இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கை மின்சார சபையின் (இ.மி.ச.) மறுசீரமைப்புக்கு எதிரான அதன் ஊழியர்களின் போராட்டம், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தால் முழு தொழிலாள வர்க்கம் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்தப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மையப் புள்ளியாக மாறியுள்ளது.
பல தசாப்தங்களாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இ.மி.ச.யை தனியார்மயமாக்க முயற்சித்த போதிலும், இ.மி.ச. மற்றும் ஏனைய தொழிலாளர்களின் எதிர்ப்பினால் அவை தோல்வியடைந்துள்ளன. தற்போதைய அரசாங்கம் அதை உறுதியாக செயல்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது. இ.மி.ச.யை நான்கு நிறுவனங்களாகப் பிரித்து பின்னர் அவற்றை தனியார்மயமாக்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும்.
இதன் மூலம், கடந்த காலத்தில் போராடிப் பெற்ற தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான கொடூரமான தாக்குதலுக்கு எதிராக, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ.மி.ச. ஊழியர்கள் செப்டம்பர் 4 முதல் 'ஒத்துழையாமை போராட்டத்தில்' ஈடுபட்ட அதே வேளை, அவர்களில் சுமார் பத்தாயிரம் பேர் செப்டம்பர் 17-18 திகதிகளில் சுகயீன விடுமுறை எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் கோபமடைந்த ஜனாதிபதி திசாநாயக்க, செப்டம்பர் 17 அன்றே, அரசாங்கத்தின் 'முற்போக்கான பொருளாதார மாற்றத்துக்கு' தடை போட யாருக்கும் இடம் கொடுக்க முடியாது என்று கூறி, இ.மி.ச. ஊழியர்களை கடுமையாக சாடினார். அவரது வாய்ச்சவடால் ஒருபுறம் இருக்க, தேசிய மற்றும் சர்வதேச மூலதனத்தின் நலன்களுக்கு சேவை செய்யும் ஒரு பிற்போக்கு நடவடிக்கையிலேயே திசாநாயக்க ஈடுபட்டுள்ளார். இதன் கீழ், நூற்றுக்கணக்கான அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மூடப்பட அல்லது தனியார்மயமாக்கப்பட உள்ளன. இதனால் அரை மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களின் தொழில்களும், இலவச சுகாதாரம் மற்றும் கல்வியில் மீதமுள்ளதும் அழிக்கப்படவுள்ளன.
இ.மி.ச. ஊழியர்களின் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, செப்டம்பர் 21 அன்று, ஜனாதிபதி திசாநாயக்க தொழிலாளர்களை சிறையில் அடைக்கும் அச்சுறுத்தலுடன் 'அத்தியாவசிய சேவைகள்' உத்தரவுகளை பிறப்பித்ததோடு இ.மி.ச. ஊழியர்களின் விடுமுறையையும் ரத்து செய்தார். தொழிலாளர்கள் முன்வைத்த 12 கோரிக்கைகள், அரசாங்கத்தாலும் இ.மி.ச. நிர்வாகிகளாலும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளன.
இ.மி.ச. தொழிலாளர்களை தற்போதைய நிலைமைக்குள் இழுத்துப் போட்டது தொழிற்சங்கத் தலைமைகளே ஆகும். இப்போது ஒத்துழையாமை பிரச்சாரத்துக்கு அழைப்புவிடுத்துள்ள தொழிற்சங்கங்களின் தலைமைகளான பொறியியலாளர்கள் சங்கம், தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கம், சுதந்திர ஊழியர் சங்கம், சுயாதீன பொறியாளர்கள் சங்கம், இ.மி.ச. தொழில்நுட்ப அறிஞர்களின் சங்கம், தேசிய ஊழியர் சங்கம் ஆகியவை, கடந்த ஆண்டு முதல் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கும் தற்போதைய திசாநாயக்க ஆட்சிக்கும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற பொய்யை பரப்பி வருகின்றன. கடந்த ஆண்டு, இந்தப் பொய்யைப் பரப்புவதில் முன்னணியில் இருந்த இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால், கடுவலை நகராட்சி மன்றத்தின் தலைவராக ஆகியுள்ளதோடு மற்றும் இ.மி.ச. ஊழியர்களின் கொடூர எதிரியாகவும் மாறியுள்ளார்.
இப்போது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிரச்சாரம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் மேற்கூறிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள், அக்டோபர் 1 அன்று ஒன்று கூடி, இ.மி.ச. அதிகாரிகள் புதிய நிறுவனங்களில் உள்வாங்கப்படுவதற்காக தொழிலாளர்களுக்கு வழங்கிய படிவத்தை எவ்வாறு நிரப்புவது என்பது குறித்து ஊழியர்களுக்கு அறிவுறுத்தும் கடிதமொன்றை வெளியிட்டனர். அதை அந்தந்த தொழிற்சங்கங்கள் ஊடாக ஒப்படைக்கவும் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் இப்போது அரசாங்கத்திற்கும் இ.மி.ச.வுக்குமான இடைத்தரகர்களாகச் செயல்படுகிறார்கள்.
இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தையும் அதற்கேற்ப செயல்படுத்தப்பட்ட மறுசீரமைப்பு திட்டத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டே செயல்படுகிறார்கள். இ.மி.ச.யின் மறுசீரமைப்பை ஆதரிப்பதாக மீண்டும் மீண்டும் கூறும் இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பிரபாத் பிரியந்த, 'நாங்கள் இன்னும் ஒரு ஏழை நாடு. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். பெரிய மின் திட்டங்களுக்கு வெளிநாட்டு முதலீடு தேவைப்படுகிறது,' என்று அறிவிக்கின்றார்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை, தொழிலாளர்களின் பிரதான பகுதியினராக இருக்கும் இ.மி.ச. தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்குவதன் மூலம், மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்துவதானது ஏனைய பிரதான நிறுவனங்களிலும் இதேபோல் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கி மறுசீரமைப்பை செயல்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானதாகும்.
இப்போது நாம் என்ன செய்வது?
தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை, இ.மி.ச. மீதான அரசாங்கத்தின் திட்டத்தைத் தோற்கடிப்பதானது ஏனைய இடங்களில் மறுசீரமைப்புத் திட்டத்தையும், வாழ்வாதாரம் மற்றும் சமூக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதலையும் தோற்கடிப்பதற்கு, மிகவும் இன்றியமையாததாகும். இதனால்தான், சர்வதேச நாணய நிதியத்தின் / அரசாங்கத்தின் திட்டத்தைத் தோற்கடிக்க, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான மற்றும் ஒன்றுபட்ட தாக்குதலை அவசரமாக கட்டியெழுப்ப வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
ஜே.வி.பி.யின் கொடூரமான தொழிலாளர் விரோதப் பதிவைக் கருத்தில் கொண்டே இலங்கையில் ஆளும் வர்க்கத்தின் ஒரு முன்னணிப் பிரிவு, விக்ரமசிங்க அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்து ஜே.வி.பி. தலைமையிலான தே.ம.ச. அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர முடிவு செய்தது. முந்தைய அரசாங்கங்களுக்கு துணை சக்தியாகச் செயல்பட்ட ஜே.வி.பி., இப்போது நேரடியாக அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. உலக முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் வேறு வழியில்லை.
2022 இல் நிறுத்தப்பட்ட வெளிநாட்டுக் கடனை அரசாங்கம் திருப்பிச் செலுத்தத் தொடங்க வேண்டும். இதைச் செய்ய, திசாநாயக்க ஆட்சி தொழிலாளர்களையும் ஏழைகளையும் சுரண்டுவதன் மூலம் அதன் திரறசேரியை நிரப்புவது அவசியமாகும். அத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியம் மேற்கொள்ளும் முயற்சிகளே, இ.மி.ச.யை மறுசீரமைத்தல் மற்றும் அதன் கட்டணங்களை அதிகரிப்பதில் இடைவிடாமல் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் வெளிப்படுகின்றன.
இ.மி.ச. மற்றும் சுமார் 400 அளவிலான ஏனைய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, அதில் சேவையாற்றும் 500,000 ஊழியர்களின் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளை ஆபத்தில் ஆழ்த்துகிறது. தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகள் நெரிக்கப்படும் சூழ்நிலையிலேயே இது நடக்கிறது. இதனாலேயே முதலாளித்துவ அமைப்பின் கீழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் எந்த உரிமைகளையும் பாதுகாக்க முடியாது என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.
இதற்காக ஒரு திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். “எரிசக்தி அமைச்சரின் அச்சுறுத்தலை எதிர்த்திடு! அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக போராடுவதற்கு இ.மி.ச. நடவடிக்கை குழுக்களை உருவாக்கு!” என்ற தலைப்பில் 17 செப்டம்பர் 2025 அன்று இலங்கை தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டமைப்பு, உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் அந்தத் திட்டம் கூறியதாவது:
இ.மி.ச. தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை எப்படிச் செய்வது? மின்சார சபை ஊழியர்கள் தங்களது ஒவ்வொரு வேலைத் தளத்திலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவது முதல் படியாகும். தொழிற்சங்க அதிகாரத்துவம் இந்தக் குழுக்களில் தலையிடக்கூடாது. தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளையும் அவற்றுக்கான போராட்டத்தையும் ஜனநாயக ரீதியான கலந்துரையாடலின் மூலம் தீர்மானிக்க வேண்டும்.
அத்தகைய குழுக்களை அமைப்பதன் மூலம், தங்களைப் போலவே அரசாங்கத்தின் தாக்குதலுக்கு உள்ளாகும் தொழிலாளர்களை அணுகி, பொதுவான மற்றும் பரந்த போராட்டத்தை ஒழுங்கமைக்க வேண்டியது அவசியம். அத்தகைய போராட்டத்திற்கான பின்வரும் நடவடிக்கையை நாங்கள் முன்மொழிகிறோம்:
மறுசீரமைப்பு / தனியார்மயமாக்கலை நிறுத்து! மறுசீரமைப்புக்கு உட்பட்ட அல்லது உட்படாத அனைத்து அரச நிறுவனங்களையும், தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திடு!
தொழில் பாதுகாப்பு, வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற ஊதியம், ஓய்வூதியம் மற்றும் நல்ல வேலை நிலைமைகள் வேண்டும்!
வெளிநாட்டுக் கடன்களை செலுத்தவதை மறுப்போம்!
இந்தப் போராட்டம் ஒரு பரந்த அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். ஏனெனில், இது முதலாளித்துவ அமைப்பினதும் அதைப் பாதுகாக்கும் வெளிநாட்டு மூலதனத்தினதும் பாதுகாவலரான திசாநாயக்க அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமாகும்.
தொழிலாளர் நடவடிக்கைக் குழுவினராகிய நாங்கள், இந்தப் போராட்டத்திற்காக சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) முன்வைத்துள்ள வேலைத்திட்டத்தை ஆதரிக்கின்றோம். அனைத்து வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களையும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதற்கும், அதைச் செயல்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்கும் தொழிலாள வர்க்கம், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைக்கும் போராட்டத்தில் சோ.ச.க. ஈடுபட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைக்கு சாதகமாக பிரதிபலித்து, இதுபோன்ற நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க ஏற்கனவே எங்களிடம் கலந்துரையடலுக்கு வந்துள்ள இ.மி.ச. தொழிலாளர்களை நாங்கள் வரவேற்கிறோம்.
ஏனைய எல்லா நாடுகளிலும் போலவே, இலங்கையின் தொழிலாளர்களும், சர்வதேச நிதி மூலதனத்தினதும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினதும் ஒருங்கிணைந்த தாக்குதலை எதிர்கொள்கின்றனர்.
எனவே, சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் தங்கள் ஒற்றுமையை பலப்படுத்துவதற்காக, தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் ஒருங்கிணைவதற்காக இலங்கைத் தொழிலாளர்களுக்கும் நாங்கள் முன்மொழிகிறோம்.
இந்த வேலைத் திட்டத்தைப் பற்றி கலந்துரையாட, 'இ.மி.ச. மறுசீரமைப்பை எதிர்க்கவும்! இ.மி.ச. ஊழியர்களின் போராட்டத்தைப் பாதுகாக்கவும்!' என்ற தலைப்பில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும் அக்டோபர் 04 சனிக்கிழமை மாலை 7:00 மணிக்கு சூம் தொழில்நுட்பம் மூலம் ஒரு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. அனைத்து தொழிலாளர்களையும் இளைஞர்களையும் கூட்டத்தில் கலந்து கொண்டு கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
கூட்டம் நடக்கும் நாள் மற்றும் நேரம்: சனிக்கிழமை, அக்டோபர் 4, மாலை 7:00 மணி
கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி கூட்டத்திற்கு பதிவுசெய்துகொள்ளுங்கள்:
https://us06web.zoom.us/meeting/register/BEO9NOTVTwq6E6ft7gP8Yg
மேலும் படிக்க
- எரிசக்தி அமைச்சரின் அச்சுறுத்தலை எதிர்த்திடு! அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்டத்தை எதிர்த்துப் போராட இ.மி.ச. நடவடிக்கைக் குழுவை உருவாக்கு!
- இலங்கை ஜனாதிபதி திசாநாயக்கவின் அச்சுறுத்தல்களிலிருந்து மின்சாரத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடு!
- இலங்கை அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்ட நிரலுக்கு இலங்கை மின்சார சபை தொழிலாளர்களின் எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் அடக்குகின்றன
- நிகழ்நிலைக் கூட்டம்: இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பை எதிர்த்திடு! இ.மி.ச. ஊழியர்களின் போராட்டத்தை பாதுகாத்திடு!