இலங்கை ஜனாதிபதி அதிகரித்துவரும் அமைதியின்மைக்கு மத்தியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அற்ப சம்பள அதிகரிப்பு தருவதாக வாக்குறுதியளிக்கிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஒக்டோபர் 12 அன்று, இலங்கையின் பிதான பெருந்தோட்ட மாவட்டங்களில் ஒன்றான பண்டாரவளையில் நடந்த பொதுக் கூட்டத்தில், 2025 ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்பு தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ($US5.60) ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக வாக்குறுதியளித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில், 10 பேர்சஸ் (250 சதுர மீற்றர்) அளவுள்ள நிலத்தில் புதிய வீடு கட்டித்தரப்படும் என்று வாக்குறுதியளிக்கின்ற கடிதங்கள் பல மாவட்டங்களில் இருந்து வந்த 2,000 குடும்பங்களுக்கு அடையாளமாக வழங்கப்பட்டன. அந்தக் கடிதங்கள், வீட்டுத் திட்டம் முடிவடைந்ததும் அதற்கான உரிமைப்பத்திரம் வழங்கப்படும் என்றும் உறுதிப்படுத்துகின்றன.

இந்த அறிவித்தல்கள், மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வளமான நாடு அழகான வாழ்க்கை விஞ்ஞாபனத்தின் ஒரு பாகமாக காட்டப்பட்டுள்ளன. உண்மையில் இந்த வீட்டுத் திட்டமானது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான வருகையின் போது ஆரம்பிக்கபட்ட, 2017 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் உதவியில் இருந்து வழங்கப்படுபவை ஆகும். இந்த வேலைத்திட்டம், தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குவதில் பேர்போன மற்றும் அவப்பேறு பெற்ற பெருந்தோட்ட தொழிற் சங்கத் தலைவரான பழனி திகாம்பரத்தால் அப்போது முன்னெடுக்கப்பட்ட்தாகும்.

12 ஒக்டோபர் 2025 அன்று பண்டாரவளையில் இலங்கை ஜனாதிபதி திசாநாயக தொழிலாளர்கள் முன் உரையாற்றிய போது [Photo: Facebook/Sundaralingam Pradeep] [Photo: Facebook/Sundaralingam Pradeep]

சம்பளம் மற்றும் நிலைமைகள் மோசமடைவது சம்பந்தமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்துவரும் கோபங்கள் பற்றி விழிப்புடன் இருந்த திசாநாயக, “மலையக மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கை வாழ நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டும்” என பார்வையாளர்களுக்கு கூறினார். தனது அரசாங்கம் “இந்த ஆண்டுக்குள் ஏதாவதொரு வழியில்” ரூபா 1,750 நாளாந்த ஊதியத்திற்கான கோரிக்கையை வழங்கும் என அவர் கூறிக்கொண்டார்.

இந்த வாக்குறுதியின் வெறுமை வெளிப்படையானது. விஷேடமாக  2020 கோவிட்-19 நெருக்கடி மற்றும் 2022 பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்ட கூர்மையான அதிகரிப்பை கருத்தில் கொண்டால், 400 ரூபா அதிகரிப்பானது குறைந்தபட்ச வீட்டுத் தேவைகளைக் கூட நிறைவு செய்யாது. ஜே.வி.பி.யின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் (ACEWU), கடைசியாக நடந்த தேர்தலுக்கு முன்னர் ரூபா 2,000 நாள் சம்பளத்திற்காக முன்னர் பிரச்சாரம் செய்தது. அதுவும் ஏனைய வாக்கறுதிகளைப் போலவே தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கைவிடப்பட்டது.

2023 அரசாங்கத் தரவின் படி, இரண்டு பிள்ளைகளுடன் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு அடிப்படை உயிர்வாழ்விற்கு மாதம் ஒன்றுக்கு ரூபா 92,000 முதல் 100,000 வரை அவசியம். நாளொன்றுகு 1,750 ரூபா படி, சட்ட ரீதியாக 24 நாட்கள் வேலை செய்யும் ஒரு தொழிலாளி, மாதாந்தம் வெறும் 42,000 ரூபாவையே ஈட்டுகின்றார். கணவனும் மனைவியும் வேலை செய்தால் ரூபா 84,000 மாத்திரமே ஈட்ட முடியும். இந்த தொகையும் வறுமைக் கோட்டிற்கு கீழேயே உள்ளது.

ஒக்டோபர் 15 அன்று, திசாநாயக சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட கம்பனி உரிமையாளர்களைச் சந்தித்தார், கம்பனிகள் -இந்த திட்டத்தை நிராகரிக்கும் வகையில்- சம்பள அதிகரிப்பை அமுல்படுத்துவதில் உள்ள “சவால்களை” மேற்கோள்காட்டியதாக ஜனாதிபதியின் ஊடக மையம் கூறியுள்ளது. எந்தவொரு தோட்ட உரிமையாளரும் ஒக்டோபர் 18 அன்று தோட்ட கம்பனிகள், தொழிற் சங்கங்கள் மற்றும் தொழில் திணைக்களத்துடன் நடந்த கூட்டத்தில் பங்குபற்றவில்லை.

ஒக்டோபர் 12 அன்று நடந்த நிகழ்வு கூட்டத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு அப்பால் ஏனையவர்கள் மத்தியில் பெரியளவில் உற்சாகத்தை ஏற்படுத்தவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்கள், ஒவ்வொரு அரசாங்கம் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) தொடக்கம் தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா) வரையான தொழிற்சங்கங்களிடம் இருந்து பல தசாப்தங்களுக்கு மேலாக இதுபோன்ற வாக்குறுதிகளை கேட்டுள்ளனர்.

ஹட்டனில் தேயிலை தோட்ட லயன் குடியிருப்புகள்

வாழ்க்கைக்கேற்ற சம்பளத்திற்கான தோட்டத் தொழிலாளர்களின் தசாப்தகால போராட்டத்தை தொடர்ச்சியாக காட்டிக்கொடுத்து வந்த ஜே.வி.பி.யின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் மேற்குறிப்பிட்ட அதிகாரத்துவங்களில் இன்னொன்று ஆகும்.

10,000 வீடுகள் வழங்கும் இந்திய வீடமைப்பு வேலைத்திட்டம் வீட்டு நெருக்கடியில் மிகச் சொற்ப அளவையே தீர்க்கும். தோட்டத் தொழிலாளர்களில் பல குடும்பங்கள் இன்னமும் 10க்கு 12அடி அளவுள்ள காலனித்துவ கால கொட்டகையிலேயே வாழ்கின்றன.

சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு இலங்கையின் அரசியல் ஆளும் உயரடுக்குகள் கையாண்ட பரந்த மூலோபாயத்தின் ஒரு பாகமாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இந்திய வம்சாவளி என்பதை காட்டி தமிழ் பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமையை 1948 இல் பறித்தது.

பல குடும்பங்கள் இந்தியாவிற்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர், இறுதியில் இந்த உரிமைகள் மீண்டும் வழங்கப்பட்ட போதிலும் இந்த சமூகம் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றனர். தமிழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விரோதமான சரித்திரத்தைக் கொண்ட சிங்களப் பேரினவாத ஜே.வி.பி., 1948 இழைக்கப்பட்ட அநீதியை தற்போது சுட்டிக்காட்டுகிறது என்றால், அது மக்களை ஏமாற்றுதவற்கான ஒரு தெளிவான முயற்சியே ஆகும்.

இந்திய-நிதியிலான ஒவ்வொரு வீடும் இரண்டு படுக்கை அறைகள், ஒரு விராந்தை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகியவற்றைக் கொண்ட 550 சதுர அடியுள்ள (51 சதுர மீற்றர்) வீடு ஆகும். வீடு கட்டும் செலவுகளைக் குறைப்பதற்காக குடும்பங்கள் அவற்றின் உழைப்பை அர்ப்பணிப்பதோடு மூலப்பொருட்களுக்கும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது அதிகபட்ச சுரண்டல்களுடன் நாளாந்த ஊதியம் ஈட்டுபவர்கள் மீது அதிக சுமையை திணிப்பதாகும்.

ஒரு மதிப்பீட்டின் படி பெருந்தோட்டங்களில் சுமார் 261,000 குடும்பங்கள் வசிக்கின்றன. அதாவது இலட்சக்கணக்கான வீடுகள் அவசியம் என்பதே இதன் அர்த்தம் ஆகும். அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் ஆதரவுடன், தோட்டக் கம்பனிகள் இந்தத் தொழிலாளர்களை அதிகபட்சம் சுரண்டி, உயர்ந்த இலாபங்களை ஈட்டுவதோடு வீட்டுப் பிரச்சினைகளை முற்றுமுழுதாக புறக்கணித்துள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணோடு கட்டுண்டு உழைத்தவர்கள் என திசாநாயக அறிவித்தாலும், அவர்களின் நிலைமைகள் மிகக் கடுமையாகவும் மோசமாகவும் உள்ளது. இவர்களின் “பொருளாதார” மற்றும் ”சமூக” சூழ்நிலைகளை மேம்படுத்துவதாக வாக்குறுதியளித்த திசாநாயக, கல்வி, சுகாதாரம், வருமானம் மற்றும் மன அமைதி ஆகியன ”அடிப்படை உரிமைகள்” என அறிவித்தார்.

ஓல்டன் தோட்டத்தில் உள்ள லைன் அறையின் ஒரு பகுதி

தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டத்தைப் பற்றி மறுபேச்சுவார்த்தை நடத்த உறுதியளித்திருந்தாலும் பதவியை ஏற்றதில் இருந்து திசாநாயக சர்வதேச நாணய நிதிய கொள்கைகளையே தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அடங்குவர்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ”கல்வி மறுசீரமைப்பின்” கீழ் -கல்வி முறையில் வினைத்திறன் என விபரிக்கப்பட்டு- ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடிவிடவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. பல பெருந்தோட்டப் பாடசாலைகள் இந்த வகைக்குள் அகப்படுவதோடு இதன் அர்த்தம் பாடசாலைகள் மூடப்படுவதும் மாணவர் இடைவிலகல் அதிகரிப்பும் ஆகும். இந்த ”மறுசீரமைப்பு” மூடி மறைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட வெட்டு ஆகும்.

பண்டாரவளையில் ஜனாதிபதி நேரடியாக தோன்றியமை 2025 மே மாதம் நடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் பெருந்தோட்டப் பகுதியில் நடந்த மிக முக்கியமான நிகழ்வு ஆகும். 2024 ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலின் போதும், பாரம்பரிய பெருந்தோட்ட தொழிற்சங்கங்களாகவும் அரசியல் கட்சிகளாகவும் செயற்படும் இ.தொ.கா., தொழிலாளர் தேசிய சங்கம், ம.ம.மு., ஜ.தொ.கா. ஆகியவற்றின் மீதான தொழிலாளர்களின் வெறுப்பை ஜே.வி.பி./தே.ம.ச. சாதகமாக்கிக்கொண்டது. பாரம்பரிய முதலாளித்துவ கட்சிகளுக்கான ஆதரவு பாரியளவு சரிந்தமையின் விளைவாகவே ஜே.வி.பி./தே.ம.ச. வெற்றியடைய முடிந்தது. ஜனாதிபதி தேர்தலில் 42.3 சதவீத மொத்த வாக்குகளைப் பெற்ற ஜே.வி.பி./தே.ம.ச., பாராளுமன்ற தேர்தலில் 61.6 சதவீதமாக அதிகரித்தது. இதனால் திசாநாயக ஜனாதிபதி ஆனதுடன், ஜே.வி.பி./தே.ம.ச. பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றது.

ஆனால் ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் திசாநாயக நிர்வாகத்திற்கு எதிராக எதிர்ப்பு அதிகரித்ததுடன், அது, பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி./தே.ம.ச. பெற்ற வாக்குகளோடு ஒப்பிடப்படும் போது உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அதன் வாக்குகள் 18.3 சதவீதம் வீழ்ச்சி கண்டதில் பிரதிபலித்தது.

நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய பிரதான பெருந்தோட்ட மாவட்டங்களில் அதன் வாக்குகள் முறையே 13 மற்றும் 16 சதவீதத்தால் குறைவடைந்தன. பெரும்பான்மையை இழந்த இடங்களில் ஜே.வி.பி./தே.ம.ச. உள்ளுராட்சி சபையை ஆள்வதற்கு இ.தொ.கா.வின் ஆதரவைப் பெற முயற்சித்த அதவேளை, எல்லா இடங்களிலும் இ.தொ.கா.வுக்கும் அவ்வாறே அது உதவியது.

மாகாண சபைத் தேர்தல்களை தாமதிப்பதால் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கும்  ஜே.வி.பி./தே.ம.ச அரசாங்கம், தற்போது அதை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்துவதாக அறிவித்துள்ள அதேவேளை, தொழிலாளர்களின் உரிமைகளின் பாதுகாவலர்களாக காட்டிக்கொள்வதன் மூலம் பெருந்தோட்டப் பிரதேசங்களில் அதன் சுருங்கிவரும் தேர்தல் ஆதரவு தளத்தை குறைவடையாமல் பேண முயற்சிக்கின்றது. எல்லா இடங்களிலும் போலவே, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொழிலாளர் போராட்டங்களை அடக்கி வைப்பதன் மூலம் அரசாங்கத்தின் பிரதான அரசியல் முண்டுகோலாக செயற்படுகின்றன.

திசாநாயகவின் உரை, விஷேடமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடையாளம் பற்றி பேசும் போது கபடத்தனமானதாக இருந்தது. “உங்களுடைய மூதாதையர் 202 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வந்தனர். … நீங்கள் எப்படி வெளிநபர்கள் ஆக முடியும். நாம் உங்களை இந்த நாட்டின் தனித்துவ அடையாளம் கொண்ட ஒரு சமூகமாக அங்கீகரிக்க வேண்டும்” என அவர் கூறினார்.

ஜே.வி.பி.யின் அரசியல் வரலாற்றுடன் பழக்கப்பட்ட எவரும் இந்த கருத்தின் ஏமாற்றுத்தனத்தை உணருவர்.

1960களின் இறுதியில் ஜே.வி.பி.யின் காரியாளர்களைப் பயிற்றுவிப்பதன் ஒரு பாகமான அதன் “ஐந்து வகுப்புகளில் ஒன்று” அரை-காலனித்துவ நாடான இந்தியாவை ஒரு ஏகாதிபத்திய அச்சுறுத்தல் என் முத்திரை குத்தியதோடு பெருந்தோட்டத் தொழிலாளர்களை “இந்திய விஸ்தரிப்புவாதத்தின் ஐந்தாவது படை” என முத்திரை குத்தியது.

இன்று திசாநாயக, அரசியல் கட்சிகளாகச் செயற்படும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் மற்றும் வட கிழக்கில் உள்ள தமிழ் தேசியவாதக் கட்சிகளால் முன்னிலைப்படுத்தப்படும் அதே அடையாள அரசியலை ஊக்குவிக்கின்றார். அவர் தொடர்ச்சியாக இந்தத் தொழிலாளர்களை ”மலையக மக்கள்” எனக் குறிப்பிட்டதோடு “தனித்துவமான அடையாளம் கொண்ட ஒரு சமூகம்” என அவர்களை அங்கீகரிக்க அழைப்பு விடுத்தார்.

ஜே.வி.பி./தே.ம.ச. அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் ஊக்குவிக்கப்பட்ட இந்த அடையாள அரசியல் தொழிலாள வர்க்கத்தை இன மற்றும் மத எல்லைகள் ஊடாக பிளவுபடுத்த சேவை செய்கின்றது. தோட்டப்புற பிரதேசங்களில் வணிக நலன்களைக் கொண்ட தொழிற்சங்கத் தலைவர்களும் மற்றும் தலைதூக்கி வரும் மத்தியதர-வர்க்க பிரிவுகளும் தமது சொந்த வர்க்க திட்ட நிரல்களுக்கு பயன்படக்கூடிய தனியான நிர்வாக மாவட்டத்தை உருவாக்க ஆதரவு தேடுகின்றனர்.

பாரிய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இன வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளர்கள் ஐக்கியப்பட்ட, 2022 ஏப்ரல்-ஜூலை வெகுஜன எழுச்சியைக் கண்டு ஜே.வி.பி./தே.ம.ச. உட்பட சகல ஆளும் கட்சிகளும் பீதியடைந்துள்ளன. அந்த இயக்கம் ஒட்டுமொத்த முதலாளித்தவ அமைப்புமுறைக்கு எதிராக வர்க்க ஐக்கியத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்த பிரிவினையான அடையாள அரசியலை நிராகரிக்க வேண்டும். இந்திய போல்ஷிவிக் லெனினிச கட்சியின் (BLPI) முன்னைய ட்ரொட்ஸ்கிசத் தலைவரான கொல்வின் ஆர்.டி. சில்வா, 1948 இல் பாராளுமன்றத்தில் பிற்போக்கு பிரஜா உரிமைச் சட்டத்தை எதிர்த்து பிரகடனம் செய்ததாவது:

“இந்த அரசாங்கம் இந்தப் பிரச்சினையை முதலாளித்துவ வர்க்கக் கோணத்தில் இருந்து அணுகுமாயின், எமது கட்சியான நான்காம் அகிலமானது பாட்டாளிகளின், அதாவது தொழிலாள வர்க்க கோணத்தில் இருந்து அணுகும். இன்னும் தெளிவாகக் கூறினால், நாம் இதை இனப் பிரச்சினைக்கு அப்பாட்பட்ட, இனப்பிரச்சினையில் இருந்து சுயாதீனமாக, வர்க்கக் கோணத்தில் இருந்து அணுகுவோம். இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு மத்தியில் காணப்படும் நிலைப்பாட்டைப் போல்,  நாமும் ஒருவரின் இன வம்சாவழியின் அடிப்படையில் மனிதனுக்கு மனிதனை வேறுபடுத்திப் பார்க்க நாம் தயாரில்லை. ஒரு தொழிலாளி முதலும் முக்கியமுமாக ஒரு தொழிலாளி என்று நாம் கூறுகின்றோம்.

தமிழ் பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டத்திற்கும் அதை அமுல்படுத்தும் முதலாளித்துவ ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கும் எதிராக, சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இன மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்த தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் ஊடாக மாத்திரமே, வாழ்வதற்கு ஏற்ற சம்பளம், ஒழுக்கமான வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த முடியும்.

Loading