இலங்கை பல்கலைக்கழகத்தில் தடைகள்: மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான பாரதூரமான தாக்குதல்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித், ஜனவரி 15 அன்று, “மாணவர்களை ஒன்றுகூட்டுதல், கூட்டங்களை நடத்துதல், மாணவர்கள் முன் உரையாற்றுதல் மற்றும் பல்கலைக் கழகத்தினுள் அல்லது வெளியில் ஏதேனும் ஒரு பிரச்சினைக்காக சட்டவிரோதமாக ஒன்றுகூடுவதையும்” ஒரு வாரத்திற்கு “முழுமையாக தடைசெய்து”, பேராதனை மாணவர் சங்கம் மற்றும் பீட மாணவர் சங்கங்கள் மீது அப்பட்டமான ஜனநாயக விரோத ஆணையை வெளியிட்டார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் திட்டமிடப்பட்ட விரிவுரைக்காக ஜனவரி 2 அன்று மாணவர்கள் மத்தியில் IYSSE பிரச்சாரம் செய்தபோது.

'இந்த உத்தரவுக்கு விரோதமாக செயல்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பேன்' என்று எச்சரித்த துணைவேந்தர், மாணவர்களை அகற்றுவதற்கு, இடைநீக்கம் செய்வதற்கு அல்லது அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குமான அதிகாரிகளின் திட்டத்தை சமிக்ஞை செய்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 17 அன்று, 'பல்கலைக்கழகத்திலும் அனைத்து பீடங்களிலும் நிலைமை அமைதியாக உள்ளது மற்றும் எந்த நடவடிக்கையும் இல்லை' என்பதால், மாலை 6 மணி முதல் மாணவர் சங்கங்களின் செயல்பாடுகளைத் தடை செய்யும் உத்தரவை விலக்கிக்கொள்வதாக மதுஜித் மற்றொரு கடிதத்தை அனுப்பினார்.

பேராதனை பல்கலைக்கழக அதிகாரிகளின் இந்த ஜனநாயக விரோத திருகுதாளங்கள், சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பானது அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கத்தின் (அ.வி.மா.ச.) அனுசரணையுடன் “சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவது எப்படி?' என்ற தலைப்பில் நடத்தவிருந்த விரிவுரையை இரத்து செய்ததில் இருந்தே தொடங்கியது.

ஜனவரி 3 அன்று, பதில் துணைவேந்தர் ரஞ்சித் பல்லேகம, விரிவுரையின் தலைப்பு “அரசாங்கத்தின் கொள்கையை சவால் செய்வதாக” அறிவித்து, விரிவுரையை இரத்து செய்யுமாறு உத்தரவிட்டு, பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவருக்கு கட்டளை ஒன்றை அனுப்பினார்.

தனியார்மயமாக்கல் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குகான ஒதுக்கீடுகளில் கடுமையான வெட்டுக்களை அமுல்படுத்துவது உட்பட, சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை முழுமையாக செயல்படுத்த உறுதிபூண்டுள்ள, மக்கள் விடுதலை முன்னணியின் / தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி./தே.ம.ச.) புதிய அரசாங்கமே இந்தத் தடைக்குப் பின்னால் இருந்தது. பிரதமரின் அலுவலகமே கூட்டம் பற்றி விசாரித்ததாக ஐ.வை.எஸ்.எஸ்.இ.க்கு தெரிவிக்கப்பட்டது.

மாணவர் சங்க நடவடிக்கைகளுக்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டாலும், ஐ.வை.எஸ்.எஸ்.இ. விரிவுரைக்கான தடையை பல்கலைக்கழக அதிகாரிகள் நீக்கவில்லை.

அசாதாரணமான வகையில், மாணவர் கூட்டங்களுக்கு மதுஜித் தடை விதித்ததற்கு எந்த காரணமும் தெரிவிக்கவில்லை. பரவலான மாணவர் அமைதியின்மை அல்லது அத்தகைய அமைதியின்மை வெடிக்கப் போகிறது என்பதற்கான தெளிவான அறிகுறிகளுக்கு மத்தியில் முன்னர் தடைகள் விதிக்கப்பட்டன. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அண்மைய மாதங்களில் அவ்வாறான அமைதியின்மை எதுவும் இடம்பெறவில்லை.

எந்த விளக்கமும் இல்லாத நிலையில், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க எதிர்ப்பைத் தூண்டிய ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தின் மீதான தடையின் விளைவுகள், பல்கலைக்கழக அதிகாரிகள மத்தியில் விழிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற முடிவுக்கு வரலாம்.

ஜனவரி 2 அன்று பேராதனை பல்கலைக்கழகத்தில் IYSSE பிரச்சாரகர் மாணவர்களுடன் கலந்துரையாடிய போது

தடைக்கு எதிராக ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஒரு தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதோடு அருகிலுள்ள கண்டியில் அதே தலைப்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியது.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. மீதான தடை, விரைவில் தேசிய பிரச்சினையாக மாறியது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தடையை எதிர்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சண்டே டைம்ஸ் மற்றும் ஐலண்ட் போன்ற பரவலாக வாசிக்கப்படும் தேசிய செய்தித்தாள்கள் ஐ.வை.எஸ்.எஸ்.இ. பற்றி நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், தடை குறித்த கட்டுரைகள் அல்லது அறிக்கைகளை வெளியிட்டன. இவற்றில் அரசின் தலையீடு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

விடயத்தை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும் முயற்சியில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலராகக் காட்டிக் கொள்ளும் அரசாங்கத்தின் பாசாங்குத்தனத்தை எடுத்துக்காட்டி, தேசிய பாராளுமன்றத்தில் பிரச்சினையை எழுப்பினார். ஜனநாயக உரிமைகள் குறித்து பிரேமதாசவுக்கு ஒரு பயங்கரமான பதிவு உள்ளது.

ஜே.வி.பி./தே.ம.ச., சேதத்தைக் கட்டுப்படுத்தும் நிலைக்குச் சென்றது. அதன் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான லக்மாலி ஹேமச்சந்திரவின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தை தடை செய்ததற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில், தடையை நியாயப்படுத்தும் வகையில் ஜனவரி 10 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையுடன், துணைவேந்தர் இந்த விவகாரத்தை முடித்து வைக்க முயன்றார். ஐ.வை.எஸ்.எஸ்.இ., ஜனவரி 14 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், அவரது வாதங்களில் இருந்த அபத்தங்களை கிழித்தெறிந்தது.

ஐ.வை.எஸ்.எஸ்.இ.விரிவுரைக்கு தடை விதிக்கப்படவில்லை, கூட்டத்தின் தலைப்பை மாற்றுமாறு மட்டுமே கேட்டுக் கொண்டதாக! மதுஜித் அபத்தமான முறையில் அறிவித்தார். அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கமானது இப்போது கண்டிப்பாக அமுல்படுத்தப்படுகின்ற நடைமுறையைப் பின்பற்றவில்லை என்று கூறிய அவர், நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட கொள்கைகளை தோண்டியெடுத்தார். ஐ.வை.எஸ்.எஸ்.இ. பல்கலைக்கழகத்தில் முன்னர் பல கூட்டங்களை நடத்தியிருந்தாலும் கூட, ஒரு 'சர்வதேச அமைப்பான' ஐ.வை.எஸ்.எஸ்.இ.க்கு விரிவுரை நடத்த உரிமை இல்லை என்றும் அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடவில்லை என்றால், அது ஏனைய பல்கலைக்கழகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று ஐ.வை.எஸ்.எஸ்.இ. அறிக்கை எச்சரித்தது.

அடுத்த நாளே, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் வெளிப்படையான எதிர்ப்பு வெளிபடுவதற்கான ஒரு ஒரு மையப் புள்ளியாக ஐ.வை.எஸ்.எஸ்.இ. மாறுவதைத் தடுக்கும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியில், துணைவேந்தர் அனைத்து மாணவர் நடவடிக்கைகளுக்கும் தனது விரிவான தடையை விதித்தார். பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சில பீடங்களின் மாணவர் சங்கங்களினதும் தலைவர்களையும் அவர் சந்தித்தார். இந்த மாணவர் சங்க தலைவர்களோ, எதிர்வரும் நாட்களில் கூட்டங்களோ, போராட்டங்களோ நடத்தத் திட்டமிடவில்லை என உறுதியளித்தனர்.

சமீப மாதங்களில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர்கள், இப்போது அதிகாரத்தில் உள்ள ஜே.வி.பி.யுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதுடன், ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்த முன்னிலை சோசலிசக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திலிருந்து (அ.ப.மா.ஒ.) தங்களைத் தூர விலக்கிக் கொண்டனர். பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்கமானது ஐ.வை.எஸ்.எஸ்.இ. விரிவுரை மீதான தடையையோ அல்லது பரந்த தடைகளையோ எதிர்க்கவில்லை.

ஜனவரி 2 அன்று பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவிகளுடன் IYSSE பிரச்சாரகர் கலந்துரையாடிய போது

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைப் பொறுத்தவரை, அது மாணவர் நடவடிக்கைகளுக்கு எதிரான தடையை எதிர்த்து மழுப்பலான அறிக்கையை வெளியிட்டதுடன் முந்தைய கூட்டத்தின் மீதான தடையைப் பற்றி குறிப்பிட்டதே அன்றி, ஐ.வை.எஸ்.எஸ்.இ. பெயரை குறிப்பிடவில்லை அல்லது பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை. அது பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தையும் அரசாங்கத்தையும் தலையிட்டு தடையை முடிவுக்கு கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்தது.

ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கிற்கு அ.ப.மா.ஒ. மற்றும் பேராதனை மாணவர் சங்கமும் அடிப்படையிலேயே விரோதமாக இருப்பதால், அவை ஐ.வை.எஸ்.எஸ்.இ.யை பாதுகாக்காமல் இருப்பதில் வியப்பில்லை. அவர்கள் கடந்த காலங்களில் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்களுக்கு எதிராக சரீர தாக்குதல்களையும் ஆத்திரமூட்டல்களையும் நடத்தியுள்ளனர்.

ஜனவரி 15 அன்றே பேராதனை மாணவர் சங்கமும் ஏனைய மாணவர் தலைவர்களும் பல்கலைக்கழகத்தில் அமைதியை காப்பதாக உறுதியளித்து துணைவேந்தரிடம் மன்றாடியிருந்தாலும், இரண்டு நாட்களின் பின்னரே அவர் மாணவர் நடவடிக்கைகள் மீதான தடையை நீக்கினார். மீண்டும், அவர் எந்த ஒரு அக்கறையான விளக்கத்தையும் கொடுக்கவில்லை: அவர் தடையை விதிப்பதற்கு முன்பு இருந்ததைப் போலவே, வளாகம் இப்போதும் அமைதியாக இருக்கின்றது!

பிரதமரின் கீழ் உள்ள கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளதற்கான தெளிவான சாத்தியக்கூறுகள் உள்ளன. புதிய பாரதூரமான தடையானது, பரந்த எதிர்ப்பையும் ஆர்ப்பாட்டங்களையும் தூண்டும் சாத்தியத்தைக் கொண்டிருந்ததால் அது கைவிடப்பட்டது.

அரசாங்கமும் பல்கலைக்கழகமும் இந்த அத்தியாயத்தை புதைக்க விரும்பும் அதே வேளையில், இந்த இரண்டும் பின்பற்றும் ஜனநாயக விரோத வழிமுறைகள் குறித்து மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு பாரதூரமான எச்சரிக்கையாக இது உள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒரு முன்னோடி சம்பவம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில், இது மாணவர்களின் செயல்பாடுகள் மீது பரந்த தடைகளை எதேச்சதிகாரமாகத் திணிப்பதற்கு ஏனைய பல்கலைக்கழகங்களிலும் அதிகாரிகளால் பயன்படுத்தப்படக் கூடும். மாணவர்களின் அரசியல் கூட்டங்களை, குறிப்பாக அரசாங்கத்தை விமர்சிக்கும் கூட்டங்களைத் தடுக்கும் வகையில், கடுமையான கட்டுப்பாடுகள் இப்போது நடைமுறையில் உள்ளன.

மேலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தடைக்காலம் முடிவுக்கு வரப்பட்டமை ஒரு தந்திரோபாயப் பின்வாங்கல் மட்டுமே. ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைகளை விரைவில் செயல்படுத்த தயாராகி வருகிறது. இதில் அரசுக்கு சொந்தமான ஒட்டுமொத்த நிறுவனங்களையும் தனியார்மயமாக்குதல்; அரை மில்லியனுக்கும் அதிகமான அரச ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தல்; அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிகளை அதிகரித்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வெட்டுதலும் அடங்கும்.

அரசாங்கம் தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதால், இலவச பொதுக் கல்வி மேலும் வெட்டுக்களை எதிர்கொள்கிறது. 2024 ஆம் ஆண்டிற்கு கடந்த அரசாங்கம் கல்விக்காக 237 பில்லியன் ரூபாவை ஒதுக்கியது. ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் 2025 ஆம் ஆண்டிற்கு 271 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது இது அற்பமான அதிகரிப்பாகும்.

மாணவர்களின் எதிர்ப்பு ஏற்கனவே தலைதூக்கியுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில், மருத்துவக் கல்வியை தனியார்மயமாக்குவதை எதிர்த்தும், மாணவர்களுக்கு நிதி உதவித் திட்டங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதையும் எதிர்த்து, பல்கலைக்கழக வளாகத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களை நடத்த பேராதனை மாணவர் சங்கம் நிர்பந்திக்கப்பட்டது.

எவ்வாறெனினும், அ.ப.மா.ஒ. மற்றும் பேராதனை மாணவர் சங்கமும் தூக்கிப் பிடிக்கும் முன்னோக்கு, சிறு சலுகைகளை வழங்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகும். இலவசக் கல்வி மீதான தாக்குதல்களுக்கு மாணவர்களின் எதிர்ப்பை கலைத்துவிட மட்டுமே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அ.ப.மா.ஒ. உடன் இணைந்திருக்கும் முன்னிலை சோசலிசக் கட்சி, அனுர திசாநாயக்கவும் அவரது ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமும் தெரிவுசெய்யப்பட்டதை 'மக்களின் எதிர்பார்ப்புகளின் வெளிப்பாடு' என்று பாராட்டியது.

சமூக நிலைமைகள் மீது அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டு வரும் கொடூரமான தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி, சலுகைகளுக்காக அவர்களிடம் கெஞ்சுவது அல்ல, மாறாக அனைத்து முதலாளித்துவக் கட்சிகள், அவற்றின் தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது குழுக்களிடமிருந்தும் சுயாதீனமாக, தொழிலாள வர்க்கத்தின் பெரும் பலத்தை அணிதிரட்டுவதாகும் என்று ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் சோசலிச சமத்துவக் கட்சியும் வலியுறுத்துகின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. கிளைகளைக் கட்டியெழுப்புமாறும், சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்துவதற்காக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புமாறும் மாணவர்களை நாங்கள் அழைக்கிறோம்.

'சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவது எப்படி?' என்ற தலைப்பில் ஐ.வை.எஸ்.எஸ்.இ. நடத்தவிருந்த விரிவுரையின் மீதான தடையை நீக்குவதற்கான எங்கள் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தடையை கண்டித்து எதிர்ப்புக் கடிதங்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதன் பிரதிகளை ஐ.வை.எஸ்.எஸ்.இ.க்கும் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பெறுநர்: பொறுப்பு துணைவேந்தர், பேராதனை பல்கலைக்கழகம் மின்னஞ்சல்: vc@pdn.ac.lk

பிரதி: ஐ.வை.எஸ்.எஸ்.இ. மின்னஞ்சல்: iysseslb@gmail.com

Loading