மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அக்டோபர் 6ம் திகதி பிரதமர் பதவியிலிருந்து செபாஸ்டியன் லெகோர்னூ விலகிய சில நாட்களுக்குப் பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் அவரையே பிரதமராக நியமிப்பதாக அறிவித்த ஜனதிபதி மக்ரோன், பிரெஞ்சு மக்களை அவமதித்துள்ளார். பாராளுமன்றக் கட்சிகளுடனும், குறிப்பாக மெலன்சோனின் புதிய மக்கள் முன்னணியுடனான (NFP) மக்ரோனின் ஒரு வார ஆலோசனைகள், ஒரு பிற்போக்குத்தனமான கேலிக்கூத்தாக மாறிவிட்டன.
கடந்த வாரம், புதிய மக்கள் முன்னணியில் உள்ள சோசலிசக் கட்சி, ஸ்டாலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி ஆகியவற்றுக்கும் மக்ரோனுக்கும் இடையேயான அரசாங்க கூட்டணிக்கான திட்டங்கள் ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தின. மெலோன்சோனும் அவரது ஜனரஞ்சகவாத அடிபணியாத பிரான்ஸ் கட்சியும் மக்ரோனை பதவியில் இருந்து நீக்குமாறு தொடர்ந்து கோரி வந்த நிலையில், புதிய மக்கள் முன்னணியில் உள்ள இதர கட்சிகள் பணக்காரர்களின் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இவர்கள் அனைவரும் ஜனாதிபதியின எலிசே அரண்மனைக்கு ஓடி, தங்களுக்கு அதிகாரத்தின் கதவுகளைத் திறக்குமாறு மக்ரோனைக் கேட்டுக் கொண்டனர்.
எவ்வாறாயினும், ஜூலை 2024 இல் கடைசியாக நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் புதிய மக்கள் முன்னணி முதலிடத்தைப் பிடித்திருந்தாலும், கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல், மக்ரோன் அவர்களின் முன்மொழிவுகளை நிராகரித்தபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். “நாங்கள் இந்த கூட்டத்திலிருந்து திகைப்புடன் வெளியே வருகிறோம்,” என்று பசுமைக் கட்சியின் தலைவரான மரின் டோன்டெலியே கூறினார். “அடுத்த சில மணி நேரத்தில் நியமிக்கப்படவுள்ள பிரதமர் எங்கள் அரசியல் முகாமைச் சேர்ந்தவராக இருக்க மாட்டார் என்பதைத் தவிர, எங்களிடம் வேறு எந்தப் பதிலும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை இரவு 10 மணிக்கு, மேலதிக விளக்கம் இல்லாமல், எலிசே அரண்மனை ஒரு வாக்கியத்தைக் கொண்ட ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டது. அதில் இருந்த ஒரு வாக்கியம், “குடியரசின் ஜனாதிபதி, திரு. செபாஸ்டியன் லெகோர்னுவை பிரதமராக நியமித்து, அவருக்கு ஒரு அரசாங்கத்தை அமைக்கும் பணியை வழங்கியுள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தது.
இவ்வாறாக, மக்ரோனும் முதலாளித்துவ தன்னலக்குழுக்களும் புதிய மக்கள் முன்னணியின் அரசியல் திவால்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அதற்கு ஒரு நச்சுத் தேர்வை முன்வைக்கின்றனர். மக்ரோனுக்கு எதிரான எதிர்ப்பு என்பது, புரட்சிகர வர்க்கப் போராட்டங்களின் வடிவத்தை எடுக்க முடியாது, மாறாக நாடாளுமன்றத்தின் ஊடாக திசைதிருப்பப்படும் ஒரு “மக்கள் புரட்சியாக” இருக்க வேண்டும் என்று மெலோன்சோன் வலியுறுத்துகிறார். எனவே, சமூகத்தை சிக்கன நடவடிக்கை மற்றும் இராணுவமயமாக்கும் கொள்கையைப் பின்பற்றும் லெகோர்னுவின் கீழ் வெறுக்கப்படும் அரசாங்கத்தை ஆதரிப்பதா, அல்லது லெகோர்னுவை கண்டித்து நவ-பாசிச தேசிய பேரணி கட்சியில் (RN) இணைந்து, வலுவான நிலையில் இருந்து தேர்தல்களை கட்டாயப்படுத்துவதா என்ற தேர்வை மக்ரோன் புதிய மக்கள் முன்னணியினருக்கு வழங்கியுள்ளார்.
RN தலைவர்கள் புதிய லெகோர்னு அரசாங்கத்தைக் கண்டிப்பதாக உறுதியளித்து எதிர்வினையாற்றினர். அதை RN தலைவர் ஜோர்டான் பார்டெல்லா “எதிர்காலம் இல்லாத” ஒரு அரசியல் “இணைப்பு” என்று கண்டனம் செய்தார். சோசலிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அடிபணியாத பிரான்ஸ் கட்சி ஆகியவையும் லெகோர்னு அரசாங்கத்தைக் கண்டிக்கப் போவதாக அச்சுறுத்தி வருகின்றன. இந்தக் கட்சிகள் தங்கள் அச்சுறுத்தலை செயல்படுத்தினால் , கணித ரீதியில் பாராளுமன்றத்தில் அரசாங்கம் வீழ்ச்சியடையும். குறுகிய காலத்தில் புதிய தேர்தல்கள் நெருங்கி வருகின்றன.
தற்போது, புதிய பாரளுமன்றத் தேர்தல்களில் நவபாசிச RN மற்றும் வலதுசாரி LR இணைந்து ஒரு குறுகிய பெரும்பான்மை வாக்குகளை வெல்ல முடியும் என்று கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கும் கூடுதலாக, மக்ரோனின் முன்னாள் பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் போன்ற, இப்போது மக்ரோனின் இராஜினாமாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்ற மக்ரோனின் கட்சியின் கன்னைகளும், ஒரு சாத்தியமான RN அரசாங்கம் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. ஒரு நவ-பாசிசவாத சர்வாதிகாரத்திற்கான ஆளும் உயரடுக்கின் தயாரிப்புகள் மிகவும் முன்னேறிய கட்டத்தில் உள்ளன என்பது தெளிவு.
தவிர்க்க முடியாதது என்று முன்வைக்கப்பட்ட ஒரு நவ-பாசிசவாத வெற்றிக்கு முகங்கொடுக்கும் போது, புதிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் தங்கள் ஊக்கமின்மையைப் பற்றி பேசுகின்றனர். வெள்ளிக்கிழமை மாலை டோண்டலியரின் கருத்துக்களின் உள்ளடக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
“RN இன் தேர்தல் களம் சமூக விரக்தியாகும். வாக்களிப்பது அர்த்தமற்றது, மக்ரோன் அர்த்தமற்றவர் என்பதை உணர வேண்டும். நாங்கள் வெற்றி பெற்றபோது எங்களுக்கு வாக்களித்த மக்கள், ‘அவர்கள் ஆட்சி கூட செய்யவில்லை’ என்று தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள். இது பொது மக்களின் கருத்தில் என்ன உருவாகியுள்ளது என்பதை நீங்கள் காணலாம். இம்மானுவேல் அனைவரையும், முழு நாட்டையும், மிகவும் ஆபத்தான இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். நான் அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன், ஏனென்றால் நாங்கள் மாட்டினியோன் அல்லது எலிசேயில் அதிதீவிர வலதுசாரிகளுடன் எழுந்திருக்கப் போகிறோம். இது எல்லாம் மிகவும் மோசமாக முடிவடையும்”.
நவ-பாசிசத்தின் வெற்றி எந்த வகையிலும் தவிர்க்க முடியாததல்ல. ஆனால், தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய மக்கள் முன்னணி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் கொண்டிருக்கும் செல்வாக்கை முறியடிப்பதற்கான ஒரு போராட்டம் இல்லாமல் அதனைத் தடுக்க முடியாது.
மக்ரோனுக்கு எதிராக மிகப்பெரிய தொழிலாள வர்க்க கோபம் உள்ளது. தொழிலாளர்கள் அவரது சமூக பிற்போக்குத்தனமான கொள்கைகளை ஒருமனதாக நிராகரிக்கின்றனர். மேலும், மக்ரோனை வீழ்த்த ஒரு பொது வேலைநிறுத்தத்துடன் கூடிய, அனைத்தையும் முடக்குவதுக்கான அழைப்புகளும் பரவி வருகின்றன. ஆனால், தொழிற்சங்கத் தலைமை மக்ரோனுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராக ஆட்சி செய்ய அவர் எடுக்கும் முயற்சிக்கு எதிராகவும், எதிர்கால நடவடிக்கை நாளைக் கூட நிர்ணயிக்கவில்லை.
தொழிலாளர்களால் உலகளவில் நிராகரிக்கப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக 2023 இல் இடம்பெற்ற போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விசிலை ஊதிய பின்னர், தொழிலாளர்களின் எதிர்ப்பை அணிதிரட்டுவதை நிராகரித்ததின் மூலம், தொழிற்சங்கத் தலைமைகள் தேசிய பேரணிக்கு (RN) தேர்தல் களத்தை உருவக்கி கொடுத்தன.
சிக்கன நடவடிக்கைகள், முழுமையான போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான பெரும்பான்மையான பிரெஞ்சு மக்களை அணிதிரட்டும் ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவதுக்கு, நடவடிக்கை குழுக்களில் அடிமட்ட மட்டத்திலிருந்து தொழிலாளர்களை ஒழுங்கமைத்து அணிதிரட்டுவதை உள்ளடக்கிய ஒரு புரட்சிகர மூலோபாயம் அவசியமாகும். இந்த அணிதிரட்டலின் நீண்டகால முன்னோக்கு, சோசலிசப் புரட்சி மூலம் சர்வதேச அளவில் அதிதீவிர வலதுசாரி சர்வாதிகாரத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முதலாளித்துவ தன்னலக்குழுவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதாக மட்டுமே இருக்க முடியும்.
பிரெஞ்சு முதலாளித்துவம் அதன் செல்வ வளத்தையும் அதன் சர்வதேச நிலையையும் போர் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களில் ஒரு பரந்த பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலமாக பாதுகாக்க விரும்புகிறது. அதன் கொள்கைகள் வாஷிங்டனில் ட்ரம்ப் சுட்டிக்காட்டிய திசையில் பெரும்பாலானவற்றைப் பின்பற்றுகிறது. ட்ரம்ப் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்து, அடிப்படை சமூகத் திட்டங்களை அகற்றுவதாக அச்சுறுத்திவரும் அதே வேளையில், வருகின்ற 18 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள பாரிய ட்ரம்ப் எதிர்ப்பு “மன்னர்கள் வேண்டாம்” என்ற ஆர்ப்பாட்டங்கள் உட்பட, மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்துடன் லொஸ் ஏஞ்சல்ஸ் முதல் சிக்காகோ மற்றும் வாஷிங்டன் டி.சி வரையிலான அமெரிக்க நகரங்களை ஆக்கிரமிக்க துருப்புக்களை அனுப்பி வருகிறார்.
அமெரிக்காவை விட ஐரோப்பாவில் வர்க்க உறவுகள் அடிப்படையில் வேறுபட்டவை அல்ல. சமீபத்தில், அமெரிக்க தலைநகரில் இருக்கும் ஒரு பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட்டில் “ஐரோப்பாவின் உயர் வாழ்க்கைத் தரத்திற்கு நிதியளிப்பது கடினம், பிரான்சைப் பாருங்கள்” என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில், பிரெஞ்சு அரசாங்கத்திற்கு சர்வதேச நிதிச் சந்தைகளின் உத்தரவுகள் வகுக்கப்பட்டன. கடன் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மக்ரோன், ரஷ்யா மற்றும் சீனாவுடன் மோதலுக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு சிகிச்சைக்கும் அழைப்பு விடுக்கிறார்.
மேலும் போஸ்ட், ஐரோப்பா “ஒரு ஆக்ரோஷமான ரஷ்ய அச்சுறுத்தலுக்கும், அவரது கூட்டாளிகள் மீது சுங்கவரிகளை திணித்து வருகின்ற ஒரு ஸ்திரமற்ற அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையே சிக்கியுள்ளது. … அதே நேரத்தில், பிரான்சும் ஜேர்மனியும் சீனாவால் முன்வைக்கப்படும் அதிகரித்து வரும் பொருளாதார சவாலை முகங்கொடுத்து வருகின்றன. இது ஜேர்மனியின் மின்சார கார்கள் மற்றும் பிரெஞ்சு அணு மின் நிலையங்கள் போன்ற முக்கியமான தயாரிப்புகள் உட்பட ஐரோப்பிய தொழில்துறைக்கு போட்டியாக இருக்கலாம்” என்று கூறுகிறது.
“ஐரோப்பிய வாழ்க்கை முறையின் செலவு - சுகாதாரப் பாதுகாப்பு, மலிவு கல்வி, ஒழுக்கமான ஓய்வூதியங்கள், இவை அனைத்திற்கும் அதிக சமூகச் செலவு தேவைப்படுகிறது - நிர்வகிக்க முடியாததாகி வருகிறது” என்று போஸ்ட் மேலும் தெரிவித்தது.
முதலாளித்துவ தன்னலக்குழுவிற்கு பின்வரும் முடிவை அடையாளம் காண்பது என்பது கடினமான ஒன்றல்ல. சமூகத் தேவைகள், அவர்களின் அருவருப்பான செல்வங்களுக்கு நிதியளிப்பதில் நிர்வகிக்க முடியாத அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், அவர்கள் மக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு, தேசிய கல்வி மற்றும் ஒழுக்கமான ஓய்வூதியங்களை வழங்குவதுக்கு மறுக்க விரும்புவார்கள். எனவே, சமூகப் பிற்போக்குத்தனம் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான முழுமையான போர்க் கொள்கைக்கு எதிரான பாரிய எதிர்ப்பை அடக்குவதற்கு, அவர்களுக்கு ஒரு பாசிச சர்வாதிகாரத்தின் தேவை அவசியமாகிறது.
சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்கான முதலாளித்துவ தன்னலக்குழுவின் துரிதப்படுத்தப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணிதிரட்டுவதே இதற்கான ஒரேயொரு சாத்தியமான முன்னோக்கு ஆகும். சோசலிச சமத்துவக் கட்சி “பிரெஞ்சு அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தொழிலாள வர்க்கம் முன்னோக்கிச் செல்லும் பாதை என்ன?” என்ற அறிக்கையில் பின்வருமறு விளக்கியுள்ளது.
ஒரு வரலாற்று திருப்புமுனையில் தன்னைக் காண்கின்ற தொழிலாள வர்க்கம், 1930 களின் படிப்பினைகளையும் பாசிசத்தின் எழுச்சிக்கு எதிரான தனது போராட்டங்களையும் அவசரமாக கற்றுக்கொள்வது அவசியமானது. அதற்கு முன்னால், இரண்டு தெளிவான மாற்று வழிகள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, முதலாளித்துவ தன்னலக்குழு தொழிலாள வர்க்கத்தை நசுக்க ஒரு பாசிச சர்வாதிகாரத்தை உருவாக்குகிறது, அல்லது தொழிலாள வர்க்கம் தன்னலக்குழுக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு புரட்சிகர போராட்டத்தை நடத்துகிறது. இதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் இறுக்கமான தளைகளை உடைத்து, வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க அர்ப்பணிக்கப்பட்ட உண்மையான, சாமானிய தொழிலாளர் அமைப்புகளைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.
சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியானது (IWA-RFC), அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் வேலையிடங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து அதிகாரத்தை மாற்றுவதற்கு அழைப்பு விடுக்கிறது. பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் இத்தகைய புதிய வடிவிலான வர்க்க அமைப்பு, பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தன்னலக்குழுவின் பாசிசம், இனப்படுகொலை மற்றும் போர் வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பை ஒழுங்கமைக்கவும், அதனைத் தோற்கடிக்கவும் அவசியமாக இருக்கிறது.