உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதற்கான ஆளும் கட்சி மற்றும் இ.தொ.கா. ஒப்பந்தம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர், ஆளும் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச), கூட்டாக பல உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் (இ.தொ.கா.) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இ.தொ.கா. பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் அதன் தலைவர் செந்தில் தொண்டமானும், கட்சியின் தலைமைத்துவமானது ஒப்பந்தமொன்றை ஏற்படுதிக்கொள்வதற்கான ஜே.வி.பி./தே.ம.ச.யின் விருப்பத்தை ஏற்க முடிவு செய்ததாக அறிவித்தனர்.

இ.தொ.கா. பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் (facebook) [Photo: Facebook]

பிரதானமாக நுவரெலியா மாநகரசபை உட்பட ஏழு சபைகளை உருவாக்குவதற்கு ஜே.வி.பி./தே.ம.ச.யை இ.தொ.கா. ஆதரித்த அதே நேரம், ஆளும் ஜே.வி.பி./தே.ம.ச., கொட்டகலை, அக்கரபத்தனை மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று சபைகளைக்  கைப்பற்றுவதற்கு  இ.தொ.கா.விற்கு உதவியது.

அமெரிக்க சார்பு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இ.தொ.கா. வலதுசாரி அதிகாரத்துவத்திற்கும் இடையிலான இந்த ஒப்பந்தம், தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்தமாக உழைக்கும் வர்க்கத்திற்கே ஒரு எச்சரிக்கையாகும். சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள அரசாங்கத்தின் ஈவிரக்கமற்ற சிக்கன நடவடிக்கைகளுக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீதான ஜனநாயக விரோத தாக்குதல்களுக்கும் இ.தொ.கா. நேரடியாக உதவும்.

முந்தைய தேர்தல்களின் போது, ​​பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வந்தது. திசாநாயக்கவும் அவர் தலைமையிலான ஜே.வி.பி./தே.ம.ச.யும் முந்தைய அனைத்து அரசாங்கங்களையும் அரசியல் கட்சிகளையும், அவை முன்னெடுத்த சிக்கனக் கொள்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்காக விமர்சித்துடன் அவற்றின் ஊழல் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்ததாகக் குற்றம் சாட்டினர்.

ஆளும் உயரடுக்கின் கனிசமான பகுதியினரும் பிரதான வெளிநாடுகளின் இராஜதந்திரிகளும் ஜே.வி.பி.யின் கடந்தகால தொழிலாள வர்க்க-விரோத மற்றும் முதலாளித்துவ சார்பு வகிபாகத்தை கருத்தில்கொண்டு, அது நாட்டின் முதலாளித்துவ அமைப்பைக் காப்பாற்ற உதவும் என எண்ணினர். குறிப்பாக, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், போலி இடது குழுக்கள் மற்றும் பிற முதலாளித்துவக் கட்சிகளின் உதவியுடன் 2022 ஏப்ரல்-ஜூலை வெகுஜன எழுச்சிக்கு குழிபறிப்பதில் ஜே.வி.பி.யின் பங்கை அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டனர்.

ஆட்சிக்கு வந்த உடனேயே, திசாநாயக்க அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்காகக் கூறிய பொய் வாக்குறுதிகளை கைவிட்டு, முந்தைய ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின் கொடூரமான சர்வதேச நாணய நிதிய கொள்கைகளை தீவிரப்படுத்தி, ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிடத் தொடங்கியது. இந்த தாக்குதல்களுக்கு விரோதமான வெகுஜன எதிர்ப்பு வளர்ச்சியடைவதன் அறிகுறியாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜே.வி.பி./தே.ம.ச. வாக்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. 365 உள்ளூராட்சி மன்றங்களில் 166 சபைகளை மட்டுமே அதனால் கைப்பற்ற முடிந்தது.

இருப்பினும், தனது கையை வலுப்படுத்தத் தீர்மானித்த அரசாங்கம், சுமார் 40 சபைகளின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக, முன்னர் 'ஊழல் நிறைந்த கட்சிகள்' என்று அது முத்திரை குத்திய ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, இ.தொ.கா. உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இழிவான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டது.

பெரும்பான்மையான வாக்காளர்கள் தோட்டப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில், உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியின் வாக்குகள் வெகுவாகக் குறைந்தன. அதனால்தான், ஜே.வி.பி./தே.ம.ச., முந்தைய அரசாங்கங்களால் லஞ்சம் கொடுத்து வாங்கப்பட்ட ஊழல்வாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட இ.தொ.கா. தலைவர்களை நோக்கித் திரும்பியுள்ளது.

இ.தொ.கா. இன்னும் பெருந்தோட்டத்தில் பிரதான தொழிற்சங்கமாகச் செயல்ப்படுகிறது. இருப்பினும், பெரும்பாலான தொழிலாளர்கள் இ.தொ.கா.வில் தொடர்ந்து உறுப்பினர்களாக இருப்பது, அதன் தலைவர்களின் மீது இருக்கும் நம்பிக்கையினால் அல்ல.

இன்னும் அவர்கள் ஊதியம், ஊழியர் சேமலாப நிதி மற்றும் வீட்டுவசதி போன்ற பிரச்சினைகளில் தோட்ட நிர்வாகங்களைக் கையாள தொழிற்சங்கங்களின் உதவியை நாடுகிறார்கள். ஆயினும்கூட, இ.தொ.கா. உறுப்பினர்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தில் அதன் தலைவர்களுடன் அடிக்கடி முரண்படுகின்றார்கள்.

இ.தொ.கா. சர்வதேச நாணய நிதியத்தை ஆதரிக்கின்றது

சகிக்க முடியாத வாழ்க்கை நிலைமைகளை எதிர்கொள்கின்ற தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் இ.தொ.கா. மற்றும் பிற தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் தலைமையின் கீழ் போராட்டங்களை நடத்த முன்வந்துள்ளனர். அந்த அதிகாரத்துவவாதிகள், தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதாக போலியாக காட்டிக்கொள்ளும் அதே நேரம், கம்பனி முதலாளிகள் மற்றும் அரசாங்கங்களுடன் திரைக்குப் பின்னால் ஒன்று சேர்ந்து தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு முதுகில் குத்துவார்கள்.

முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவால் ஆரம்பிக்கப்பட்டு திசாநாயக்க அரசாங்கத்தால் முன்கொண்டு செல்லப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கனத் திட்டத்தை தற்போதைய இ.தொ.கா. தலைவர்கள் முழுமையாக ஆதரிக்கின்றனர். சமீபத்திய தேர்தல் தோல்விக்கு முன், ஜீவன் தொண்டமான், விக்கிரமசிங்கவின் கீழ் ஒரு அமைச்சராக இருந்ததுடன் ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரித்தார்.

திசாநாயக்க அரசாங்கத்திற்கு உள்ளூராட்சி மன்றங்களை அமைக்க உதவிய பின்னர், ஆகஸ்ட் 4 அன்று UTV தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜீவன் தொண்டமான், 'வாழ்க்கைச் செலவு குறித்து நான் அரசாங்கத்தை விமர்சிக்கவில்லை, ஏனென்றால் உலகப் பொருளாதார நிலைமை அப்படித்தான். நாம் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும்,' என்றார்.

 “உலக முதலாளித்துவம் ஆழ்ந்த நெருக்கடியை எதிர்கொள்கிறது. இலங்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியின் சுமையை தொழிலாளர்களும் ஏழைகளும் சுமக்க வேண்டும். ஆம், வாழ்க்கைச் செலவு தாங்க முடியாதது. இருப்பினும், முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்க அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளை நாம் ஆதரிக்க வேண்டும்,” என்பதையே அவர் சாதாரணமாக சொல்கிறார்.

தேர்தல்களின் போதும் அதற்கு முன்பும் ஜே.வி.பி./தே.ம.ச. கடுமையாகக் கண்டித்த இ.தொ.கா. அதிகாரத்துவத்திற்கு எந்த அமைச்சர் பதவிகளும் இன்னும் வழங்கப்படவில்லை.

இ.தொ.கா. வரலாற்றிலிருந்து

மேலும், ஜே.வி.பி., இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்களை 'கள்ளத்தோணிகள் (சட்டவிரோத குடியேறிகள்)' என்ற மோசமான பெயர்களால் சேறடித்த வரலாற்றைக் கொண்டதாகும். தோட்டத் தொழிலாளர்கள் நாட்டிற்கு காலரா நோயைக் கொண்டு வந்தவர்கள், இலங்கை விவசாயிகளை விட அதிக சலுகைகளை அனுபவிக்கிறார்கள், என்றெல்லாம் அவர்களை கண்டனம் செய்தது. 1960களின் நடுப்பகுதியில் அதன் தலைவர் ரோஹண விஜேவீரவால் ஜே.வி.பி. உருவாக்கப்பட்டபோது, அதன் ஐந்து வகுப்புகளில் இந்த இழிவான கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன.

தமிழர்-விரோத இனவாதம் ஜே.வி.பி. சித்தாந்தத்தின் ஒரு பகுதியாக அமைந்தது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாதப் போரை எந்த தயக்கமும் இல்லாமல் அது ஆதரித்தது.

உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதற்காக தே.ம.ச. உடன் இ.தொ.கா. ஏற்படுத்திக்கொண்டுள்ள சமீபத்திய கூட்டணி, இ.தொ.கா. தலைவர்களின் பிற்போக்கு அரசியலின் நீண்ட வரலாற்றில் சமீபத்திய அத்தியாயத்தைக் குறிக்கிறது. 1978 ஆம் ஆண்டில், இ.தொ.கா. தலைவர் எஸ். தொண்டமான் அமெரிக்க சார்பு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கத்தில் இணைந்தார்.

சர்வதேச நாணய நிதியம் விதித்த சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சந்தை சார்பு கொள்கைகளை செயல்படுத்துவதை அவர் ஆதரித்தார்; வேலைநிறுத்தம் செய்த 100,000 அரச ஊழியர்களை வேலைநீக்கம் செய்வது உட்பட தொழிலாளர் போராட்டங்களை அடக்க உதவினார்; 1983 இல் அரசாங்கத்தின் இனவாதப் போரை ஆதரித்தார். அடுத்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ஆர். பிரேமதாசவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த இ.தொ.கா. தலைவர்கள், பிராந்திய தோட்ட நிறுவனங்களின் கீழ் பெருந்தோட்டங்களை தனியார்மயமாக்க உதவினார்கள்.

எஸ். தொண்டமான், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிர்வாகத்தை ஆதரித்தார். அவருக்குப் பின்னர், இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் 2007 இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இணைந்தார். 2019 இல், அது கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் கூட்டணியில் நுழைந்தது.

ஆறுமுகம் தோடமான் இறந்த பின்னர், அவரது மகன் ஜீவன் தொண்டமான் காலியாக இருந்த பதவியை ஏற்றுக்கொண்ட போதிலும், மே மாதம் அரசாங்கத்திலிருந்து விலகினார். விக்கிரமசிங்க ஜனாதிபதியானவுடன் 2022 ஜூலையில் மீண்டும் அவரது ஆட்சியில் இணைந்தார். இ.தொ.கா. தலைவர்களில் ஒருவரான செந்தில் தொண்டமான் 2020-2024 காலகட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இ.தொ.கா. தலைவர்களின் துரோகப் பாத்திரம் இதுவே ஆகும். சலுகைகளைக் குவிக்க முயன்ற இந்த செல்வந்த உயரடுக்கு, கம்பனிகள் மற்றும் முதலாளித்துவ அரசின் நலன்களைப் பாதுகாப்பதன் பேரில், தொழிலாளர்களை ஒடுக்குமுறைக்குட்படுத்தி அடக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. ஏனைய தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் இ.தொ.கா. போலவே, தொழில்துறை போலீசாராக மாறிவிட்டன.

'வருமானப் பகிர்வு' என்று அழைக்கப்படும் தோட்ட மறுசீரமைப்பு திட்டத்தை ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து இ.தொ.கா. முன்னிலைப்படுத்தி வருகிறது. இது தோட்டக் கம்பனிகள் அதிக இலாபத்தைப் பெறவும் தொழிலாளர்களைப் பராமரிக்கும் சுமையைக் குறைக்கவும் முன்மொழியப்பட்ட ஒரு முறையாகும்.

இந்த முறையின் கீழ், சுமார் 1,000 தேயிலைச் செடிகள் ஒரு தொழிலாளிக்கு ஒதுக்கப்படும், அவர் அதை குடும்பத்துடன் சேர்ந்து பராமரித்து, அறுவடையை கம்பனிக்கு கொடுப்பார். நிறுவனம் அனைத்து செலவுகளையும் அதன் இலாபத்தையும் வருமானத்திலிருந்து கழித்துக்கொண்டு, மீதமுள்ளதை தொழிலாளியின் பங்காக வழங்கும்.

இது நவீனகால குத்தகை விவசாயிக்கு ஒப்பானது. அதாவது தொழிலாளிக்கு எந்த உரிமையும் கிடையாது. இது சிறு தேயிலை உற்பத்தியாளர் முறையின்படி தயாரிக்கப்பட்ட ஒரு பின்னோக்கிய உற்பத்தி முறையாகும்.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைக்க முயன்று வரும் திசாநாயக்க அரசாங்கம், இந்த முறையை ஆதரிக்கிறது. இது நிச்சயமாக கம்பனிகளுக்கு இந்தத் திட்டத்தை செயல்படுத்த உதவும். அத்தகைய அமைப்பு தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த வலிமையை உடைத்து அவர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களை அதிகரிக்கும்.

ஜே.வி.பிக்கு தோட்டங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆதரவாளர்களைக் கொண்ட அதன் சொந்த தொழிற்சங்கம் உள்ளது. இது பிற தொழிற்சங்கங்களின் துரோகப் பாத்திரத்திற்கு முண்டுகொடுத்து செயற்படுகிறது. இந்தப் பங்களிப்பை அதிகரிக்க, தோட்டங்களில் அதன் தொழிற்சங்கக் கிளைகளை விரிவுபடுத்த இப்போது முயல்கிறது.

இந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு எந்தளவு கொடூரமான நிலைமையை உருவாக்கியுள்ளன? உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 6 முதல் 9 மாதங்கள் வரையிலான பிள்ளைகளில் சுமார் 50 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர், 33.1 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் 30.2 சதவீதம் பேர் எடை குறைவாக உள்ளனர். பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது கொடுக்கப்பட்ட சிறிய 10x10 அடி வரிசை அறைகளிலேயே வசிக்கின்றனர்.

தற்போது, ​​தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியம் 1,350 ரூபாயாகும். இது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க கொஞ்சமும் போதுமானதாக இல்லை. ஜனாதிபதி திசாநாயக்க தனது பாதீட்டில், அரசாங்கம் ஊதியத்தை 1,700 ரூபாயாக உயர்த்த கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறினார். இந்த அற்பத் தொகையைப் பற்றிக் கூட இதுவரை எந்தப் பேச்சும் இல்லை.

ஓல்டன் தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடல்

இ.தொ.கா. தலைவர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு எதிராக பெரும் ஆபத்துகள் தலைநீட்டுகின்றன. ஏனைய தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் இந்த அணியில் இணையத் தயாராக உள்ளன.

ஜே.வி.பி./தே.ம.ச. மற்றும் இ.தொ.கா. இடையேயான புதிய அரசியல் கூட்டணி, தங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் பயன்படுத்தப்படுவதை தோட்டத் தொழிலாளர்களும் இளைஞர்களும் காண்பார்கள்

வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு, சம்பள வெட்டு, தாங்க முடியாத வேலை நிலைமைகள் மற்றும் அவர்களின் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

2021 முதல் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான கொடூரமான பழிவாங்கலில், இ.தொ.கா. அதிகாரத்துவமானது தோட்ட நிர்வாகம் மற்றும் பொலிசுடன் சேர்ந்து சதி செய்தது. தோட்டத்தில் உள்ள ஏனயை தொழிற்சங்கத் தலைவர்களும் இதை ஆதரித்தனர்.

இப்போது, ​​ஹொரன பெருந்ததோட்ட நிறுவனத்தின் தூண்டுதலுடன், பொலிசார் 26 தொழிலாளர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். தொழிலாளர்கள் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றனர். அவை 'நிரூபிக்கப்பட்டால்' தொழிலாளர்களுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இந்த வழக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக வரவிருக்கும் ஈவிரக்கமற்ற அடக்குமுறையைக் குறிக்கிறது. சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), ஓல்டன் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவுடன் இணைந்து இந்த பழிவாங்கலுக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகமும், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க பல தசாப்தங்களாகப் போராடி வருகின்றன. பாதிக்கப்பட்ட ஓல்டன் தொழிலாளர்களைப் பாதுகாக்க, தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதை, இ.தொ.கா. மற்றும் பிற தோட்டத் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.

தொழிலாளர்களுக்கான வேலைத்திட்டம்

அதேநேரம், தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகத் தயாரிக்கப்படும் சிக்கன நடவடிக்கைகள், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதான பரந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாகும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒழுக்கமான மாத ஊதியம், ஓய்வூதியம், இலவச சுகாதாரம் மற்றும் கல்வி, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய கண்ணியமான வீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு தோட்டங்களில் அல்லது வெளியே வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து இன மற்றும் சமூக பாகுபாடுகளும் ஒழிக்கப்பட வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்தத் தொழிற்சங்கங்கள் மூலம் தங்கள் உரிமைகளுக்காகப் போராட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்; அவர்கள் இந்த அதிகாரத்துவங்களைத் தூக்கியெறிந்து மாற்று அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

அனைத்து தோட்டங்களிலும் சுற்றுப்புறங்களிலும் தங்கள் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கி தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை தொழிலாளர்கள் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த குழுக்களுக்குள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் அல்லது முதலாளித்துவக் கட்சிகள் அனுமதிக்கப்படக்கூடாது. ஒவ்வொரு வேலைத் தளத்திலும் கிராமப்புற மக்களிடையேயும் இதுபோன்ற நடவடிக்கைக் குழுக்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பெறுவதற்கு வளங்களைத் திரட்டுவதற்கான ஆரம்ப நடவடிக்கை, தோட்டக் கம்பனிகளை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதன் மூலம் மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும். இது தொழிலாள வர்க்கத்தின் பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

முதலாளித்துவ அமைப்பு மற்றும் தேசிய வரம்பிற்குள் தொழிலாள வர்க்கத்தின் எந்த ஒரு பகுதியும் தங்கள் உரிமைகளுக்கு தீர்வு காண முடியாது. தொழிலாளர்களின் ஊதியம், வேலைகள், வேலை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகள் மீதான அதிகரித்து வரும் தாக்குதல்கள் உலகளாவிய தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்.

தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன வலிமையை அணிதிரட்டுவதன் மூலமும், சர்வதேச ரீதியில் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றிணைவதன் மூலமும் மட்டுமே தொழிலாளர்கள் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை தோற்கடிக்க முடியும். அதற்கு தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து பெரிய நிறுவனங்களையும் வங்கிகளையும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குகின்ற, அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் திருப்பிச் செலுத்துவதை நிராகரிக்கின்ற வேலைத்திட்டத்தை முன்வைக்கின்றது. சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலமே அத்தகைய ஒரு சோசலிச திட்டத்தை செயல்படுத்த முடியும்.

இந்த வேலைத்திட்டத்திற்காகப் போராட, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை கட்டியெழுப்ப நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.

சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றது. எங்கள் வேலைத்திட்டத்தைப் படித்து எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Loading