மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க உள்நாட்டுப் போர் சகாப்தத்தின் தலைசிறந்த வரலாற்றாசிரியர் ஒருவருக்கு கீழே உள்ள கடிதத்தை நான் அனுப்பியுள்ளேன்.
***
ட்ரம்பின் வெற்றி அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் அது ஆச்சரியமல்ல. தொழிலாள வர்க்கத்தை நோக்கிய எந்தவொரு வேலைத்திட்ட நோக்குநிலையையும் ஜனநாயகக் கட்சி நீண்டகாலத்திற்கு மற்றும் மிகவும் திட்டமிட்டு நிராகரித்ததன் பேரழிவுகரமான விளைவாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், இதை ஹிலாரி கிளிண்டன் இழிவார்ந்த முறையில் “வருந்தத்தக்கவர்களின் கூடை” என்றும் பைடென் சமீபத்தில் “குப்பை” என்றும் கூறி நிராகரித்திருந்தனர்.
அடையாள அரசியலின் மாயையின் மீது — அதாவது, செல்வத்தை மக்கள்தொகையில் மேலுள்ள 10 சதவீதத்தினருக்கு முன்னுரிமை கொடுத்து பகிர்ந்தளிக்க முயலும் நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளின் அரசியல் மீது ஒருமுனைப்பட்டிருந்த ஜனநாயகக் கட்சியானது, வர்க்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அரசியலுக்கு மாற்றீடு கண்டுபிடித்திருப்பதாக தன்னை நம்பியது. இந்த புத்திஜீவித பின்னடைவானது, 1968 க்குப் பிந்தைய காலத்தில் முன்னாள் தீவிரமயமாக்கப்பட்ட மாணவர்களின் ஒரு தலைமுறையால் தழுவப்பட்ட போலி மார்க்சிச மற்றும் பின் நவீனத்துவ தத்துவங்களால் (பிராங்பேர்ட் பள்ளி மற்றும் பின்-நவீனத்துவம்) கல்விக்கூடங்களில் ஊக்குவிக்கப்பட்டு நியாயப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவில், புதிய மார்க்சிச-எதிர்ப்புப் போக்கானது கம்யூனிச-எதிர்ப்பின் நீண்டகால பாரம்பரியத்துடன் கலந்தது. தொழிலாள வர்க்க போர்க்குணத்துடன் தொடர்புடைய இடதுசாரி அரசியல் அங்கு காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. அடையாளத்துடன் தொடர்புடைய துயரங்களானது, தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் சமூகத்தின் ஒரு சிறிய பிரிவில் பாரியளவில் செல்வம் குவிந்திருப்பது குறித்த எந்தவொரு தீவிர கவலையையும் இடம்பெயர்த்துவிட்டது.
போலி-இடதுகளானது சமத்துவத்திற்கான (equality) அழைப்புகளை வளங்களை சரிசெய்தலுக்கான (equity) கோரிக்கைகளைக் கொண்டு பிரதியீடு செய்தன. இது இன, நிற வேறுபாடுகளை இடைவிடாது முழங்குவதுடன் நெருக்கமாக பின்னிப்பிணைந்துள்ளதோடு, அத்துடன் அமெரிக்காவின் உண்மையான ஜனநாயக மரபுகளை ஒரு இகழ்ச்சியாகக் கருதியது. இது 1619 திட்டத்தில் தீங்கு விளைவிக்கும் வெளிப்பாட்டைக் கண்டது. இவை அனைத்தும் ஒரு பொதுவான கலாச்சாரச் சீரழிவு, அனைத்து வகையான பிற்போக்குத்தனத்தையும் ஊக்குவித்தல் ஆகியவற்றுடன் இணைந்துள்ளன.
[குறிப்பு: சமத்துவம் (equality) - தொழிலாள வர்க்கமானது சமத்துவத்தை அடைய முதலாளித்துவ வர்க்க வேறுபாடுகளை அகற்றி சோசலிச சமத்துவம் மூலம் செல்வம் மற்றும் அதிகாரத்தில் உள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் பிடியை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டது. சரிசெய்தல் (equity) அதாவது வளங்களை சரிசெய்தல் - பல்வேறு மக்கள் பிரிவுகளின், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக செல்வத்தை மறுபகிர்வு செய்தலைக் குறிக்கிறது]
பைடென் நிர்வாகத்தின் நிகழ்ச்சித் திட்டத்தில் முக்கிய அம்சமாக ரஷ்யா மற்றும் சீனாவுடன் இராணுவ மோதலை விரிவாக்குவது இருந்தது. புதிய நூற்றாண்டின் வரலாற்றில் மிகப்பெரும் குற்றங்களில் ஒன்றான காஸா இனப்படுகொலையை ஆதரித்தது, இது அதன் உலகளாவிய இராணுவவாத மூலோபாயத்திற்கு முற்றிலும் அடிப்படையாக இருந்தது.
தொழிலாளர் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டதும், உலக மனிதகுலத்தை ஐக்கியப்படுத்தும் சர்வதேச மூலோபாயத்தால் உயிர்ப்பூட்டப்பட்ட உண்மையான சோசலிச அரசியலின் புதிய பிறப்பின் மூலம் மட்டுமே ட்ரம்ப் வெற்றியின் பேரழிவான பின்விளைவுகளை தடுக்க முடியும்.