இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
நவம்பர் 7 அன்று, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவின் 2026 வரவு செலவுத் திட்டம், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதைக் குறிக்கின்ற அதேநேரம், பெருவணிகங்களுக்கு அதிக சலுகைகளை வழங்குகிறது.
14 நவம்பர் 2024 அன்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) வெற்றி பெற்று தனது அரசாங்கம் ஒரு வருடத்தை நிறைவு செய்யும் நிலையில், திசாநாயக தனது இரண்டாவது பாதீட்டை முன்வைத்தார். பாராளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் திசாநாயக்க வெற்றி பெற்றார்.
அரசாங்கத்தின் இரண்டு பாதீடுகளும் பெருநிறுவன உயரடுக்கின் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் ஒரு கருவி என்பதை நிரூபித்துள்ளன.
நிதியமைச்சராகவும் பணியாற்றும் திசாநாயக, “நாம் பொருளாதாரத்தில் பெற்று வரும் நன்மைகளை நாட்டின் அடிமட்டத்தில் வாழும் மக்களுக்கு எடுத்துச் செல்ல தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்' என்று பொய்யாகக் கூறி தனது உரையைத் தொடங்கினார்.
உண்மையில், வரிவிதிப்பு மற்றும் முதலீட்டுக் கொள்கை தொடக்கம் அரசதுறை மறுசீரமைப்பு வரை ஒவ்வொரு பிரதான நடவடிக்கையும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டளைகளை கண்டிப்பாகப் பின்பற்றுகிறது.
அக்டோபர் 9 அன்று, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட செயற்குழுத் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ கொழும்பில், 'சர்வதேச நாணய நிதியமானது அரசாங்க செலவினங்களின் அளவு, தரம் இரண்டையும் கண்காணிக்கும்' என்று கூறினார். சர்வதேச நாணய நிதியம், 347 மில்லியன் டொலரை வழங்க அதிகாரிகள் மட்ட உடன்பாட்டை எட்டியிருந்தாலும், அடுத்த ஆண்டு பாதீடானது 'திட்ட பரிமாணங்களுக்கு ஏற்ப' இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மட்டுமே அது வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். 2026 பாதீட்டை பாராளுமன்றம் நிறைவேற்றும் வரை இந்த கடன் பகுதி 'நிச்சயமற்றதாகவே' இருக்கும்.
தனது வரவு-செலவுத் திட்ட வாசிப்பின் போது, திசாநாயக, அரச ஊழியர்கள் 'மேலும் கேட்கக்கூடாது' என்றும், வேலையில்லாதவர்கள் வீதிப் போராட்டங்களை நடத்தக்கூடாது என்றும் அச்சுறுத்தும் வகையில் கூறினார். நலன்புரி சலுகைகளைப் பெறும் ஏழைகளுக்கான உதவி 'நேர்மையான' முறையில் கோருவோருக்க மட்டுமே கிடைக்கும் என்று எச்சரித்தார்.
2026 பாதீடு சுமார் 3.7 ட்ரில்லியன் ரூபாய் (12 பில்லியன் டொலர்) பற்றாக்குறையை முன்வைக்கிறது. புதிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்கள் மூலம் பூர்த்தி செய்யப்படவுள்ள இந்த பற்றாக்குறை, தீமையான கடன் சுழற்சியை நிலைநிறுத்துகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான மொத்த அரசாங்கச் செலவு கிட்டத்தட்ட 9 ட்ரில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ள அதேநேரம், வருவாய் 5.3 ட்ரில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் மறைமுக வரிவிதிப்பு மற்றும் சமூக செலவின வெட்டுக்கள் மூலம் ஐந்து ட்ரில்லியன் ரூபாய் வருவாயை திரட்ட எதிர்பார்க்கிறது. குறித்த ஆண்டுக்கான வரி வருவாய் 2024 ஆம் ஆண்டை விட 1.2 ட்ரில்லியன் ரூபாய்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், இந்த அதிகரிப்பில் தோராயமாக 75 சதவீதம் பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் நுகர்வோரைப் பாதிக்கும் பிற மறைமுக வரிகளிலிருந்து வசூலிக்கப்படும் என்றும் திசாநாயக்க பெருமையாகக் கூறினார்.
தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளிடமிருந்து பெறப்பட்ட அனைத்து வருவாய்களும் எங்கே போய்விட்டன என்பது தெளிவாகிறது. அரச செலவினத்தில் கடன் சேவைக்காக 4.5 ட்ரில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதை வரவு-செலவுத் திட்டம் காட்டுகிறது. 2024 ஆம் ஆண்டில், 1,674 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதுடன் 2025 இல் இந்தத் தொகை 2,435 மில்லியன் டொலர் ஆகும். இன்னும் 487 மில்லியன் டொலர் மட்டுமே செலுத்தப்பட உள்ளதாக திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டின் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசாங்கம் அதன் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாக அறிவித்தது. 2023 ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியம் 3 பில்லியன் டொலர் பிணை எடுப்புக் கடனை அங்கீகரித்தபோது, கொழும்பு அரசாங்கம் 2028 இல் திருப்பிச் செலுத்த தொடங்கும் வரை கடன் சேவையை ஒத்திவைப்பதாக உறுதியளித்தது.
பொது இறக்குமதி வரி உச்சவரம்பு 20 முதல் 30 சதவீதமாக அதிகரிக்கப்படும், இது சில மின்னணு பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் துணிகளின் விலைகளை உயர்த்தும்.
இதனுடன் சேர்த்து, எரிபொருள், சேவைகள் மற்றும் உணவு உட்பட கிட்டத்தட்ட அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளையும் உள்ளடக்கிய வட் வரி வரம்பு, இப்போது மூன்று மில்லியன் ரூபாய்க்கும் குறைவான மாதாந்திர வருவாய் கொண்ட வணிகங்களுக்கும் பொருந்தும். இதனால் ஆயிரக்கணக்கான சிறு வணிகர்கள் வரி வலைக்குள் இழுத்துப் போடப்படுவதோடு நுகர்வோர் விலைகள் மேலும் உயரும்.
பாதீட்டின் ஒரு முக்கிய அங்கம், பொதுச் செலவினங்களைக் கடுமையாகக் குறைத்துள்ளமையாகும். 33 அரசு நிறுவனங்கள் முழுவதுமாக மூடப்படும் அதேநேரம், மேலும் 57 நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படும், மறுசீரமைக்கப்படும் அல்லது கலைக்கப்படும் என்றும் திசாநாயக்க மீண்டும் வலியுறுத்தினார். சுமார் 400 அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதே அரசாங்கத்தின் ஒட்டுமொத்தத் திட்டமாகும்.
அரச வணிக வர்த்தக முகாமைத்துவ சட்டம் மற்றும் அரச-தனியார் பங்காண்மை மசோதா போன்ற புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன -இவை இரண்டும் அரச சொத்துக்களின் தனியார்மயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கலை துரிதப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, 'வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதை' உறுதி செய்வதற்காக 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு புதிய முதலீட்டு பாதுகாப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
பொதுச்சொத்து முகாமைத்துவ மசோதா, அரச நிலங்களுக்கான மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தரவுத்தளத்தை உருவாக்கும். இது பெருவணிகங்களால் அவற்றை வணிக ரீதியாக சுரண்ட உதவும்.
தொழில்நுட்ப பூங்காக்கள், முதலீட்டாளர் விசா திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக விதிமுறைகளைத் தவிர்ப்பதற்கான 'ஒற்றை சேவை முகப்பு' அமைப்புகளை நிறுவுகின்ற நடவடிக்கைகள் தடையற்ற மூலதன சுரண்டலை நோக்கிய தெளிவான உந்துதலை வெளிப்படுத்துகின்றன.
முந்தைய நிர்வாகங்களைப் போலவே, திசாநாயகவின் அரசாங்கமும் எந்தவொரு செல்வம் அல்லது மூலதன ஆதாய வரிகளையும் விதிப்பதைத் தவிர்த்து, பெருநிறுவன வரி விகிதங்களைத் தொடாமல் விட்டுவிட்டு, வணிக உயரடுக்கினரைப் பாதுகாத்து, வரிச் சுமையை உழைக்கும் மக்கள் மீது நேரடியாக சுமத்தியுள்ளது.
ஆச்சரியப்படத்தக்க வகையில், பெருவணிக அமைப்பான இலங்கை வர்த்தக சபையின் தலைவர் கிரிஷ் பாலேந்திரா, பாதீட்டின் 'நிதி ஒழுக்கத்திற்காக' அதைப் பாராட்டியமை ஆச்சிரியத்திற்குரியதல்ல.
ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகரும் இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான துமிந்த ஹுலங்கமுவ, அரசாங்கம் 'தனியார் துறையை வளர்ச்சியின் இயந்திரமாக' மீட்டெடுத்துள்ளது என்று கூறியதுடன், 'வரி சலுகைகள் முதல் நிறுவன மறுசீரமைப்பு வரை பாதீட்டில் உள்ள ஒவ்வொரு முக்கிய குறிப்பும் தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிப்பதை நோக்கியே உள்ளது' என்று தெரிவித்தார்.
நலன்புரி மற்றும் சேவைகளில் அரசாங்கம் ஆழமான வெட்டுக்களை அமுல்படுத்துகிறது. ஏழைகளுக்கான ஒரு அற்ப உதவித் திட்டமான அஸ்வெசும நிவாரணத் திட்டம், 'உண்மையான குறைந்த வருமானம் ஈட்டுபவர்களை' மட்டுமே குறிவைத்து மறுசீரமைக்கப்படும் என்று திசாநாயக்க அறிவித்தார். இது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி அதிகாரிகளின் வார்த்தைகளை எதிரொலிப்பதாகும்.
நலன்புரி சலுகைகளைப் பெறும் ஏழைகள் மீதான அரசாங்கத்தின் அலட்சிய மனப்பான்மையை வெளிப்படுத்தும் வகையில், ஜே.வி.பி. தலைவரும் தொழில்துறை அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி, வரவு-செலவுத் திட்டத்துக்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு பொது நிகழ்வில் பேசிய போது: 'அஸ்வெசுமவைப் பெறுவதில் சமூகம் வெட்கப்பட வேண்டும். இது சட்டப்பூர்வமாக பிச்சை எடுப்பது போன்றது. எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் நாங்கள் பணம் பெறுகிறோம்,' என்று அறிவித்தார்.
உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, இலங்கையில் 22 சதவீத மக்கள் இப்போது வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதுடன், மேலும் 10 சதவீதம் பேர் அதற்கு சற்றே மேலே இருக்கின்ற நிலையிலேயே அவர் இவ்வாறு அறிவிக்கின்றார். மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.
2022 முதல், உண்மையான ஊதியங்கள் அரசாங்கத் துறையில் 24 சதவீதமும், தனியார் துறையில் 14 சதவீதமும் சரிந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சிக்கன நடவடிக்கைகள் காரணமாக, இலங்கையில் 3.9 சதவீத மக்கள் வறுமையில் விழுந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களின் உதவித்தொகை மாதத்திற்கு 10,000 ரூபாயாக மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் கோரிக்கையோ 15,000 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பதாகும்.
பொதுக் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் விளிம்பில் இருந்தாலும், ஒதுக்கீடுகள் முறையே 301 பில்லியன் மற்றும் 516 பில்லியன் ரூபாயாக உள்ளன - இது 29 மற்றும் 40 பில்லியன் ரூபாய்கள் என்ற ஓரளவான அதிகரிப்பை மட்டுமே குறிக்கிறது.
தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியம் 400 ரூபாய் உயர்த்தப்படும் என்றும், இந்த அற்ப அதிகரிப்பில் பாதியை நிறுவனங்கள் சார்பாக அரசு ஏற்கும் என்றும் திசாநாயக அறிவித்தார். இந்த அற்ப 'அதிகரிப்பு' கூட யதார்த்தமாகும் என்பது சந்தேகமே.
75,000 புதிய அரச ஊழியர்களை, முக்கியமாக சட்ட அமுலாக்கம், வருவாய் வசூல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வேலைக்கு அமர்த்துவதற்கான திட்டங்களையும் அவர் அறிவித்தார். இந்த ஆட்சேர்ப்பு, தகுதி அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று கூறி, போராடும் வேலையில்லாத இளைஞர்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு 'வீட்டிற்குச் சென்று ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்குப் படிக்க வேண்டும்' என்று ஜனாதிபதி எச்சரித்தார்.
நான்கு மணி நேரத்திற்கும் மேலான அவரது பாதீட்டு உரை, பொதுமக்களின் கோபத்தை வெளிப்படையாக அவமதிப்பதை வெளிப்படுத்தியது. அரச துறைக்கு இரண்டாம் கட்ட மாதாந்திர ஊதிய உயர்வை ஜனாதிபதி அறிவித்தார். 2,750 ரூபாய் அளவான இந்த அதிகரிப்பு முந்தைய பாதீட்டில் அறிவிக்கப்பட்ட கடைசி அதிகரிப்பின் ஒரு பகுதியாகும். இரண்டு நாட்கள் செலவுகளுக்குக் கூட இது போதுமானது அல்ல.
ஆனால் ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர் அரச ஊழியர்களை பின்வருமாறு அச்சுறுத்தினார்: 'அதிக கொடுப்பனவுகளைக் கேட்காதீர்கள் - அரசாங்கத்திடம் நிதி இல்லை. தெருக்களில் நிற்பதற்குப் பதிலாக வீட்டிற்குச் செல்லுங்கள்; தெருக்களில் நிற்பது உங்களுக்கு எதையும் கொண்டு வராது, ஏனெனில் இதுதான் அரசாங்கத்தின் கொள்கை.'
அரசு ஊழியர்கள், வேலையில்லாதவர்கள் மற்றும் நலன்புரி பெறுநர்களுக்கு திசாநாயகவின் அச்சுறுத்தல்கள், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் சர்வதேச நாணய நிதிய திட்டத்தை ஈவிரக்கமின்றி செயல்படுத்தும் அதேவேளை, எந்தவொரு எதிர்ப்பையும் கொடூரமாக அடக்கும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஆகஸ்ட் மாதம், அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை அடக்க இராணுவம் அனுப்பப்பட்டதுடன், செப்டம்பரில், ஜனாதிபதி அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தைப் பயன்படுத்தி, மின்சார சபையை தனியார்மயமாக்குவதை எதிர்க்கும் தொழிலாளர்களை அச்சுறுத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள், பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் வரவு செலவுத் திட்டம் குறித்து அடையாள விமர்சனங்களை மட்டுமே முன்வைத்ததற்கான காரணம், அவை அனைத்தும் சர்வதேச நாணய நிதிய திட்டத்தை ஆதரிக்கின்றன.
ஜே.வி.பி. மற்றும் சர்வதேச நாணய நிதிய திட்டத்தை ஆதரிக்கும் ஏனைய தொழிற்சங்கங்க அதிகாரத்துவங்கள், தொழிலாளர்களின் நடவடிக்கைகளை வேண்டுமென்றே அடக்கியுள்ளன.
இருப்பினும், மேற்பரப்பிற்கு அடியில், பொதுமக்களின் கோபம் அதிகரித்து வருகிறது. நவம்பர் 10 அன்று, பல பிராந்தியங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளுக்கு எந்த நிவாரணமும் வழங்காததற்காக பாதீட்டைக் கண்டித்து, தங்கள் போராட்டங்களைத் தொடர சபதம் செய்தனர். ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் பாதீடு நாளில் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆழமடைந்து வரும் உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில், சர்வதேச கடன் வழங்குநர்களைப் பாதுகாக்க கடந்த தசாப்தத்தில் பல நாடுகளில் சர்வதேச நாணய நிதயம் களமிறங்கியுள்ளது. சமீபத்திய மாதங்களில், கென்யா, சிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பொது வேலைநிறுத்தங்களும் இளைஞர் போராட்டங்களும் வெடித்துள்ளன.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதயி சிக்கன நடவடிக்கைத் திட்டத்தை தோற்கடிக்க, சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் பிரிந்து தங்கள் சுயாதீனமான அரசியல் மற்றும் தொழில்துறை வலிமையை அணிதிரட்டுமாறு வலியுறுத்துகிறது. அதைச் செய்ய, தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் அல்லது முதலாளித்துவக் கட்சிகள் தங்கள் போராட்டத்தை ஒழுங்கமைக்க அனுமதிக்காமல், வேலைத் தளங்களிலும் கிராமப்புறங்களிலும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும்.
சிக்கன நடவடிக்கைகள், ஊதிய வெட்டுக்கள், வேலை இழப்புகள் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடுகின்ற, முன்னேறிய நாடுகளில் உள்ளவர்கள் உட்பட சர்வதேச அளவில் தொழிலாளர்களுடன் இலங்கைத் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும்.
பெரும்பான்மையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, வெளிநாட்டுக் கடனை நிராகரிப்பதற்கும் பிரதான தொழில்துறைகள் மற்றும் வங்கிகளின் கூட்டு உரிமையைப் பெறவும், ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதே இதன் நோக்கமாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க
- இலங்கையின் திசாநாயக்க அரசாங்கம் சந்தை சார்பு கல்வி சீர்திருத்தங்களை அறிவிக்கிறது
- இலங்கை மீது அமெரிக்கா 20 சதவீத வரியை விதிக்கிறது
- இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைப்படி அடுத்த வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரிக்கிறது
- இலங்கை ஜனாதிபதி அதிகரித்துவரும் அமைதியின்மைக்கு மத்தியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அற்ப சம்பள அதிகரிப்பு தருவதாக வாக்குறுதியளிக்கிறார்
