இலங்கையில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான ஜோடிக்கப்பட்ட அடக்குமுறை வழக்கு தொடர்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

28 ஆகஸ்ட் 2022 அன்று மஸ்கெலியாவில் உள்ள சாமிமலை நோக்கி தொழிலாளர்கள் போராட்டத்திற்காக பேரணியாகச் சென்ற போது

செப்டம்பர் 10 அன்று, இலங்கையில் ஹட்டன் நீதவான் நீதிமன்றம், 26 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான ஜோடிக்கப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இருப்பினும், முக்கிய சாட்சிகளான தோட்ட முகாமையாளர் சத்தியமூர்த்தி சுபாஷ் நாராயணனும் உதவி முகாமையாளர் அனுஷன் திருச்செல்வமும் நீதிமன்றத்திற்கு வருகை தரத் தவறியதால், வழக்கு டிசம்பர் 10 வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாராயணனின் முகவரி தெரியாததாலும் திருச்செல்வம் தற்போது வெளிநாட்டில் இருப்பதாலும் அழைப்பாணை வழங்க முடியவில்லை என்று பொலிசார் கூறினர். ஒருமாத  கைகுழந்தையுடன்  வந்த தாய் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 26 தொழிலாளர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.

நாராயணன் மற்றும் திருச்செல்வத்தைத் தாக்கும் நோக்கத்துடன் சட்டவிரோதமாக ஒன்று கூடியதாகவும் கைகள், கால்கள் மற்றும் தடிகளால் அடித்து அவர்களுக்குப் பலத்த காயம் ஏற்படுத்தியதாகவும் தோட்ட முகாமையாளரின் வீட்டை சேதப்படுத்தியதாகவும் தொழிலாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் கடுமையான அபராதமும் விதிக்கப்படும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளனர். தொழிலாளர்களின் தாய்மொழியாக தமிழாக இருந்தபோதிலும், குற்றப்பத்திரிகைகள் சிங்களத்தில் வழங்கப்பட்டுள்ளன. இது அவர்களின் அரசியலமைப்பு மற்றும் சட்ட உரிமைகளை மீறுவதாகும்.

பாதிக்கப்பட்ட ஓல்டன் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் ஆதரவை இரட்டிப்பாக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும் வலியுறுத்துகின்றன.

இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் ஒன்றான தோட்டத் தொழிலாளர்கள் 2021 பெப்ரவரி 5 அன்று 1,000 ரூபாய் தினசரி ஊதியம் கோரி நடத்திய தேசிய வேலைநிறுத்தத்தில் ஓல்டன் தொழிலாளர்களும் இணைந்துகொண்டனர். அப்போது இருந்தே, அவர்களுக்கு எதிரான தொடர்ச்சியான ஜோடிப்பு வழக்கும் மற்றும் அடக்குமுறையும் தொடங்கியது.

நிர்வாகத்தின் தொடர்ச்சியான துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெப்ரவரி 17 அன்று, அவர்கள் முகாமையாளரின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். பின்னர் நிர்வாகமானது குற்றவியல் குற்றச்சாட்டுகளை ஜோடிக்க இந்த நடவடிக்கையைப் பயன்படுத்திக்கொண்டது.

2021 பெப்ரவரி 17 முதல் மார்ச் 22 வரையான காலப்பகுதியில் ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 24 தொழிலாளர்களையும் இரண்டு இளைஞர்களையும் பொலிசார் கைது செய்தனர். தோட்டத்தை நிர்வகிக்கும் ஹொரண பெருந்தோட்டக் கம்பனி, எந்தவொரு உத்தியோகபூர்வ விசாரணையும் இல்லாமல் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 38 தொழிலாளர்களை உடனடியாக வேலைநீக்கம் செய்தது. 2021 ஏப்ரலில், இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் தொழிலாளர்கள் மீது பொலிஸ் குற்றம் சாட்டியது.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதை தொடர்ச்சியாக தாமதித்து வந்த பொலிஸ், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே 2025 மே 28 அன்று, குற்றப் பத்திரிகையை தாக்கல்  செய்தது. இதன் விளைவாகவே வழக்கு செப்டம்பர் 10 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில், குற்றம் சாட்டப்பட்ட 26 தொழிலாளர்களும் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனால் அவர்கள் சிரமங்களுக்கு உள்ளானதுடன் வழக்கு செலவுகளையும் தாங்கிக்கொள்ளத் தள்ளப்பட்டனர்.

15 டிசம்பர் 2024 அன்று, மஸ்கெலியா பொலிஸ் அதிகாரி ஒருவர், முகாமையாளரின் வீட்டை சேதப்படுத்தியதற்காக தொழிலாளர்கள் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சட்டமா அதிபர் முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும், நீதிபதி வழக்கை ஒத்திவைத்து, புதிய குற்றச்சாட்டுகளை வகுப்பதற்கு பொலிசாருக்கு மேலதிக அவகாசம் அளித்தார்.

9 ஜனவரி 2025 அன்று, ஹட்டன் தொழில் நீதிமன்ற நீதிபதி, வேலைநீக்கம் செய்யப்பட்ட 13 தொழிலாளர்கள் மீண்டும் வேலையில் அமர்த்தவும், ஊதியத்தை மீண்டும் வழங்கவும் கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தார். பின்னர் நீதிபதி, 13 தொழிலாளர்கள் தலா 7,500 ரூபாய் சட்டச் செலவுகளுக்காக ஹொரண பெருந்தோட்டக் கம்பனிக்கு செலுத்த உத்தரவிட்டார். அதன் பின்னர் தொழிலாளர்கள் மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

தோட்டத் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் வெளிப்படையான மற்றும் மறைமுக ஆதரவு இல்லாமல், தோட்டக் கம்பனி மற்றும் அரச அதிகாரிகளால் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாகப் பழிவாங்கப்பட்டு துன்புறுத்தப்பட்டிருக்க முடியாது.

பிரதான தோட்டத் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் பெயர்களை பொலிசாருக்கு வழங்கியதன் மூலமும், சிலரை சரணடையுமாறு கட்டளையிட்டதன் மூலமும் பொலிசாருடன் கூட்டாக ஒத்துழைத்தது. தொழில் நீதிமன்ற  தீர்ப்பு 'தொழிலாளர்களுக்கு எதிரானது' என்பதை இ.தொ.கா. ஏற்றுக் கொண்டபோதும், அது அதற்கு எதிராக சட்டப்பூர்வ மேல்முறையீட்டை மேற்கொள்ள மறுத்துவிட்டது.

ஓல்டன் தோட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் ஒரு பிரிவினர்

மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) கட்டுப்பாட்டில் உள்ள அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் உட்பட ஏனய தொழிற்சங்கங்கள் மௌனமாக இருந்து, அடக்குமுறையை மறைமுகமாக ஆதரித்தன.

நீண்டகால சட்ட நடவடிக்கைகள் மற்றும் பெருமளவிலான வேலை நீக்கங்கள் தொழிலாளர்களுக்கு கடுமையான சிரமங்களை உருவாக்கியுள்ளன. தொழிலாளர்கள் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க ஓல்டனில் இருந்து ஹட்டனுக்கு 20 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியிருப்பதுடன், ஒவ்வொரு முறையும் போக்குவரத்து மற்றும் வழக்கு செலவுகளுக்காக சுமார் 4,000 ரூபாய் செலவிடுகின்றனர். வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் பலருக்கு தற்காலிக அல்லது குறைந்த சம்பளம் பெறும் சாதாரண வேலை மட்டுமே கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. நிதி நெருக்கடி அவர்களின் குடும்பங்களைப் பாதித்துள்ளதுடன் சிலரால் அவர்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியவில்லை.

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான துன்புறுத்தல், தொழில்கள், சம்பளங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்க்கும் தொழிலாளர்கள் மீதான பரந்த ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகும். 2021 தொடக்கத்தில் நடந்த பொது வேலைநிறுத்த நடவடிக்கையை தோட்டக் கம்பனிகள் கடுமையாக எதிர்த்ததுடன், 1,000 ரூபாய் நாளாந்த சம்பளத்திற்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிராகரித்தன. சம்பள அதிகரிப்பு உலக சந்தையில் இலங்கையின் போட்டித்தன்மையை கீழிறக்கும் என்று வாதிட்டன.

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை, சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதி திசாநாயக்கவின் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் இப்போது செயல்படுத்தப்படும் 'பொருளாதார மறுசீரமைப்பு' திட்டத்துடன் நேரடியாக தொடர்புடையதாகும்.

இந்த நடவடிக்கைகளில் சில தோட்டங்களை துண்டாடுதல், விளைச்சலை பன்முகப்படுத்துதல் மற்றும் 'வருமானப் பங்கீடு முறைமையை' அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

வருமான பங்கீடு முறைமையின் கீழ், தொழிலாளர்களுக்கு பராமரிக்கவும் அறுவடை செய்யவும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேயிலை செடிகள் ஒதுக்கப்படுவதுடன் கம்பனியின் செலவுகள் மற்றும் இலாபங்கள் கழிக்கப்பட்ட பின்னரே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த மாதிரியானது நிலையான ஊதியம், ஓய்வூதியங்கள் மற்றும் ஏனைய அடிப்படை உரிமைகளை இரத்து செய்து, தோட்ட தொழிலாளர்களை நவீன கால குத்தகை விவசாயிகளாக மாற்றுகிறது.

அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் இந்தத் தாக்குதல்களை ஆதரித்துள்ளனர்.

ஆரம்பத்திலிருந்தே சோசலிச சமத்துவக் கட்சியும் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் ஓல்டன் தோட்டத்  தொழிலாளர்களைப் பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகின்றன, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாக்க தேசிய மற்றும் சர்வதேச பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளதோடு தொழிற்சங்கத் தலைவர்கள், பொலிசார்  மற்றும் அரசின் ஆதரவுடன் கம்பனி பரப்பிய பொய் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தின.

அனைத்து குற்றச்சாட்டுகளையும் விலக்கிக்கொள்ளவும், வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் முழு சம்பளத்துடன் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்தவும் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் கோருகின்றன.

இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்ட ஒரு மனுவில் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டதுடன் சோசலிச சமத்துவக் கட்சியும் தோட்டத் தொழிலாளர்  நடவடிக்கை குழுவும் உலக சோசலிச வலைத் தளம் ஊடாக ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தகவல்களைப் பரப்பின. உலகெங்கிலும் இருந்து தொழிலாளர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களும் இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற மாத ஊதியம், தரமான வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் அனைவருக்கும் வேலைவாய்ப்புக்கான போராட்டத்துடன் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள், பிரதான கம்பனிகள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளையும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குதல் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபித்தல் உட்பட சோசலிச வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Loading