இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில், தொழிலாள வர்க்கத்தின் மிகவும் சுரண்டப்படும் ஒடுக்கப்பட்ட பிரிவான தோட்டத் தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள், கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக 2019 இல் வெடித்த கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னர், பாரதூரமாக மோசமடைந்துள்ளன. ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை, வேலையின்மை மற்றும் வீட்டுவசதிப் பிரச்சினைகள் மேலும் மேலும் தீவிரமாகி வருகின்றன.
அவர்களின் தினசரி ஊதியத்தின் உண்மையான பெறுமதி மேலும் மேலும் சரிந்து வருவதால், அது அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பராமரிக்கப் போதுமானதாக இல்லை என்பது தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினை ஆகும். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் அவரது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)/ தேசிய மக்கள் சக்தியும் (தே.ம.ச.), தங்கள் தேர்தல் மேடைகளில் ஏனைய தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் போலவே, ஆட்சிக்கு வந்தவுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியத்தை உடனடியாக 2,000 ரூபாவாக உயர்த்துவதாக அளித்த வாக்குறுதியையும் குப்பையில் வீசியுள்ளனர். தொழிலாளர்களுக்கு இப்போது 1,350 ரூபா தினசரி ஊதியம் மட்டுமே கிடைக்கின்றது.
சர்வதேச நாணய நிதியம் கட்டங் கட்டமாக வழங்கும் 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனுக்கு ஈடாக விதிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை ஒன்றுவிடாமல் செயல்படுத்தும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், வட்வரி, மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்து வருவதுதடன் சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவையும் வெட்டிக் குறைத்து மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு சமாந்தரமாக, தோட்டக் கம்பனிகளால் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் புதிய வழிமுறைகளும் செயல்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, பெருந்தோட்டத் துறையில் மிகவும் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதை உணர்ந்த முதலாளித்துவ ஆளும் வர்க்கம், தோட்டத் தொழிலாளர்கள் மீதான அதன் அடக்குமுறையை புதிய மட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. மஸ்கெலியா ஓல்டன் தோட்டத்தில் 26 தொழிலாளர்கள் மீதான பழிவாங்கல், இதன் மிக சக்திவாய்ந்த வெளிப்பாடு ஆகும்.
5 பெப்ரவரி 2021 அன்று, சம்பள அதிகரிப்பு கோரி பெருந்தோட்டங்கள் முழுவதும் தொடங்கிய வேலைநிறுத்தத்தில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களும் பங்கேற்றனர். 17 பெப்ரவரி 2021 அன்று முகாமையாளரின் வீட்டிற்கு அருகில் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, முகாமையாளரும் உதவி முகாமையாளரும் தங்களை தொழிலாளர்கள் அடித்ததாக கூறி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நான்கு ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக இந்த ஆண்டு மே மாதமே 26 தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், தொழிலாளர்கள் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.
தோட்டத் தொழிலாளர்கள் உட்பட முழு தொழிலாள வர்க்கத்தையும் மிரட்டி அடிபணியச் செய்வதை இலக்காகக் கொண்ட இந்த வேட்டையாடலில், தோட்ட நிர்வாகம், பொலிஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும், கடந்த கால அரசாங்கங்களும், தற்போதைய ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் மற்றும் தொழில் திணைக்களமும் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றன.
இந்தச் சூழலில், செப்டம்பர் 8 அன்று, ஓல்டன் உட்பட மஸ்கெலியாவில் உள்ள பல தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களைச் சந்தித்த உலக சோசலிச வலைத்தள (WSWS) நிருபர்கள், அவர்களின் சமூக நிலைமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் பற்றி கலந்துரையாடினர்.
மத்திய மலைநாட்டில் உள்ள ஹட்டனில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாமிமலையில் அமைந்துள்ள ஓல்டன் தோட்டத்தின் பிரிவு 10க்குச் சென்ற எமது நிருபர்கள், அங்குள்ள லயன் வீட்டில் வசிக்கும் ஏ. வீரனுடன் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 43 வயதான அவர், நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக, தோட்டப்புறத்தில் உள்ள பல பிள்ளைகளைப் போலவே, ஆரம்பக் கல்விக்குப் பிறகு பாடசாலயை விட்டு வெளியேறிவிட்ட அவர் கூறியதாவது: “நான் 8 ஆம் வகுப்பின் பின்னர் பாடசாலையை விட்டு வெளியேறி 1997 இல் சீதுவவில் உள்ள வொண்டர்லைட் சவர்க்கார நிறுவனத்தில் வேலைக்குச் சென்றேன். அவர்கள் எனக்கு ஒரு நாளுக்கு 75 ரூபா மட்டுமே சம்பளம் கொடுத்தார்கள். நான் அங்கு ஒரு வருடம் வேலை செய்தேன். சம்பளம் போதவில்லை, வேலை அதிகமாக இருந்தது. நான் சரியாக சாப்பிடவில்லை. ஒரு வருடம் கழித்து, நான் வீட்டிற்கு வந்து தோட்டத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது எனக்கு 16 வயது. இப்போது 27 ஆண்டுகளாக தோட்டத்தில் வேலை செய்து வருகிறேன். என் மனைவியும் எஸ்டேட்டில் வேலை செய்கிறார். இரண்டு பேர் வேலை செய்தாலும், நிர்வாகம் எல்லாவற்றையும் கழித்த பிறகு, எங்களுக்கு மாதத்திற்கு 20,000 ரூபா மட்டுமே கிடைக்கிறது. நாங்கள் ஆறு பேரும் இரண்டு வாரம் கூட சாப்பிடுவதற்கு அது போதாது.”
எமது நிருபர்கள் லயன் வீடுகளுக்கு சென்ற போது, வீரன் தனது வீட்டின் அருகிலுள்ள ஒரு பாறையில் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்தார்.
“இன்று என் பிள்ளைகளுக்கு எப்படி சாப்பாடு போடுவது என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க வீட்டில் ஒன்றும் இல்லை. என்னிடம் பணமும் இல்லை. காலையில் அடகு கடைக்கு போய், அங்கே முன்னர் வைத்த அடகில் இருந்து, மேலதிகமாக 2,000 ரூபாய் கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை” என அவர் வருத்தத்துடன் கூறினார்.
அவர் அருகில் இருந்த இளைய பிள்ளை பசியில் தூங்கிவிட்டது. “இந்தக் குழந்தைக்கு ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கம் கொடுக்கும் இலவச திரிபோஷா மாவு கிடைக்கவில்லை. தானியங்கள் வாங்க பணம் இல்ல. அதனால் பிள்ளைகள் ஊட்டச் சத்து குறைபாட்டுடன் உள்ளனர். சம்பள நாட்களில் மட்டுமே பிள்ளைகளுக்கு இறைச்சி அல்லது மீன் வாங்குவோம்.”
முன்னர், குடும்பநல தாதி வீட்டுக்கு வந்து பிள்ளைகளை எடை பார்ப்பார், அவர்களது ஊட்டச்சத்து பற்றி ஆலோசனை கூறுவார். ஆனால் இப்போது அந்த தாதிகளின் பற்றாக்குறை, பயணச் செலவு குறைப்பு காரணமாக, அவர்கள் வீடுகளுக்கு அப்படிப் வருவதில்லை”, என வீரன் கூறினார்.
“இப்போது, குடும்பநல தாதி எடைபார்பதற்காக குழந்தைகளை சுகாதார மையத்துக்குக் கொண்டு வருமாறு செய்தி அனுப்புறார். ஆனால் தொழிலாளிகளான தாய்மாருக்கு இப்போது, முன்னர் போல் குறுகிய விடுமுறை கொடுக்கப்படுவதில்லை. ஒரு நாள் ஊதியம் இல்லாமல்தான் பிள்ளையை எடை பார்க்க கொண்டு செல்ல வேண்டும். கடந்த காலத்தில், பொது சுகாதார மேற்பார்வையாளர் வந்து போவார். இப்போதெல்லாம் அப்படி எதுவும் இல்லை.”
வீரன், தனது பெற்றோரின் மூதாதையர்களுக்கு கிடைத்த தோட்ட லயன் வீடு அவ்வப்போது திருத்தப்பட்டதாக கூறினார். “இது என் அம்மாவுக்குக் கொடுக்கப்பட்ட வீடு. எங்களுக்கு வீடு கிடைக்கவில்லை. அதில் இரண்டு அறைகள் மட்டுமே இருந்தன. நாங்கள் ஒரு சமையலறையைச் சேர்த்து கட்டியுள்ளோம். இந்த இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் எட்டு பேர் வசிக்கிறார்கள். நாங்களே அனைத்து திருத்த வேலைகளையும் செய்ய வேண்டும்.”
முன்பு தோட்டத்தால் நடத்தப்பட்ட மருந்தகங்கள் இப்போது இல்லாததால், நோய்வாய்ப்பட்டவர்களை 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மஸ்கெலியாவுக்கு அல்லது 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டிக்கோயா மருத்துவமனைகளுக்குச் கொண்டு செல்ல வேண்டும், என்று அவர் கூறினார். 'சிறந்த வசதிகளைக் கொண்ட டிக்கோயா மருத்துவமனைக்குச் செல்ல முச்சக்கர வண்டிக்கு 1,500 ரூபா செலவாகும்.'
மரணம் நிகழ்ந்தால் தோட்ட நிர்வாகம் இறுதிச் சடங்கிற்கு 2,000 ரூபா மட்டுமே தருவதாகவும், அவர்களின் பெற்றோரின் தலைமுறையிலிருந்து அந்தத் தொகை அதிகரிக்கப்படவில்லை என்றும் வீரன் கூறினார்.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் விலைகளைக் குறைப்பதாகவும் ஊதியத்தை அதிகரிப்பதாகவும் வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தது, ஆனால் அது எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் கோபமாக கூறினார். “இப்போது ஒரு கிலோ அரிசி. 250 ரூபா, ஒரு சிறிய தேங்காய் 180 ரூபா. இந்த சம்பளத்தில் நாம் எப்படி வாழ முடியும்? நாங்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்ததில்லை. நாங்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளுக்கு தோட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் பொறுப்பு.”
பின்னர், ஓல்டன் தோட்டத்தில் பழிவாங்கப்படும் 26 தொழிலாளர்களைப் பாதுகாக்க சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் ஓல்டன் தோட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுவால் தொடங்கப்பட்டுள்ள பிரச்சாரத்தின் பக்கம் கலந்துரையாடல் திரும்பியது.
வீரன் கூறியதாவது: “நீங்கள் அதை விளக்கும் வரை இது ஒரு பாரதூரமான சூழ்நிலை என்று எனக்குத் தெரியாது. அவர்கள் எங்களுடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட இந்த தோட்டத்தின் அடுத்த பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள். அவர்களைப் பாதுகாக்கும் உங்கள் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்.”
ஓல்டன் தோட்டத்திற்கு அடுத்துள்ள லட்ப்ரோக் தோட்டத்தில் 43 வயதான எஸ். ஜோன் கென்னடி, தனது மனைவி மத்திய கிழக்கில் வேலை செய்து சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்ட வீட்டில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். கென்னடியின் மனைவி தற்போது கொழும்பில் வீட்டுப் பெண்ணாக பணிபுரிகிறார்.
கென்னடி, தோட்டத் தொழிலாளியாக வேலை செய்வதில் உள்ள கஷ்டங்களை விளக்கினார்: “மழைக்காலத்தில், கொழுந்துகளுக்கு பற்றாக்குறை இருக்கும். பின்னர் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும். நீங்கள் ஒரு நாளைக்கு 22 கிலோகிராம் எடுத்தாலும், அவர்கள் சில காரணங்களை கூறி 18 கிலோகிராம் என்று கணக்கிடுவார்கள்.”
1,350 ரூபா நாள் சம்பளத்துக்கு குறைந்தபட்சம் 18 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும். மேலதிக ஒரு கிலோகிராம் கொழுந்துக்கு 60 ரூபா அந்த ஊதியத்தில் சேர்க்கப்பட வேண்டும், ஆனால் கம்பனி அத்தகைய தந்திரங்கள் மூலம் தொழிலாளிக்கு அதை கொடுக்க மறுத்துவிடுகிறது.
கொழுந்து 18 கிலோவுக்கு குறைவாக இருக்கும்போது, பற்றாக்குறையை ஈடுசெய்ய தங்கள் கொழுந்துகளைப் பகிர்ந்துகொள்ளும் சகோதர பாரம்பரியம் தொழிலாளர்களிடையே உள்ளது. ஆனால் இவை அனைத்தையும் மட்டுப்படுத்தவும், சுரண்டலை அதிகரிக்கவும், ஒவ்வொரு தொழிலாளிக்கும் QR குறியீடு கொண்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது. தங்கள் கொழுந்தை எடைபோடும்போது, டிஜிடல் தராசில் QR அட்டையை காட்டினால் ஒரு விசேட செயலி (அப்) மூலம், தொழிலாளியின் கொழுந்தின் அளவு நிர்வாக அலுவலகத்தில் உள்ள கணினியில் உள்ளிடப்படுகிறது.
இலாபத்தை அதிகரிக்க நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய வருவாய் பகிர்வு முறைமை குறித்து கென்னடி பேசினார். இதன் கீழ் ஒரு தொழிலாளிக்கு ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தேயிலைச் செடிகள் ஒதுக்கப்படுகின்றன, அவற்றுக்கு கம்பனியால் உரங்கள் மற்றும் பிற இரசாயனங்கள் வழங்கப்படுகின்றன. தொழிலாளி அதை பராமரிக்க வேண்டும். பின்னர் கம்பனியின் செலவுகள் அறுவடையிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து கழிக்கப்பட்டு மீதமுள்ளவை தொழிலாளிக்கு பகிரப்படும்.
“எங்கள் தோட்டத்திலும் அந்த முறை தொடங்கப்பட்டது. உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வழங்குவதாக நிறுவனங்கள் முன்கூட்டியே கூறின. இறுதியில், எதுவும் நடக்கவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருந்தது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட, நாங்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது. அது எலும்பை உறைய வைக்கும் வேலை. நாங்கள் அனைவரும் அதை நிறுத்திவிட்டோம்,” என கென்னடி கூறினார்.
ஆரம்பத்தில், எஸ்டேட்டில் ஐந்து பிரிவுகளுக்கும் இரண்டு மருத்துவமனைகள் இருந்தன என்று கென்னடி கூறினார். “இப்போது ஒன்றுதான் உள்ளது. சில நேரங்களில் நீங்கள் அங்கு செல்லும்போது வைத்தியர் இருக்கமாட்டார். அங்கிருந்து நீங்கள் மஸ்கெலியாவுக்குச் செல்ல வேண்டும். அவர்கள் அங்கு நிலைமையை பார்த்து டிக்கோயாவுக்கு அனுப்புகிறார்கள். ஒரு முச்சக்கர வண்டிக்கு பணம் செலுத்தி மருந்து வாங்க சென்றால் எவ்வளவு செலவாகும் என்று நினைத்துப் பாருங்கள்?'
“தொழிற்சங்கங்களைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டியதில்லை. இ.தொ.கா. ஒவ்வொரு மாதமும் எங்களிடம் இருந்து 360 ரூபாயை அறவிடுவதை மட்டுமே செய்கிறது. நாங்கள் யாரையும் நம்பவில்லை, பிரயோசனம் இல்லை.”
மஸ்கெலியாவிற்கு அருகிலுள்ள ஒரு ஆரம்ப பாடசாலையின் அதிபர், பெருந்தோட்டப் பகுதியில் உள்ள பாடசாலைகளில் உள்ள வசதிகள் பற்றாக்குறை மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசினார்.
“பெருந்தோட்டப் பிள்ளைகளுக்கு ஒரு பெரிய பிரச்சினை ஊட்டச்சத்து. தொழிலாளர்கள் பெறும் ஊதியம் போதுமானதாக இல்லாததால், அவர்களுக்குத் தேவையான சத்தான உணவை வழங்க அவர்களுக்கு வழி இல்லை. அமெரிக்க வேளாண்மைத் துறையின் (USDA) ஆதரவுடன், சேவ் தி சில்ட்ரன் (Save the Children) திட்டத்தின் ஊடாக, பெருந்தோட்டங்கள் மற்றும் பிற வறிய பிரதேசங்களில் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு காலை உணவை வழங்குகிறது. இருப்பினும், ஜனாதிபதி ட்ரம்பின் சிக்கனத் திட்டத்தின் கீழ் இது தொடருமா என்பது தெரியவில்லை. சேவ் தி சில்ட்ரன் நிதி நிறுத்தப்படுவதாக ஏற்கனவே வதந்திகள் உள்ளன.”
பெற்றோரின் உழைப்பைப் பயன்படுத்தி கட்டப்பட்ட தற்காலிக கட்டிடத்தைக் காட்டிய அதிபர், நிரந்தர கட்டிடத்திற்கான அவசரத் தேவையை விளக்கினார். பாடசாலையில் 219 மாணவர்கள் இருந்தாலும், நான்கு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. ஆண் மாணவர்களும் ஆசிரியர்களும் இரண்டு கழிப்பறைகளைப் பயன்படுத்துகிறார்கள், அதே நேரம் மாணவிகளும் ஆசிரியைகளும் இரண்டு கழிப்பறைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
“நான் 37 ஆண்டுகளாக ஆசிரியராக இருக்கிறேன். 1990களின் பிற்பகுதியில்தான், பாடசாலையின் சுவர்களில் பெரிய எழுத்துக்களில், இது என் குழந்தையின் பாடசாலை என்று எழுதத் தொடங்கினேன். அதாவது, அரசாங்கம் பாடசாலையின் அனைத்துப் பொறுப்புகளையும் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டதுடன், அரசாங்கம் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிச் சென்றுவிட்டது. அத்தகைய பாடசாலைகளின் மிகவும் ஏழ்மையான பெற்றோர்களால் அந்தப் பொறுப்பை ஏற்க முடியாது.”
முழுப் பாடசாலையிலும் 09 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். உடற்கல்வி மற்றும் ஆங்கில பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லை.
“பெருந்தோட்டங்களிலும், இலங்கை முழுவதும், குறிப்பாக ஆங்கில மொழியில், ஆசிரியர்களுக்கு பெரும் பற்றாக்குறை உள்ளது. அதனால்தான் கல்வி அமைச்சு 300க்கும் மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட பாடசாலைகளுக்கு மட்டுமே ஆங்கில ஆசிரியர்களை வழங்குகிறது. ஜே.வி.பி. அரசாங்கத்தின் புதிய கல்வி மறுசீரமைப்பால் இந்த நிலைமை மோசமடையும் என்று நான் நினைக்கிறேன்.'
மேலும் படிக்க
- இலங்கை பொலிஸ் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்களைத் தாக்கல் செய்துள்ளது
- இலங்கையில் பழிவாங்கப்படும் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்
- உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதற்கான ஆளும் கட்சி மற்றும் இ.தொ.கா. ஒப்பந்தம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை