இலங்கையில் ஒரே வாரத்தில் 2 தொழிலாளர்கள் தொழில்துறை விபத்துக்களில் உயிரிழந்தனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் கடந்த வாரம், ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில், வெவ்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்த இரண்டு தொழிலாளர்கள் வேலையின் போது உயிரிழந்தனர்.

கொழும்பிலிருந்து 75 கிலோமீட்டர் கிழக்கே உள்ள யடியந்தொட்டையில் உள்ள கிரிபோருவ தோட்டத்தில் அமைந்துள்ள ரப்பர் மரப்பால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஒரு இயந்திரம் வெடித்ததில் முதல் மரணம் நிகழ்ந்தது. இரண்டாவது மரணம் மத்திய மலைநாட்டில், மஸ்கெலியாவில் உள்ள மவுசாகலை தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்டது. அங்கு ஒரு தொழிலாளியின் தலை தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கியதால் அவர் உயிரிழந்தார்.

ரஜினிகாந்த்

இறப்பர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் மரணித்த ரஜினிகாந்த், 25 வயது திருமணமாகாத இளைஞராவார். தேயிலை தொழிற்சாலையில் இறந்த கிருஷ்ணன், மனைவியை இழந்த நான்கு பிள்ளைகளைக் கொண்ட 49 வயதுடைய தந்தை ஆவார்.

கிரிபோருவ தோட்டத்தில் ஏற்பட்ட மரணம்

ரஜினிகாந்த உயிரிழந்த இறப்பர் உற்பத்தி தொழிற்சாலை, ஹேலிஸ் குழும நிறுவனங்களின் துணை நிறுவனமான டிப்ட் புரொடக்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்ததாகும். இந்த குழுமங்களுக்கு இலங்கையின் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர்களான தம்மிக பெரேரா, மோகன் பண்டிதகே ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள (WSWS) செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஜினிகாந்த் இயக்கி வந்த இறப்பர்-சுருட்டும் இயந்திரத்தின் பாகங்கள் வெடித்து அவரைத் தாக்கியதில், அவரது மார்பு மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது ஒரு கை துண்டிக்கப்பட்டது.

அதே விபத்தில் காயமடைந்த ஸ்ரீஸ்கந்தராஜா (47), புஷ்பநாதன் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் அருகிலுள்ள கரவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் இருக்கும் ஸ்ரீஸ்கந்தராஜா

நிறுவனத்தின் கூற்றுப்படி, பாலில் இருந்து மேற்கொள்ளப்படும இறப்பர் உற்பத்தியானது வேகமாக சுழலும் வகைபிரிக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு இல்லாததால் இதுபோன்ற இயந்திரம் வெடித்திருக்கலாம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, அதிவேக தடை கட்டமைப்புகள், அதிர்வு மற்றும் வெப்பநிலை உணரிகள், தானியங்கி நிலைமாற்றும் முறைமைகள் மற்றும் வெடித்தால் பாதிப்பை தடுக்கும் ஆவரணங்கள் (கவசங்கள்) போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அவசியம். எவ்வாறெனினும், இந்த இயந்திரம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பழையது என்றும், இந்த பாதுகாப்பு முறைமைகளில் பெரும்பாலானவை அதில் இல்லை எனத் தோன்றியதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய நவீன இயந்திரங்கள் தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படலாம் என்றாலும், தொழிலாளர்களின் உயிருக்கு மேலாக தங்கள் இலாபத்துக்கே முன்னுரிமை கொடுக்கும் பிற முதலாளிகளைப் போலவே, இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களும் அத்தகைய பாதுகாப்பு வழிமுறைகளுடன் கூடிய புதிய உபகரணங்களை நிறுவுவதற்குப் பதிலாக, ஆபத்தான, காலாவதியான இயந்திரங்களை தொடர்ந்து இயக்கினர் என்பது தெளிவாகிறது.

தொழிற்சாலை அமைந்துள்ள கிரிபோருவ தோட்டத்தில் இறப்பர் பால் சேகரிப்பதன் மூலம் அவர்கள் தினமும் சம்பாதிக்கும் 1,350 ரூபாவை விட சற்று அதிகமாக சம்பாதிக்க முடியும் என்பதால், ஆண் தொழிலாளர்கள் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் மட்டுமே தொழிற்சாலையில் வேலை கிடைக்கிறது.

உற்பத்தி இலக்குகளை அடைய, தொழிலாளர்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்ய வேண்டும்.

“10 சுற்றுகள் என்ற இலக்கை முடித்தால், சாதாரண கூலியை விட நான்கு மடங்கு சம்பாதிக்கலாம். ஆனால் இயந்திரங்கள் சூடாகிவிடுவதால், பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து வேலை செய்வது கடினம். நாங்கள் அவ்வாறு செய்தால், இலக்கை அடைய முடியாது. எனவே நாங்கள் பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறோம்,” என ஒரு தொழிலாளி கூறினார்.

ரஜினிகாந்தின் தந்தை, தாய் மற்றும் சகோதரியுடன் அயலவர்கள்

ரஜினிகாந்தின் உடன்பிறப்புகள் திருமணமாகி தனித்தனியாக வாழ்வதால், அவரது வருமானத்தை நம்பியிருந்த அவரது பெற்றோர் அநாதரவாகியுள்ளனர் என்று அயலவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, டிப்ட் புரொடக்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து இதுவரை எந்த உதவியும் அல்லது இழப்பீடும் கிடைக்கவில்லை.

காயமடைந்த ஒரு தொழிலாளி கூறியதாவது: 'எங்களுக்கு முறையான காப்பீட்டு பாதுகாப்பு உள்ளதா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் இழப்பீடு வழங்கப்படும் என்று தொழிற்சாலை கூறுகிறது.'

மஸ்கெலியாவில் நடந்த மரணம்

விஜயகுமார் கொல்லப்பட்ட மவுசாகலை தேயிலை தொழிற்சாலையும் தோட்டமும், இலங்கையின் மற்றொரு கூட்டுத்தாபன குழுமமான ரிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் (ARPICO-ஆர்பிகோ) கட்டுப்பாட்டில் உள்ள மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமானது.

சனிக்கிழமை விஜயகுமாரின் இறுதிச் சடங்கின் போது, ​​அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக தொழிலாளர்களும் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் பேசினர். தங்கள் சக தொழிலாளியின் மரணத்தால் அதிர்ச்சியும் கோபமும் அடைந்த தொழிலாளர்கள், ஆர்பிகோ நிறுவனம் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினர்.

கிருஷ்ணன் விஜயகுமாரின் இறுதிச் சடங்கில் WSWS நிருபருடன் மவுசாகலை தோட்டத் தொழிலாளர்கள் பேசியபோது

https://www.wsws.org/asset/a002327e-4bf2-487f-8627-ba55068ccb54?rendition=image1280

ஒரு தொழிலாளி விளக்கியதாவது: “விஜயகுமார் இயக்கிய இயந்திரத்திற்கு அருகிலுள்ள ஒரு இயந்திரத்தில் நான் வேலை செய்கிறேன். மூன்று கால்கள் கொண்ட இந்த இயந்திரங்களில் மூன்று பாதுகாப்பு ஆவரணங்கள் இருக்க வேண்டும். இந்த ஆவரணங்கள் இருந்தால், கைகள் அல்லது உடலின் பிற பாகங்கள் இயந்திரத்தில் சிக்குவது தடுக்கப்படும்.

“ஆனால் விஜயகுமார் வேலை செய்து கொண்டிருந்த இயந்திரத்தில் மூன்று பாதுகாப்பு ஆவரணங்களும் இல்லை. அதனால்தான் அவரது ஜாக்கெட் இயந்திரத்தில் சிக்கிக் கொண்டது. அவர் உள்ளே இழுக்கப்பட்டதோடு அவரது தலையின் பின்புறம் இயந்திரத்தில் மோதியது. பாதுகாப்பு ஆவரணங்கள் இருந்திருந்தால், அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்.”

இந்த தொழிற்சாலையில் இயந்திரங்களை இயக்க முன்னர் நியமிக்கப்பட்டு இப்போது வேறொரு நிறுவனத்தில் பணிபுரியும் மற்றொரு ஊழியர், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொறுப்பான ஒரு தனி அதிகாரி இருக்க வேண்டும் என்று கூறினார்.

“ஒரு தொழிலாளி வேலையைத் தொடங்குவதற்கு முன், இயந்திரத்தை ஆய்வு செய்ய வேண்டும். உண்மையில், இயந்திரத்தில் பல ஆண்டுகளாக பாதுகாப்பு ஆவரணங்கள் இல்லை. அது மட்டுமல்லாமல், தொழிலாளியின் பாதுகாப்பு உபகரணங்களை முறையாகச் சரிபார்க்க வேண்டும். அப்படி இல்லாததால்தான் அவரது ஜாக்கெட் இயந்திரத்தில் சிக்கிக் கொண்டது.

'உண்மையில், இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகள் குறித்து தொழிலாளர்களுக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எப்படியிருந்தாலும், மரணத்திற்கான முதன்மைக் காரணம் பாதுகாப்பு ஆவரணங்கள் இல்லாததுதான். இந்த மரணத்திற்கு நிறுவனமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.'

அருகிலுள்ள லக்சபான தேயிலை தொழிற்சாலையில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து குறிப்பிடுகையில், அங்கு தீ எச்சரிக்கை அமைப்பு இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். 'மவுசாகலை தொழிற்சாலையில் தண்ணீர் மற்றும் மணல் வாளிகள் இருந்தாலும், தீயை முறையாக அணைப்பது குறித்து தொழிலாளர்களுக்கு எந்த பயிற்சியும் வழங்கப்படவில்லை.'

இயந்திரத்தை இயக்கவும் நிறுத்தவும் பயன்படுத்தப்படும் மின்விசைகள் மூடப்பட்டிருக்கவில்லை என்றும், அவை மின் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன என்றும் மற்றொரு தொழிலாளி கூறினார். 'தேயிலை தயாரிப்பு அதிகாரியிடம் பலமுறை சொன்னேன், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது நான் ஒரு மரக் குச்சியைப் பயன்படுத்தி மின்விசையை இயக்க வேண்டும்,' என அவர் தெரிவித்தார்.

தொழிற்சாலையில் தேயிலை கொழுந்துகளை அரைப்பது இரவு 10 மணிக்குத் தொடங்குகிறது என்றும், அதிக வேலை உள்ள நாட்களில், அவர்கள் அடுத்த நாள் மதியம் 1.30 மணி வரை வேலையை தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலதிக மணிநேரங்களுக்கு மேலதிக நேர ஊதியம் பெற தொழிலாளர்களுக்கு உரிமை இருந்தாலும், அது ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் மட்டுமே. அதற்கு மேல் வேலை செய்தால் ஊதியம் கழிக்கப்படும்.

“நாங்கள் இவ்வளவு அதிகமாக சுரண்டப்பட்டாலும், கம்பனிகள் எங்கள் ஊதியத்தை அதிகரிக்க முடியாது என்று கூறுகின்றன. நாம் துன்பப்பட்டாலும், காயமடைந்தாலும், அல்லது இயந்திரத்தில் சிக்கி விஜயகுமாரைப் போல இறந்தாலும், அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. நாங்கள் செத்தாலும் பரவாயில்லை அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றனர்.”

கிருஷ்ணன் விஜயகுமாருக்கு அஞ்சலி பதாகை

https://www.wsws.org/asset/a01bbf06-0a88-491a-b270-07e96d188950?rendition=image1280

தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் கோபத்தை தணிக்கும் முயற்சியில், தோட்ட முகாமையாளர் விஜயகுமாரின் பிள்ளைகளுக்கு அவரது மரணத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். அத்தகைய வாய்மொழி வாக்குறுதியை நம்ப முடியாது என்று தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.

கிரிபோருவ தோட்ட தொழிற்சாலையில் பாலில் இறப்பர் தயாரிக்கும் இயந்திரம் வெடித்ததால் ஏற்பட்ட மரணத்தை ஒரு சாதாரண சம்பவமாகவும், மவுசாகலை தொழிற்சாலையில் ஏற்பட்ட மரணம் ஒரு தொழிலாளியின் ஜாக்கெட் ஒரு இயந்திரத்தில் சிக்கியதால் ஏற்பட்டதாகவும் அனைத்து முதலாளித்துவ ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளமை, தொழிலாளர்களின் உயிரை அவர்கள் அலட்சியம் செய்வதை நிரூபிக்கிறது.

தொழில்துறை கொலைகள்

தொழிலாளர்களைப் பாதுகாக்க பாதுகாப்பு வழிமுறைகள் இருந்திருந்தால் இந்த இரண்டு மரணங்களும் நிகழ்ந்திருக்காது. அவை தொழில்துறை கொலைகளுக்குச் சமம். இந்த பெரிய நிறுவனங்கள் உயிர்களைப் பொருட்படுத்தாமல் லாபம் ஈட்டுவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன.

நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்படும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் முதலாளிகளால் செய்யப்படும் இந்தக் குற்றங்களுக்கு பொறுப்பாகும். 'தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல், நிறுவனங்கள் இப்படி நடந்து கொள்ள முடியாது. ஆனால் தொழிற்சங்கத் தலைவர்களும் அரசாங்கமும் இதைப் பற்றி எதுவும் செய்யவில்லை,' என ஒரு தொழிலாளி கூறினார்.

இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் ஒன்றான தோட்டத் தொழிலாளர்களுக்கு, மாத சம்பளம் மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை இரண்டும் மறுக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறையின் கணக்கீடுகளின்படி, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்ச மாத வருமானம் 90,000–100,000 ரூபாய் தேவைப்படுகிறது. இருப்பினும், இப்போது வாழ்க்கைச் செலவு இன்னும் அதிகமாக இருப்பதால், ஒரு தோட்டத் தொழிலாளியின் சராசரி சம்பளம் மாதம் சுமார் 25,000 ரூபாய் மட்டுமே. அவர்கள் 12க்கு 10 அடி முகாம் போன்ற லயன் அறைகளிலேயே வசிக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பல முறை பழுதுபார்க்கப்பட்ட அறைகளாகும்.

5 நவம்பர் 2025 அன்று இறந்த கிருஷ்ணன் விஜயகுமாரின் லயன் அறை

இலங்கையில் தொழில்துறை விபத்துக்களில் காயமடைந்த அல்லது கொல்லப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 2,000 அபாயகரமற்ற வேலைத் தள விபத்துகளும் 60–80 அபாயகரமான விபத்துகளும் நிகழ்கின்றன.

சமீபத்திய சில மரணங்கள் பின்வருமாறு:

  • 8 ஆகஸ்ட் 2025 அன்று, கொழும்பு துறைமுக சர்வதேச கொள்கலன் முனையத்தில் நடந்த விபத்தில் 51 வயதான முதல்கட்ட சாரதி ஒருவர் கொல்லப்பட்டார்.
  • ரத்தினபுரியைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர், ஆகஸ்ட் 2025 இன் பிற்பகுதியில், கொழும்பு புறநகர்ப் பகுதியான சபுகஸ்கந்தையின் மாகொலவில் நடந்த தொழில்துறை விபத்தில் இயந்திரங்களில் சிக்கி இறந்தார்.

தொழில்துறைமயமாக்கப்பட்ட நாடுகள் என்று அழைக்கப்படுபவை முதல் பின்தங்கிய நாடுகள் வரை, உலகளவில் வேலைத்தள மரணங்கள் அதிகரித்து வருகின்றன. உதாரணமாக, அக்டோபர் 10 அன்று, அமெரிக்காவின் டென்னசி, பக்ஸ்நார்ட்டில் உள்ள எகுரேட் எனர்ஜி சிஸ்டம்ஸ் (AES) வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிப்பில் 16 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அக்டோபர் 14 அன்று, பங்களாதேஷ் தலைநகரான டாக்காவின் மிர்பூர் பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் 16 தொழிலாளர்கள் எரிந்து மரணித்தனர்.

இலாப நோக்கத்திற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறைத்ததால் ஏற்பட்ட இந்த மரணங்கள், வெறுமனே 'தொழில்துறை விபத்துக்கள்' அல்ல - அவை முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட கொலைகள்.

சோசலிச சமத்துவக் கட்சி, ஒவ்வொரு தொழிற்சாலை, பெருந்தோட்டம் மற்றும் ஏனைய வேலைத் தளங்களிலும் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்துகிறது. அவற்றால் தங்கள் உயிர்களைக் காப்பாற்றவும், வேலைகள் மற்றும் ஊதியங்களுக்காகப் போராடவும் நடவடிக்கை எடுக்க முடியும்.

இத்தகைய குழுக்கள், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உற்பத்தி செய்வதை நிறுத்த வேண்டும், அனைத்து பாதுகாப்புத் தரவுகளையும் முழுமையாக வெளியிடக் கோருவதோடு மேலும் மரணங்கள் மற்றும் காயங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை நிலைநாட்டுவது அவசியம். தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணி, முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில் உலக அளவில் தொழிலாளர்களை அணிதிரட்டப் போராடுகிறது.

Loading