முன்னோக்கு

இலங்கை ஜனாதிபதி திசாநாயக்கவின் அச்சுறுத்தல்களிலிருந்து மின்சாரத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

செப்டம்பர் 17 அன்று, கொலன்னாவையில் உள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக, நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் 'முற்போக்கான மாற்றத்தை' ஏற்படுத்துவதற்காக தனது அரசாங்கம் அர்ப்பணித்துக்கொண்டுள்ளதால், அதற்கு யாரும் தடங்கல் ஏற்படுத்தினால், அவர் அரச அல்லது அரை அரச சேவையிலிருந்து விலகிக்கொள்ளலாம் என்று எச்சரித்தார்.

அவரது கருத்து பின்வருமாறு: 'இப்போது ஏற்படுத்தப்படும் முற்போக்கான மாற்றத்தைத் குறுகிய அரசியல் நலன்களால் தடுக்கத் தயாராக வேண்டாம். நாங்கள் எங்கள் தரப்பில், அனைத்து தொழிலாளர்களையும் சமமான உரிமைகொண்ட தொழிலாளர்களாக ஏற்றுக்கொள்வோம், ஆனால் முற்போக்கான மாற்றங்களைத் தடுப்பதற்குப் பதிலாக, நீங்கள் உதவ வேண்டும்.' அப்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை கட்டியெழுப்ப முடியும் என்று கூறினார்.

மின்சாரத் தொழிலாளர்களை நோக்கி விரலை நீட்டி, 'இப்போது நான் மின்சாரத் தொழிலாளர் ஐயாமார்களிடம் கேட்கிறேன், பழையதை [சட்டத்தை] மாற்றுவது குற்றமா?' என கேட்ட திசாநாயக்க, 'வேலைநிறுத்தம் செய்கிறீர்கள், ஒத்துழையாமையை முன்னெடுக்கின்றீர்கள், சுகயீன விடுமுறை எடுக்கின்றீர்கள்! இப்படி வேலை செய்ய முடியாது,' என ஒரு கண்டிக்கும் தொனியில் மேலும் கூறினார்.

கொலன்னாவை பெட்ரோலிய சேமிப்பு வளாகத்தில் மேலும் ஆறு பெட்ரோலிய தொட்டிகள் கட்டும் பணிகள் தொடங்கும் போது வெளியிடப்பட்ட இந்தக் கூற்றுகளில் நேரடியாக இலக்கு வைக்கப்பட்டவர்கள், செப்டம்பர் 17, 18 ஆம் திகதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களே ஆவர். தங்கள் உரிமைகளுக்காகப் போராட முன்வரும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் இது ஒரு எச்சரிக்கையாகும்.

செப்டம்பர் 17 அன்று மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக கொழும்பு தலைமை அலுவலகம் முன் மின்சார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது.

திசாநாயக்கவின் அச்சுறுத்தல்களை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு எதிரான அனைத்து போராட்டங்களும் நசுக்கப்படும் என்றே அவர் எச்சரித்துள்ளார். ஜனாதிபதியின் மொழி சர்வாதிகாரமானது. அரசாங்கம், 17,000 அஞ்சல் ஊழியர்களின் ஒரு வார கால வேலைநிறுத்தத்தை முறியடிக்க ஆகஸ்ட் 23 அன்று இராணுவத்தையும் பொலிசையும் பயன்படுத்தியது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து தனது அரசாங்கம் பொறுப்பெடுத்துக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கனத் திட்டத்தை துரிதப்படுத்துவதையே, பொருளாதாரம் 'முற்போக்கான மாற்றத்திற்கு' உட்பட்டுள்ளது என்று திசாநாயக்க வஞ்சத்தனமாகக் கூறுகிறார். இந்த திட்டத்தை இலங்கையில் ஒரு 'கொடூரமான பரிசோதனை' என்று இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய தூதுக் குழுவின் முன்னாள் தலைவரான பீட்டர் பிரூவர் விவரித்தார்.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்களின் உரிமைகளை வெட்டுவதும் இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதும் ஒரு 'முற்போக்கான மாற்றம்' என்று ஜனாதிபதி கூறுவது பொய்யாகும். சர்வதேச நாணய நிதிய சிக்கன கொள்கைகளை செயல்படுத்தி, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் உரிமைகளை நசுக்குவது 'சமூக எதிர்ப் புரட்சி' என்று அழைக்கப்படுகிறது.

இதன் கீழ், 2020 முதல் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் சுமையை தங்கள் மீது சுமத்துவதற்கு எதிராக 2022 ஏப்ரல்-ஜூலை மாதங்களில் ஒரு வெகுஜன எழுச்சி ஏற்பட்டதை தொழிலாளர்களும் ஏழைகளும் அறிவார்கள். திசாநாயக்க உட்பட மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர்கள், ஒரு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முன்மொழிந்து, தொழிற்சங்கத் தலைவர்களின் உதவியுடன், தொழிலாளர்களையும் ஏழைகளையும் அந்தப் பாதையில் தடம்புரளச் செய்து, போராட்டத்தை காட்டிக் கொடுத்தனர். ஜே.வி.பி மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் தோள்களில் ஏறி ஆட்சிக்கு வந்த விக்கிரமசிங்க அரசாங்கமும், இப்போது திசாநாயக்க ஆட்சியும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளை சுமத்தி, அவர்களது வாழ்க்கை நிலைமைகளை தாங்க முடியாதளவு மோசமாக்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளின் கீழ் இ.மி.ச. மற்றும் ஏனைய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பதன் உண்மையான குறிக்கோள் என்னெவென்றால், இறுதியில் அவற்றை இலங்கை மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் இலாபத்திற்காக குறைந்த விலைக்கு விற்பதாகும். இலங்கை மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்த மறுசீரமைப்பை வெளிநாட்டு மூலதனத்திற்கு 'கதவைத் திறப்பதாக' உற்சாகமாக கூறுகின்றனர். இந்த பெரிய முதலாளிகளே, திசாநாயக்க தங்களுக்கு ஒரு 'முற்போக்கான பொருளாதார மாற்றத்தை' கொண்டு வருவார் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். இந்த முற்போக்கான மாற்றத்தில் இலங்கை பெரிய முதலாளித்துவ நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகைகள் உட்பட சலுகைகளை வழங்குவதும் அடங்கும்.

விக்ரமசிங்க அரசாங்கம் கொண்டு வந்த மசோதாவை மாற்றி, தன்னுடைய அரசாங்கம் ஊழியர்களின் 'உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில்' ஒரு புதிய மசோதாவை கொண்டு வருவது 'குற்றமா' என்ற திசாநாயக்கவின் கேள்விக்கு பதில், புதிய மசோதா எந்த அடிப்படை மாற்றங்களையும் செய்யவில்லை என்பதே ஆகும்.

விக்ரமசிங்கவின் மசோதா முன்பு இ.மி.ச.யை 12 நிறுவனங்களாகப் பிரிக்கப்படும் என்றும், அவற்றில் இரண்டு தனியார்-அரச நிறுவனங்களாக இருக்கும் என்றும் கூறியது உண்மையே. இது இறுதியில் அனைத்து நிறுவனங்களையும் தனியார்மயமாக்கும் குறிக்கோளைக் கொண்டிருந்தது. திசாநாயக்கவின் ஆட்சியின் கீழ், இ.மி.ச. நான்கு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு, அவை இறுதியில் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கப்படும். 'தனியார்துறையே பொருளாதார வளர்ச்சியின் இயந்திரம்' என்பது விக்ரமசிங்க மற்றும் ஏனைய முதலாளித்துவ ஆட்சியாளர்களைப் போலவே திசாநாயக்கவினதும் தொனிப்பொருளாகும்.

'குறுகிய அரசியல் நலன்களுக்காகத் தடங்கல்களை

 ஏற்படுத்த தயாராக வேண்டாம்' என்று திசாநாயக்க தனது உரையில் கட்டளையிடும் தொனியில் கூறினார். 17,000 தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது தபால் அமைச்சர் இதேபோன்ற கருத்தையே கூறினார். இறுதியில், இராணுவம் மற்றும் பொலிசை அனுப்பி, அஞ்சல் தொழிற்சங்கத் தலைவர்களின் வெட்கக் கேடான ஆதரவுடன், போராட்டத்தை அடக்கினர்.

இதன் பொருள், தொழிலாளர்களின் போராட்டங்கள் எதிர்க்கட்சியின் நோக்கங்களை அடைவதற்காக மேற்கொள்ளப்படுபவை என்று முத்திரை குத்துவதன் மூலம் அவற்றை நசுக்குவதே ஆகும். தற்போது எதிர்க்கட்சியில் உள்ள கட்சிகள் ஆட்சியில் இருந்த போது இதேபோன்ற அறிக்கைகளை வெளியிட்டு, தொழிலாளர்களுக்கு எதிராக பொதுமக்களைத் தூண்டிவிட்டன.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) / தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியைத் தீர்ப்பது என்ற பெயரில், அதன் சுமையை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த நெருக்கடியின் மத்தியில், கொழும்பு அரசாங்கம், அதன் வெளிநாட்டுக் கடனை செலுத்த முடியாமல், 2022 ஏப்ரலில் அதை இடைநிறுத்தியது.

2028 முதல் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை உறுதி செய்வதும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களான இலங்கையின் பெரிய வணிகர்களும், இலாபங்களைக் கொள்ளையடிப்பதற்கான நிலைமைகளை உருவாக்குவதுமே சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக நிதி நிறுவனம் நிர்ணயித்த நிபந்தனைகளை நிறைவேற்ற அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

இலங்கை அரசாங்கமும் முதலாளித்துவ வர்க்கமும் ஆழமடைந்து வரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் பீதியடைந்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் உலகிற்கு எதிராக நடத்தி வரும் வரிப் போரின் ஒரு பகுதியாக இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய 20 சதவீத வரி, உள்ளூர் வணிகர்களை ஏற்றுமதி வீழ்ச்சி சிக்கலுக்குள் தள்ளி உள்ளது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் மற்றும் மத்திய கிழக்கில் காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை படையெடுப்பு உட்பட வளர்ந்து வரும் உலகப் போர் அச்சுறுத்தல், ஒவ்வொரு நாட்டிலும் நெருக்கடியை ஆழப்படுத்தி வருகிறது.

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான மின்சாரத் தொழிலாளர்களினது மட்டுமன்றி, அனைத்துப் பிரிவு தொழிலாளர்களின் போராட்டமும் நிச்சயமாக ஒரு அரசியல் போராக ஆகியுள்ளது. ஏனெனில் அரசாங்கத்தின் திட்டத்தைத் தோற்கடிக்காமல் தாக்குதல்களை நிறுத்த முடியாது.

மின்சாரம் மற்றும் பிற தொழிலாளர் பிரிவினர், கிராமப்புற மக்கள் மற்றும் இளைஞர்களும் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களை நிறுத்துவதற்காகவே இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தனர். ஆனால் இப்போது அதற்கு நேர்மாறாக நடக்கிறது. உண்மையில், இந்த அரசாங்கம் மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்து, பெருவணிகங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக அறிவித்தே ஆட்சிக்கு வந்தது.

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைத் தோற்கடிக்க, தொழிலாளர்களுக்கு மாற்று வேலைத்திட்டம் அவசியமாகும். தொழிலாளர்களுக்கோ அல்லது ஏழைகளுக்கோ முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் தீர்வுகளைக் காண முடியாது. எதிர்க்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மற்றும் போலி இடதுசாரிகளும் தொழிலாளர்களை முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் அடக்கி வைத்து, அரசாங்கத்தின் மறுசீரமைப்பு உட்பட சர்வதேச நாணய நிதிய திட்டத்தில் அவர்களை சிக்கவைக்க செயல்பட்டு வருகின்றன.

திசாநாயக்க அரசாங்கம் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக எழும் போராட்டங்களை நசுக்கும் ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கித் திரும்புகிறது.

தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மின்சாரத் தொழிலாளர்கள் மீது கைவைக்காதே! என்று அறிவித்து அவர்களைப் பாதுகாப்பதில் அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபட வேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம்.

ஒவ்வொரு வேலைத்தளத்திலும் நிறுவனத்திலும், தொழிலாளர்கள் தங்கள் சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக கூட்டு வர்க்க நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க முன்வர வேண்டும். முதலாளித்துவக் கட்சிகள், தொழிற்சங்க அதிகாரத்துவம் அல்லது முதலாளித்துவ ஆதரவு அமைப்புகளுக்கு அவற்றில் இடம் கொடுக்கக் கூடாது.

தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் மாற்று அரசாங்கம் ஒரு முதலாளித்துவ அரசாங்கம் அல்ல. அனைத்து பெரிய வணிகங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளை தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலமும், சிறு குழுவினர் இலாபத்தைக் கொள்ளையடிப்பதை நிறுத்துவதன் மூலமும், பெரும்பான்மையான சமூகத்தின் நலனுக்காக பொருளாதாரத்தை ஒரு சோசலிச மறுசீரமைப்பிற்கு உட்படுத்துவதன் மூலமுமுமே அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும். கொலைகார நிதி மூலதன உரிமையாளர்களின் வெளிநாட்டுக் கடனை செலுத்துவதை நிராகரிக்க வேண்டும்.

சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு, ஏழைகள் மற்றும் இளைஞர்களினதும் ஆதரவைத் திரட்டிக்கொண்டு, தொழிலாள வர்க்கம் போராட வேண்டும்.

Loading