மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) அரசியல் ஐக்கியம் கொண்டிருக்கும் சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலம் (துருக்கி), 2025 ஜூன் 13–15 தேதிகளில் அதன் ஸ்தாபக மாநாட்டை நடத்தியது. கட்சியின் அதிகாரப்பூர்வ உருவாக்க செயல்முறை கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. கட்சியின் காங்கிரஸில் ஒருமனதாக பின்வரும் மூன்று தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன: அவை, “கொள்கை அறிக்கை” (அதிகாரப்பூர்வ வேலைத்திட்டம்), “சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலத்தின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள்” மற்றும் “அரசியலமைப்பு” ஆகியவையாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் “கொள்கை அறிக்கையின்” மூன்றாவது பகுதியை நாங்கள் இங்கே வெளியிடுகிறோம். பகுதி 1 மற்றும் பகுதி 2-ஐப் படிக்கவும். அடுத்த பகுதிகள் விரைவில் தொடர்ந்து வெளியிடப்படும்.
சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக
30. அனைத்து அரசியல் கேள்விகளுக்கும் அதன் அணுகுமுறையிலும், பொருத்தமான தந்திரோபாயங்களைத் தேர்ந்தெடுப்பதிலும், சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை நலன்களை நிலைநிறுத்துகிறது. இது, முதலாளித்துவ அமைப்பு முறையின் சட்டத்தால் நிர்வகிக்கப்படும் தன்மை மற்றும் வர்க்க சமூகத்தின் அரசியல் இயக்கவியல் பற்றிய விஞ்ஞானபூர்வமான புரிதலையும், வரலாற்றின் படிப்பினைகளை முறையாக ஒருங்கிணைப்பதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த அணுகுமுறைதான், குறுகிய கால தந்திரோபாய ஆதாயங்களைப் பின்தொடர்வதில், தொழிலாள வர்க்கத்தின் நீண்டகால நலன்களை தியாகம் செய்யும் சந்தர்ப்பவாத அரசியலுக்கு சமரசமற்ற எதிர்ப்பில் சோசலிச சமத்துவக் கட்சியை நிலைநிறுத்துகிறது.
சந்தர்ப்பவாதிகள் மீண்டும் மீண்டும் தங்களை யதார்த்தவாத அரசியல்வாதிகள் என்று கூறிக்கொள்வதன் மூலமும், “வளைந்து கொடுக்காத” கோட்பாடுகளால் வழிநடத்தப்படாமல், எந்தவொரு சூழ்நிலையின் தேவைகளுக்கும் ஏற்ப தங்கள் நடைமுறையை எவ்வாறு மாற்றியமைப்பது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலமும் காட்டிக்கொடுக்கும் தங்கள் கொள்கைகளை பாதுகாத்து வந்துள்ளனர். மீண்டும் மீண்டும், இத்தகைய “யதார்த்தவாத” அரசியல், பேரழிவுக்கு அவர்கள் இட்டுச் சென்றுள்ளனர். ஏனெனில் அவர்கள், மேலோட்டமான, தோற்றப்பாட்டுவாத, மார்க்சியமற்ற மற்றும் அதன் விளைவாக, புறநிலை நிலைமைகள் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் இயக்கவியல் பற்றிய யதார்த்தமற்ற மற்றும் தவறான மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தனர்.
31. ஆனால், சந்தர்ப்பவாதம் என்பது வெறுமனே ஒரு அறிவுசார் மற்றும் தத்துவார்த்த பிழையின் விளைவு அல்ல. இது, முதலாளித்துவ சமூகத்தில் கணிசமான சமூகப்-பொருளாதார வேர்களைக் கொண்டுள்ளதுடன், விரோத வர்க்க சக்திகளின் அழுத்தத்தின் வெளிப்பாடாக தொழிலாளர் இயக்கத்திற்குள் அபிவிருத்தி அடைகிறது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்குள் எழுந்த பேர்ன்ஸ்டைனின் வெளிப்பாடுகளில் இருந்தும், 1920 களில் போல்ஷிவிக் கட்சிக்குள் வளர்ந்த ஸ்டாலினின் வெளிப்பாடுகளிலிருந்தும், 1950 களின் ஆரம்பத்தில் நான்காம் அகிலத்திற்குள் அபிவிருத்தி அடைந்த பப்லோ மற்றும் மண்டேலின் வெளிப்பாடுகளிலிருந்தும், இறுதியாக, 1980 களின் நடுப்பகுதியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து முறித்துக் கொள்வதற்கு இட்டுச் சென்ற பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதம் வரையிலும், சந்தர்ப்பவாதத்தின் அனைத்து குறிப்பிடத்தக்க வெளிப்பாடுகளும், தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ சமூக சக்திகள் திணித்த செல்வாக்கில் காணப்படுகின்றன. இதுதான் திருத்தல்வாதம் மற்றும் சந்தர்ப்பவாத அரசியலின் அடிப்படைக் காரணமும் முக்கியத்துவமும் ஆகும். இத்தகைய போக்குகளுக்கு எதிரான போராட்டம் என்பது கட்சியைக் கட்டியெழுப்புவதில் இருந்து கவனத்தை சிதறடிப்பதல்ல. மாறாக, தொழிலாள வர்க்கத்தில் மார்க்சிசத்திற்கான போராட்டத்திற்கான மிக உயர்ந்த கட்டமாகும்.
சோசலிச நனவும் தலைமைத்துவ நெருக்கடியும்
32. சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனான அரசியல் ஐக்கியத்துடன், புரட்சிகர சோசலிச நனவு தொழிலாள வர்க்கத்தில் தன்னிச்சையாக வளராது என்ற செவ்வியல் மார்க்சியக் கருத்தை, குறிப்பாக, போல்ஷிவிக் கட்சியைக் கட்டியெழுப்புவதில் லெனினால் முறையாக உருவாக்கப்பட்டு, நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்ட கருத்தை பாதுகாக்கிறது. சோசலிச நனவுக்கு வரலாற்று வளர்ச்சியின் விதிகள் மற்றும் முதலாளித்துவ உற்பத்தி முறை பற்றிய விஞ்ஞான நுண்ணறிவு தேவைப்படுகிறது. இந்த அறிவும் புரிதலும் தொழிலாள வர்க்கத்திற்குள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதுதான் மார்க்சிச இயக்கத்தின் பிரதான பணியாகும். என்ன செய்ய வேண்டும் என்ற படைப்பில் பின்வருமாறு லெனின் எழுதியபோது, இதைத்தான் துல்லியமாக அவர் வலியுறுத்தினார்: “புரட்சிகர தத்துவம் இல்லாமல் எந்த புரட்சிகர இயக்கமும் இருக்க முடியாது.”
தொழிலாளர் இயக்கத்திற்குள் மார்க்சிச தத்துவத்தை அறிமுகப்படுத்துவதற்கான புரட்சிகரக் கட்சியின் முயற்சிகளுக்கு அப்பால், பாரிய தொழிலாள வர்க்க நனவின் ஆதிக்கம் செலுத்தும் வடிவம், தொழிலாள வர்க்கத்தின் “முதலாளித்துவ நனவாக” லெனினால் வரையறுக்கப்பட்ட தொழிற்சங்கவாதத்தின் மட்டத்திலேயே இருக்கும். புரட்சிகர நனவுக்கான போராட்டத்தை இழிவுபடுத்துவது பிற்போக்குத்தனமான கல்வியாளர்கள் மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதிகளின் கையிருப்பில் உள்ள ஒரு செயலாகும். இது பொதுவாக அறிவுஜீவிகள் மற்றும் மார்க்சிய “உயரடுக்கின்” மீதான வாய்வீச்சு தாக்குதல்களுடன் இணைக்கப்படுகிறது.
33. சோசலிசத்தின் வெற்றிக்கும், அதன் விளைவாக, மனித நாகரிகத்தின் உயிர்வாழ்விற்கும் முற்போக்கான வளர்ச்சிக்கும், மார்க்சிய கோட்பாட்டின் அடித்தளத்தில், சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். சோசலிசம் என்பது வெறுமனே ஒரு நனவற்ற வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் தவிர்க்க முடியாத விளைவு என்று உணரப்படாது. 20 ஆம் நூற்றாண்டின் முழு வரலாறும் இந்த “தவிர்க்க முடியாத” விதிவாதத்திற்கு எதிராக சாட்சியமளிக்கிறது, இது வரலாற்று சடவாத நிர்ணயவாதத்தின் கேலிச்சித்திரமாகும். மேலும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் படைப்புகளில் எடுத்துக்காட்டும் அறிவாற்றல், கோட்பாடு மற்றும் நடைமுறையின் மாறும் தொடர்புடன் எந்த பொதுவான தன்மையையும் கொண்டிருக்கவில்லை. முதலாளித்துவம் 20 ஆம் நூற்றாண்டில் தப்பிப்பிழைத்தது, புறநிலை நிலைமைகள் சோசலிசத்திற்கு போதுமான அளவு முதிர்ச்சியடையாததால் அல்ல, மாறாக சோசலிசப் புரட்சிக்கு பாரிய தொழிலாள வர்க்கக் கட்சிகளின் தலைமை “போதுமானதாக இல்லை” என்பதினால்தான் ஆகும். தொழிலாள வர்க்கம் மீண்டும் மீண்டும் மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டது. ஆனால் ஸ்டாலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள், மத்தியவாத மற்றும் திருத்தல்வாத அமைப்புகளால் தவறாக வழிநடத்தப்பட்ட இந்தப் போராட்டங்கள் தோல்விகளில் முடிவடைந்தன.
34. தொழிலாள வர்க்கம் அதன் சொந்த அமைப்புகளான பாரிய அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு வருவதால், முதலாளித்துவம் இன்றும் நீடிக்கிறது. “உலகளாவிய அரசியல் நிலைமை ஒட்டுமொத்தமாக பாட்டாளி வர்க்கத் தலைமையின் வரலாற்று நெருக்கடியால் முதன்மையாக வகைப்படுத்தப்படுகிறது.” லியோன் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்ட இந்த வார்த்தைகள், சமகால அரசியல் யதார்த்தத்தினை வரையறுப்பதுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரப் போராட்டத்திற்கு அழைப்பது ஒருபுறம் இருக்கட்டும், தற்போதுள்ள உலக முதலாளித்துவ ஒழுங்கின் எதிர்ப்பாளராக தன்னைக் காட்டிக் கொள்ளும் எந்தவொரு வெகுஜன அமைப்பும் இன்று உலகில் இல்லை. இது, தொழிலாள வர்க்கத்தின் கோபத்தையும் அதிருப்தியையும் பழைய, அரசியல் ரீதியாக முடங்கிப்போன அமைப்புகளால் நசுக்கப்படும் ஒரு யதார்த்தமான சூழலை உருவாக்கியுள்ளது.
ஆனால் ட்ரொட்ஸ்கி, நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமான இடைமருவு வேலைத்திட்டத்தில் எழுதியதைப் போல: “வெகுஜனங்களின் நோக்குநிலை முதலில் சிதைந்து வரும் முதலாளித்துவத்தின் புறநிலை நிலைமைகளாலும், இரண்டாவதாக பழைய தொழிலாளர் அமைப்புகளின் துரோக அரசியலாலும் தீர்மானிக்கப்படுகிறது. இந்தக் காரணிகளில், நிச்சயமாக முதலாவது, தீர்க்கமான ஒன்றாகும்: வரலாற்றின் விதிகள் அதிகாரத்துவ எந்திரத்தை விட வலிமையானவை.”
மார்க்சிச தத்துவமும் தொழிலாள வர்க்கமும்
35. முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகள், தொழிலாள வர்க்கத்தை சமூகத்தின் புரட்சிகர மறுஒழுங்கமைப்பை முன்னிறுத்தும் போராட்டங்களுக்குள் தள்ளும். இந்தப் போராட்டங்கள், உற்பத்தி சக்திகளின் உலகளாவிய ஒருங்கிணைப்பின் முன்னேறிய மட்டத்தில் இருந்து புறநிலைரீதியாக எழும் ஒரு வெளிப்படையான சர்வதேச தன்மையைப் பெறும். எனவே, நவீன சகாப்தத்தின் மாபெரும் மூலோபாயப் பணி, அனைத்து நாடுகளின் தொழிலாளர்களின் அரசியல் ஐக்கியத்தை, தீர்க்கமான சர்வதேச புரட்சிகர சக்தியாக உருவாக்குவதாகும்.
36. சோசலிச சமத்துவக் கட்சி அதன் செயல்பாட்டை, வரலாறு மற்றும் சமூகத்தின் புறநிலை விதிகளின் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, அவை முதலாளித்துவ உற்பத்தி முறையின் முரண்பாடுகளில் வெளிப்படுகின்றன. தத்துவார்த்த சடவாதத்தில் வேரூன்றியுள்ள மார்க்சிசம், நனவுக்கு மேல் பருப்பொருளின் முதன்மையை வலியுறுத்துகிறது. “கருத்தியல் என்பது மனித மனத்தால் பிரதிபலிக்கப்பட்டு, சிந்தனை வடிவங்களாக மொழிபெயர்க்கப்பட்ட பொருள் உலகத்தைத் தவிர வேறில்லை” என்று மார்க்ஸ் எழுதினார். மார்க்சின் சடவாதம் இயங்கியல் ரீதியானது. இது, பொருள் உலகத்தையும், சிந்தனையில் அதன் பிரதிபலிப்பின் வடிவங்களையும், உள்ளார்ந்த வேறுபாடற்ற, நிலையான பொருட்கள் மற்றும் கருத்துக்களின் திரளாகக் கருதாமல், மாறாக, முரண்பாடான மற்றும் மாறுபட்ட போக்குகளுடன், இடைவிடாத இயக்கத்திலும் ஊடாடலிலும் இருக்கும் சிக்கலான நிகழ்வுப்போக்குகளாக கருதுகிறது.
37. சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பிரிவுகளுக்குள், வரலாறு குறித்த ஒரு விஞ்ஞானபூர்வமான புரிதலையையும், முதலாளித்துவ உற்பத்தி முறை மற்றும் அது தோற்றுவிக்கும் சமூக உறவுகள் பற்றிய ஒரு அறிவையும், தற்போதைய நெருக்கடியின் நிஜத் தன்மை மற்றும் அதன் உலக-வரலாற்று தாக்கங்கள் பற்றிய ஒரு உட்பார்வையையும் அபிவிருத்தி செய்ய முனைகிறது. சோசலிச சமத்துவக் கட்சி ஒரு புறநிலை வரலாற்று நிகழ்ச்சிப்போக்கால் உருவாக்கப்பட்ட சமூகப் புரட்சிக்கான சடரீதியான சாத்தியக்கூறுகளை, ஒரு வர்க்க நனவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட அரசியல் இயக்கமாக மாற்ற முயல்கிறது. உலக நிகழ்வுகளுக்கு வரலாற்று சடவாத பகுப்பாய்வு வழிமுறையைப் பிரயோகித்து, சோசலிச சமத்துவக் கட்சி உலக முதலாளித்துவ நெருக்கடியின் தீவிரமடைதலின் விளைவுகளை எதிர்பார்த்து, அதற்குத் தயாராகி, நிகழ்வுகளின் தர்க்கத்தை வெளிப்படுத்தி, மூலோபாய ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் பொருத்தமான அரசியல் பதிலை உருவாக்குகிறது.
சமூகத்தின் முற்போக்கான மற்றும் சோசலிச மாற்றத்தை அரசியல்ரீதியில், நனவான தொழிலாள வர்க்கத்தின் பாரிய போராட்டத்தின் மூலமாக மட்டுமே அடைய முடியும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்களின் நடவடிக்கைகள், வன்முறையை நாடுவது, தொழிலாள வர்க்கத்தின் கூட்டுப் போராட்டத்திற்கு ஒரு மாற்றீடாக ஒருபோதும் சேவையாற்ற முடியாது. நீண்ட அரசியல் அனுபவம் சுட்டிக் காட்டியுள்ளபடி, தனிப்பட்ட வன்முறை நடவடிக்கைகள் அடிக்கடி ஆத்திரமூட்டுபவர்களால் தூண்டிவிடப்படுகின்றன மற்றும் அரசின் கைகளில் அவை விளையாடுகின்றன.
38. சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து சூழ்நிலைகளின் கீழும் இன்றியமையாத புரட்சிகர சோசலிசக் கோட்பாட்டை நிலைநிறுத்துகிறது: அதாவது, தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையைச் சொல்வதாகும். கட்சியின் வேலைத்திட்டம் அரசியல் யதார்த்தத்தின் விஞ்ஞானபூர்வமான மற்றும் புறநிலை மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். சந்தர்ப்பவாதத்தின் மிகவும் நயவஞ்சகமான வடிவம், தொழிலாளர்கள் உண்மையைக் கேட்கத் தயாராக இல்லை என்றும், மார்க்சிஸ்டுகள் தங்கள் தொடக்கப் புள்ளியாக நிலவும் கூட்டு நனவின் மட்டத்தை — அல்லது இன்னும் துல்லியமாகச் சொன்னால், சந்தர்ப்பவாதிகள் கற்பனை செய்வதை— எடுத்துக்கொண்டு, மக்களிடையே நிலவும் தப்பெண்ணங்கள் மற்றும் குழப்பங்களுக்கு ஏற்ப தங்கள் வேலைத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கூறி, தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. இந்தக் கோழைத்தனமான அணுகுமுறை, கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட புரட்சிகர அரசியலுக்கு எதிரானது. “இந்த வேலைத்திட்டம், தொழிலாளர்களின் பின்தங்கிய நிலையைக் காட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் புறநிலைப் பணிகளை வெளிப்படுத்த வேண்டும். இது தொழிலாள வர்க்கத்தின் பின்தங்கிய நிலையை அல்லாமல் சமூகத்தை அப்படியே பிரதிபலிக்க வேண்டும். இது பின்தங்கிய நிலையை வென்று தோற்கடிப்பதற்கான ஒரு கருவியாகும். அதனால்தான் முதலாளித்துவ சமூகத்தின் சமூக நெருக்கடியின் முழு தீவிரத்தையும், முதன்மையாகவும் முக்கியமாக அமெரிக்காவின் நெருக்கடியையும் நமது வேலைத்திட்டத்தில் வெளிப்படுத்த வேண்டும்” என்று 1938 இல் ட்ரொட்ஸ்கி அறிவித்தார். “இந்தச் சூழ்நிலையிலிருந்து எழும் வரலாற்றுப் பணிகள், தொழிலாளர்கள் இன்று அவற்றை ஏற்கத் தயாராக இருக்கிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், புறநிலை நிலைமை பற்றிய தெளிவான மற்றும் நேர்மையான சித்திரத்தை வழங்குவதே கட்சியின் முதல் பொறுப்பாகும். எமது பணிகள் தொழிலாளர்களின் மனநிலையை சார்ந்து இருப்பதல்ல, மாறாக, தொழிலாளர்களின் மனநிலையை வளர்ப்பதே பணியாகும். அதைத்தான் இந்த வேலைத்திட்டம் உருவாக்கி முன்னேறிய தொழிலாளர்களுக்கு முன்னால் முன்வைக்க வேண்டும்” என்று ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார். இந்த வார்த்தைகள் சோசலிச சமத்துவக் கட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணுகுமுறையை துல்லியமாக வரையறுக்கின்றன.
தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பு
39. தொழிலாளர்களுக்கு உண்மையைச் சொல்வதில் சந்தர்ப்பவாதிகளின் வெறுப்பு, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணிய வைத்திருக்கும் பழைய பிற்போக்குத்தனமான, அதிகாரத்துவமயமாக்கப்பட்ட மற்றும் முற்றிலும் பெருநிறுவன தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு, அரசியல் மறைப்பை வழங்குவதற்கும், பாதுகாப்பதற்கும் அவர்களின் முயற்சிகளுடன் ஏறத்தாழ எப்போதுமே தொடர்புடையதாகும். சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் பழைய அமைப்புகளின் —முக்கியமாக, தொழிற்சங்கங்கள்— தன்மை பற்றிய புரிதலை, தொழிலாள வர்க்கத்திற்குள் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொழிற்சங்கங்கள், நடுத்தர வர்க்க அரசு நிர்வாகிகளின் ஒரு பெரிய அடுக்கால் கட்டுப்படுத்தப்படுகின்றன மற்றும் அவர்களின் நலன்களுக்கு சேவை செய்கின்றன. அவர்களின் தனிப்பட்ட வருமானம் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ சுரண்டலுக்கு உதவுபவர்களாக, அவர்கள் தீவிரமாகவும் நனவாகவும் பங்களிப்பதன் மூலம் பெறப்படுகிறது.
40. கடந்த தசாப்தங்களில், வேலைநிறுத்தங்களை முறியடிப்பதிலும், ஊதியங்களைக் குறைப்பதிலும், சலுகைகளை அகற்றுவதிலும், வேலைகளை வெட்டுவதிலும், தொழிற்சாலைகளை மூடுவதிலும் தொழிற்சங்கங்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளன. இந்த நிகழ்ச்சிப்போக்கில், உறுப்பினர்களை இழந்து வருகின்ற போதிலும், தொழிற்சங்கங்களின் வருவாய்களும் அவற்றின் நிர்வாகிகளின் சம்பளங்களும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. தொழிற்சங்கங்கள், தங்கள் உறுப்பினர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் மீது அக்கறையற்றவர்களாகவும், “நிலுவைத் தொகை சரிபார்ப்பு” மற்றும் தொழிலாளர் சட்டங்களால் சாமானிய தொழிலாளர்களின் எதிர்ப்பு போராட்டங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டு வருவதுடன், பெருநிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவ அரசுடன் ஆயிரம் இழைகளால் அவை பிணைக்கப்பட்டுள்ளன.
41. தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்யாத இந்த ஊழல்பிடித்த அமைப்புகளுக்கு எதிராக ஒரு கிளர்ச்சிக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. இதன் அர்த்தம், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளால் கூட்டாக ஒடுக்கப்படும் தொழிலாளர்களை அணுகவும் அவர்களுக்கு உதவவும் தேவைப்படும் அளவுக்கு, சோசலிச சமத்துவக் கட்சி அத்தகைய அமைப்புகளுக்குள் பணியாற்றுவதைத் தவிர்க்கவில்லை என்பதாகும். ஆனால், சோசலிச சமத்துவக் கட்சி ஒரு புரட்சிகர முன்னோக்கின் அடிப்படையில் அத்தகைய பணிகளை நடத்துகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் சாமானிய தொழிலாளர்களின் நலன்களை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட புதிய சுயாதீன அமைப்புகளை —தொழிற்சாலை மற்றும் பணியிடக் குழுக்கள் போன்றவை— உருவாக்குவதை ஊக்குவிக்கிறது.
42. இந்த அடிப்படையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) சோசலிச சமத்துவக் கட்சி உறுதியாக ஆதரிக்கிறது. ஆளும் வர்க்கம் மற்றும் பெருநிறுவன தொழிற்சங்கங்களுக்கு எதிராக, பல்வேறு தொழிற்சாலைகள், பணியிடங்கள் மற்றும் நாடுகளில் அதன் போராட்டத்தை ஒருங்கிணைப்பதன் மூலமாக, பெருந் தொற்றுநோய் மற்றும் போரால் தீவிரமடைந்துள்ள முதலாளித்துவத்தின் தாக்குதலை எதிர்க்க, தொழிலாள வர்க்கத்திற்கு IWA-RFC ஒரு வழியையும், வழிமுறையையும் வழங்குகிறது.
வர்க்க ஒற்றுமைக்கு எதிராக அடையாள அரசியல்
43. தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான போராட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதிலும் வர்க்க நனவைக் குறைப்பதிலும் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்துள்ள சந்தர்ப்பவாதத்தின் மற்றொரு வடிவம், தேசிய, இன, நிற, மொழி, மத, பாலின மற்றும் பாலியல் வேறுபாடுகளை வர்க்க நிலைப்பாட்டிற்கு மேலே உயர்த்துவதன் அடிப்படையில் எண்ணற்ற வடிவிலான “அடையாள” அரசியலை ஊக்குவிப்பதாகும். வர்க்கக் கருத்தாக்கத்திலிருந்து அடையாளக் கருத்தாக்கத்திற்கான இந்த மாற்றம், முதலாளித்துவ அமைப்பு முறையில் வேரூன்றிய உண்மையான காரணங்களைப் புரிந்துகொள்வதையும், அனைத்து உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைப் புரிந்துகொள்வதையும் பாதித்துள்ளது.
மிக மோசமான நிலையில், கல்வி நிறுவனங்கள், வேலைகள் மற்றும் பிற “வாய்ப்புகளை” அணுகுவதற்கான பல்வேறு “அடையாளங்களுக்குள்ளே” இது ஒரு போட்டியை ஊக்குவித்துள்ளது. அத்தகைய இழிவுபடுத்தும், மனிதாபிமானமற்ற மற்றும் தன்னிச்சையான வேறுபாடுகள் இல்லாமல், அனைத்து மக்களுக்குமான வாய்ப்புகள் ஒரு சோசலிச சமூகத்தில், சுதந்திரமாக கிடைக்கும். சோசலிச சமத்துவக் கட்சி அனைவருக்கும் முழு சமத்துவத்தைக் கோருகிறது மற்றும் அவர்களின் ஜனநாயக உரிமைகளை சந்தேகத்திற்கு இடமின்றி பாதுகாக்கிறது. தேசிய, இன, நிற, மத அல்லது மொழிப் பாரம்பரியம் அல்லது பாலினம் அல்லது பாலின நோக்குநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அனைத்து வகையான பாகுபாடுகளும் ஒழிக்கப்பட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் அனைத்துக் கூறுகளையும், அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பதை அடிப்படையாகக் கொண்ட போராட்டத்தின் கட்டமைப்பிற்குள், அதன் வேலைத் திட்டத்தில் இந்த அத்தியாவசிய ஜனநாயக கூறுகளை முன்னெடுக்கிறது.
தொடரும்....
