர் கவின் நியூசோம், “கூட்டாண்மைகளை உருவாக்குவது, உண்மைகளைப் பகிர்ந்து கொள்வது மற்றும் ஒருவருக்கொருவர் மதிப்பது அவசியம்” என்று கூறினார். டசின் கணக்கான மக்களைக் கொன்ற மற்றும் ஆயிரக்கணக்கானவர்களை இடம்பெயரச் செய்த பேரழிவுகரமான காட்டுத் தீயிலிருந்து இன்னும் மீளாத நிலையில், வெள்ளிக்கிழமை லொஸ் ஏஞ்சல்ஸுக்கு ட்ரம்ப் வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக நியூசோம் கூறினார்.

ட்ரம்பிற்கு எதிராக வாக்களித்த 7 கோடி மக்களுக்காகப் பேச வேண்டிய பொறுப்பு ஜனநாயகக் கட்சியினருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தாக்குதலுக்கு உள்ளானவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்கள் எப்போதும் போல, புலம்பும் கோழைகளைப் போல நடந்து கொள்கிறார்கள்.

பெருநிறுவன ஊடகங்களைப் பொறுத்த வரையில், அது அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி, அவை முன் வரையறுக்கப்பட்ட ஸ்கிரிப்டைப் பின்பற்றுகின்றன. தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி வாரங்களில் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்ட “சர்வாதிகாரி,” “பாசிசம்” மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான அச்சுறுத்தல் பற்றிய அனைத்து குறிப்புகளும் நீக்கப்பட்டுள்ளன. ட்ரம்ப் தனது ஜனாதிபதி பதவியின் மிகவும் லட்சிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான மறுக்க முடியாத அரசியல் ஆணையைக் கொண்ட ஒரு அரசியல் பிரமுகராக பொதுவான சித்தரிப்பு உள்ளது.

மிகவும் குறிப்பிடத்தக்கதாகவும், பொதுவான தொனியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் செவ்வாய்க்கிழமை காலை வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான முன்னணி தலையங்கம் இருந்தது. வாஷிங்டன் போஸ்ட், முந்தைய நாள் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அமேசான் முதலாளி மற்றும் தன்னலக்குழு ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமானது.

“ஜனாதிபதி ட்ரம்பின் பேச்சைக் கேட்பது” என்ற தலைப்பின் கீழ், ஒரு புதிய “அமெரிக்காவிற்கான பொற்காலத்தை” உருவாக்குவது குறித்தும், அதில் நாடு “செழித்து மீண்டும் மதிக்கப்படும்” என்ற ட்ரம்பின் அறிக்கைகளை போஸ்ட் குறிப்பிடுகிறது. “அமெரிக்கர்கள் அத்தகைய இலக்குகளுடன் எளிதில் உடன்படலாம். அடுத்த நான்கு ஆண்டுகளில், நமது வேறுபாடுகளைக் கடந்து, மிகவும் சரியான நாட்டைக் கட்டியெழுப்பவும், அனைவரின் வாழ்க்கையையும் மேம்படுத்தவும் விரும்புகிறோம். அந்த திசையில் முன்னேற ட்ரம்ப்பிற்கு எந்த அளவிற்கு உதவ முடியுமோ அந்த அளவிற்கு, அவருக்கு பரந்த ஆதரவு கிடைக்கும்” என்று போஸ்ட் தெரிவித்தது.

புதிய நிர்வாகத்தின் நிகழ்ச்சி நிரலில், ட்ரம்பின் கொள்கைகள் “சுங்கவரி விதிப்பு மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை மோசமாக திட்டமிட்டு நாடுகடத்துவதன் மூலம் [பொருளாதாரத்தை] ஆபத்தில் ஆழ்த்தாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அவருக்கு உள்ளது” என்று போஸ்ட் அறிவுறுத்தியது. பெருமளவிலான சுற்றிவளைப்புகள் மற்றும் நாடுகடத்தல்கள் தொடரலாம், ஆனால் அவை “மோசமாக வடிவமைக்கப்படக்கூடாது” - அதாவது, அவை பெருநிறுவன இலாபங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் செய்யப்படக்கூடாது என்று போஸ்ட் கருதுகிறது.

2021 முதல் வலதுசாரி ஜேர்மன் ஊடக ஏகபோக நிறுவனமான ஆக்செல் ஸ்பிரிங்கருக்குச் சொந்தமான, அமெரிக்க தலைநகரை உள்ளடக்கிய ஒரு முக்கிய இணைய வெளியீடான பொலிட்டிகோ, தலைகீழ் மாற்றத்திற்கான பரிசைப் பெறுகிறது. செவ்வாய்க்கிழமை காலை தலைமை ஆசிரியர் ஜான் ஹாரிஸ் எழுதிய, “ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம்: ட்ரம்ப் ஒரு சிறந்த ஜனாதிபதி. அவர் இன்னும் ஒரு நல்லவராக இருக்க முயற்சிக்கிறார்” என்ற தலைப்பில் ஒரு முக்கிய கட்டுரையை அது வெளியிட்டது. ட்ரம்ப் அவரது இரண்டாவது பதவியேற்புடன், “அவர் சகாப்தத்தின் மாபெரும் அமெரிக்க ஆளுமை என்ற ஒரு அடிப்படை உண்மையோடு, நியாயமான மக்களால் மறுக்க முடியாத சூழ்நிலைகளின் கீழ் அவர் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்” என்று ஹாரிஸ் எழுதினார்.

இது, தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி, நோயுற்ற பொய்யர், மோசடி செய்பவர், வெளியேறும் நிர்வாகம் உட்பட, அவரது அரசியல் எதிரிகள், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள பரந்த மக்கள்தொகைக்கு எதிராக வெறுப்பு நிறைந்த வசைபாடலை வழங்கிய மோசடி மனிதர் சம்பந்தப்பட்டதாகும்.

புதிய ட்ரம்ப் நிர்வாகம் நடைமுறைப்படுத்தி வரும் கொள்கைகள் தொடர்பாக, பல பிரச்சினைகளில் தேசத்தைப் பிளவுபடுத்த “தனது இரண்டாவது பதவிக்காலத்தையும் இரண்டாவது வாய்ப்பையும் ட்ரம்ப் பயன்படுத்த தயாராக இருப்பதாக” பொலிடிகோ கூறியது. ஆனால், ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்திலிருந்து எழும் ஒரு புதிய அரசியல் சகாப்தத்தின் நம்பிக்கையுடன் அது முடிவடைந்தது.

“அவர் தனது முதல் பதவிக் காலத்திலோ அல்லது இரண்டாவது பதவிக்கான சாத்தியமில்லாத பாதையிலோ, இந்த மோதல்களைத் தீர்க்கும் திறனையும், நாட்டை ஒரு புதிய அளவிலான புரிதலில் ஐக்கியப்படுத்தும் திறனையும் அவர் காட்டவில்லை” என்று ஹாரிஸ் கூறினார். “இதற்கு ட்ரம்ப் தன்னைப் பற்றியும் அடுத்த நான்கு ஆண்டுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் ஒரு புதிய புரிதலை வெளிப்படுத்த வேண்டும்” என்று மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக, திங்கட்கிழமை பிற்பகல் நேரடி தொலைக்காட்சியில், ட்ரம்பின் முக்கிய ஆதரவாளரான எலோன் மஸ்க், காங்கிரஸ் கட்டிடமான, கேபிடோல் உள் அரங்கில் இரண்டு முறை நிகழ்த்திய நாஜி வணக்கம் தொடர்பாக ஊடகங்கள் நடத்திய விதம் குறிப்பிடத்தக்கதாகும். பெரும்பாலும், சமூக ஊடகங்களில் வெடித்துள்ள இந்த செய்தியை அமெரிக்க ஊடகங்கள் புதைத்து விட்டன. அல்லது அதன் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டும் அல்லது கேள்வி எழுப்பும் கட்டுரைகளை அவை வெளியிட்டன.

“எலோன் மஸ்க் கை சைகையின் அர்த்தம் குறித்து இணையத்தில் ஊகங்களை எலோன் மஸ்க் தூண்டிவிட்டார்” என்று நியூ யோர்க் டைம்ஸ் அதன் அக்கறையற்ற கட்டுரைக்கு தலைப்பிட்டது. மஸ்க் “இணையத்தில் ஊகங்களையும் உரையாடல்களையும் தூண்டிவிட்டார்” என்று எழுதிய டைம்ஸ், மஸ்க் தனது பாசிச முன்மாதிரிகளுக்கு அளித்த தெளிவான மரியாதை குறித்த பொதுமக்களின் சீற்றத்தை வேண்டுமென்றே “வெறும் பேச்சாகக்” குறைத்து மதிப்பிட்டது.

யூத இனப்படுகொலை மறுப்பாளர்கள் மற்றும் நவ-நாஜிக்களிடம் இருந்து பகிரங்க பாராட்டைப் பெற்றுள்ள மஸ்க்கின் நாஜி வணக்கத்தை, உற்சாகமான தருணத்தில் ஒரு விகாரமான சைகை என்று கூறிய சியோனிச மற்றும் இனப்படுகொலைக்கு ஆதரவான அவதூறு எதிர்ப்பு லீக்கை டைம்ஸ் மேற்கோள் காட்டியது.

ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததற்கு ஜனநாயகக் கட்சி மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் பிரதிபலிப்பு ஒரு அடிப்படை உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: அதாவது, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் ட்ரம்ப் பிரதிநிதித்துவம் செய்யும் அதே தன்னலக்குழு நலன்களுக்கே சேவையாற்றுகிறது என்பதாகும். ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு இடையே என்னதான் தந்திரோபாய கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் —பெரும்பாலும் வெளியுறவுக் கொள்கை மற்றும் பெருநிறுவன இலாபங்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறைகள் மீது— இந்தக் கன்னைகள், நிதியியல் உயரடுக்கிற்கு அடிபணிந்து நிற்பதில் ஒன்றுபட்டுள்ளன.

குறிப்பாக ஜனநாயகக் கட்சி, ட்ரம்பின் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல, முதலாளித்துவ ஆட்சியின் முழு கட்டமைப்பிற்கும் எதிராக, கீழிருந்து ஒரு இயக்கத்தைத் தூண்டக்கூடிய அல்லது மக்கள் எதிர்ப்பை ஊக்குவிக்கக்கூடிய எதையும் செய்ய அஞ்சுகிறது. ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதிக்கு பதிலளித்ததைப் போலவே, ட்ரம்பின் நடவடிக்கைகளின் உண்மையான முக்கியத்துவத்தையும் அது மூடிமறைக்க வேண்டும்.

ட்ரம்ப் அரசாங்கம் முன்னொருபோதும் இல்லாத அளவிலான ஒரு பேரழிவில் முடிவடையும். இதற்கு முதலாளித்துவ கட்சிகளும் பெருநிறுவன ஊடகங்களும் முழுப் பொறுப்பேற்கும். அவை ட்ரம்பின் எழுச்சிக்கு வழிவகுத்துள்ளன என்பதோடு, அவர் இப்போது நடைமுறைப்படுத்தி வரும் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு பாதை வகுத்துள்ளன.

இந்த நிர்வாகத்தை எதிர்க்கும் பணி மதிப்பிழந்த அரசியல் உயரடுக்கின் மீது அல்ல, மாறாக அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகிறது.

Loading