இலங்கை ஜனாதிபதி மின்சாரத் தொழிலாளர்களுக்கு எதிராக அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை அமுல்படுத்துகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை மின்சார சபையை (இ.மி.ச.) மறுசீரமைப்பதற்கு எதிராகவும், தங்களின் தொழில்கள் மற்றும் நிலைமைகளைப் பாதுகாக்கவும் பல வாரங்களாக இ.மி.ச. தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டத்தை அடக்குவதற்காக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அரசுக்குச் சொந்தமான இ.மி.ச. மீது அத்தியாவசிய சேவை உத்தரவுகளை விதித்தார்

17 செப்டம்பர் 2025 அன்று கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் முன் இ.மி.ச. ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோது

செவ்வாய்கிழமை, அவரது மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து CEB ஊழியர்களினதும் விடுமுறையை ரத்து செய்தது - இது எந்தவொரு மருத்துவ விடுமுறைப் போராட்டத்தையும் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.

திசாநாயக வெளியிட்ட ஞாயிற்றுக்கிழமை வர்த்தமானி அறிவிப்பின்படி, அனைத்து மின்சார விநியோக சேவைகளும் அத்தியாவசியமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கை, மின்சாரத் தொழிலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையைத் தடை செய்ய அரசாங்கத்தை அனுமதிக்கிறது.

இணங்கத் தவறினால், அது ஒரு சுருக்கமான நீதவான் விசாரணைக்கு வழிவகுத்து, குற்றவாளிகள் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை, 2,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டையும் எதிர்கொள்ள நேரிடும். அத்தகைய தொழில்துறை போராட்ட நடவடிக்கைக்காக பிரச்சாரம் செய்வதும் அதே தண்டனைகளுக்குரிய குற்றமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரையும், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் இ.மி.ச. தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டிக்குமாறு அழைப்பு விடுப்பதுடன் அனைவரும் அவர்களைப் பாதுகாக்க முன்நிற்குமாறு வலியுறுத்துகிறது.

செப்டம்பர் 4 முதல், சுமார் 20,000 இ.மி.ச. தொழிலாளர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தின் ஒரு பகுதியாக மறுசீரமைப்புக்கு எதிராக ஒத்துழையாமை பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர் 17-18 ஆம் திகதிகளில், தொழிலாளர்கள் ஒரு சுகயீன விடுமுறை பிரச்சாரத்தில் சேர்ந்து கொழும்பில் உள்ள இ.மி.ச. தலைமை அலுவலகத்திற்கு வெளியே சக்திவாய்ந்த போராட்டங்களை நடத்தினர்.

தற்போதைய மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ள இ.மி.ச. தொழிற்சங்கங்களின் கூட்டணியின் (JACEBTU) தலைவர்கள், ஆரம்பத்தில் அத்தியாவசிய சேவை உத்தரவை ஏற்க மாட்டோம் என்று வாய்சவடால் விடுத்தனர். அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளுக்கு 'திருப்திகரமான தீர்வுகளை' வழங்கத் தவறினால் தொழிற்சங்கங்கள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் என்று அவர்கள் அறிவித்தனர்.

இருப்பினும், இ.மி.ச. தொழிற்சங்க அதிகாரிகள் விரைவாக தலைகீழாக மாறி அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு பணிந்தனர். நேற்று மாலை, அரசாங்க தொழில் ஆணையருடனான சந்திப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நாட்டின் பிரதிநிதியுடனான சந்திப்புக்கான வாய்ப்பை மேற்கோள் காட்டி, இன்று திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக தொழிற்சங்க கூட்டணி அறிவித்தது. தற்போது நடைபெற்று வரும் ஒத்துழையாமை பிரச்சாரம் மட்டுமே தொடரும்.

அரசாங்கம் தங்கள் தொழில்கள் உட்பட தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க மறுப்பது குறித்து தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் பரவலான கோபத்தைக் கட்டுப்படுத்த மட்டுமே இ.மி.ச. தொழிற்சங்கத் தலைவர்கள் அந்த மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை எடுத்தனர். இருப்பினும், தொழிற்சங்கங்கள் இ.மி.ச. தொழிலாளர்களை வேண்டுமென்றே தனிமைப்படுத்தி, அரசாங்க அடக்குமுறைக்கு எதிராக அவர்களைப் பாதுகாக்க ஏனைய தொழிலாளர்களை அணிதிரட்ட மறுத்துவிட்டதனால் அவர்கள் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

இ.மி.ச. தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்குவதற்கான திசாநாயகவின் புதிய நடவடிக்கைகளுக்கு முழு அரசியல் ஸ்தாபனமும் ஆதரவளித்துள்ளது. அனைத்து பாராளுமன்றக் கட்சிகளின் தலைவர்களும் முந்தைய நாள் ஒப்புதல் அளித்ததால், ஜனாதிபதியின் அத்தியாவசிய சேவை உத்தரவை நேற்று பாராளுமன்றம் விவாதம் இல்லாமல் அங்கீகரித்தது.

மறுசீரமைப்புக்கு உடன்படாத எந்தவொரு இ.மி.ச. ஊழியரும் சுயவிருப்புடனான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ராஜினாமா செய்யலாம் என்று கடந்த வாரம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி அறிவித்தார். செப்டம்பர் 17 அன்று, அரசாங்கத்தின் 'முற்போக்கான பொருளாதார மாற்றத்தை' -வேறுவிதமாகக் கூறினால், சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன திட்ட நிரலை- தடுக்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி திசாநாயக இ.மி.ச. ஊழியர்களை எச்சரித்தார்.

ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்குள், திசாநாயக மின்சாரத் தொழிலாளர்கள் மீது போரை அறிவித்துள்ளார். அரசாங்கம் சர்வதேச நாணய நிதிய கட்டளைகளை செயல்படுத்துவதால் போராட்டத்திற்குள் தள்ளப்படும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாகும். ஜனாதிபதி அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை கையிலெடுப்பது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போர் அறிவிப்பாகும்.

முதலாளித்துவ ஆட்சியின் பாரம்பரிய கட்சிகளுக்கு எதிரான பிரமாண்டமான வெகுஜன எதிர்ப்பை சுரண்டிக்கொண்டு, ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகளின் கீழ் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தது. நாட்டுக்கு பிணை எடுப்பு கடன் வழங்குவதற்காக, சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகவும், மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதாகவும் அது தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்தது. பதவிக்கு வந்ததும், திசாநாயக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது உட்பட தனது வாக்குறுதிகளை விரைவாகக் கிழித்து எறிந்தார்.

அரச அடக்குமுறையுடன், அரசாங்கம் தொழிற்சங்கங்களை இ.மி.ச. ஊழியர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது. செப்டம்பர் 22 அன்று, ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை மின்சார ஊழியர் சங்கம் (CEWU), 'மின்சார சபைக்கு என்ன நடக்கும்' என்ற தலைப்பில் ஒரு துண்டுப்பிரசுரத்தை விநியோகித்தது. இ.மி.ச. தொழிலாளர்களின் போராட்டத்தை 'தோல்வியடைந்த, ஊழல் நிறைந்த அரசியல் குழுக்களின் சதி' என்று கண்டித்த அது, ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பதற்கான ஒரு வழிமுறையாக இ.மி.ச.யின் மறுசீரமைப்பை ஆதரித்தது.

இ.மி.ச.யை நான்கு நிறுவனங்களாகப் பிரிப்பதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளுக்கு முழுமையாக உடன்பட்டதே அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்டமாகும், இது இறுதியில் அதை தனியார்மயமாக்குவதற்கு வழி வகுக்கும் என்ற உண்மையை இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் துண்டுப்பிரசுரம் மூடிமறைத்தது. தொழிலாளர்களின் தொழில்கள், சம்பளம் மற்றும் வேலை நிலைமைகள் வெட்டிச் சரிக்கப்பட்டு இலாபத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இ.மி.ச. தொழிலாளர்களை அரக்கர்களாக சித்தரிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியை எதிர்க்குமாறும், அவர்களின் போராட்டத்தை அவர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான இடைவிடாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான உத்வேகமாக பார்க்குமாறும் அனைத்து தொழிலாளர்களிடமும் சோ.ச.க. கேட்டுக்கொள்கிறது. அரசாங்கம் ஊழலை எதிர்த்துப் போராடவில்லை, மாறாக மின்சாரக் கட்டணங்களை மேலும் 7 சதவீதம் உயர்த்தும் முடிவு உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளையே நிறைவேற்றுகிறது.

திசாநாயக அரசாங்கம் இ.மி.ச. தொழிலாளர்களைத் தாக்குவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளுக்கு கண்டிப்பாகக் கட்டுப்பட்டுள்ளதுடன் அவற்றை முழுமையாகச் செயல்படுத்தத் தவறினால் சர்வதேச நாணய நிதிய கடனின் அடுத்த தவணை மறுக்கப்படுவதை எதிர்கொள்ள நேரும்.

இரண்டாவதாக, இ.மி.ச. போராட்டம் தொடர்ந்தால், வாழ்க்கைத் தரத்தை சீரழிக்கும் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்க தொழிலாளர்களின் ஏனைய பிரிவினர்களையும் ஊக்குவிக்கும் என்று திசாநாயக அஞ்சுகிறார்.

இ.மி.ச.  உட்பட தொழிலாளர்களின் போராட்டங்களை நாசமாக்கி காட்டிக் கொடுத்த வரலாற்றையே ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள் கொண்டுள்ளன. உதாரணமாக, 1996 ஆம் ஆண்டில், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம், சம்பள முரண்பாடுகளை சரிசெய்ய கோரியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் இ.மி.ச. தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தை நசுக்க அத்தியாவசிய சேவைகள் சட்டத்தைப் பயன்படுத்தியது.

ஜே.வி.பி. தொழிற்சங்கத் தலைவர்கள், அந்த வேலைநிறுத்தம் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு உதவும் என்று அறிவித்து, அதை குழப்பிவிட்டனர். இருப்பினும், அதன் உறுப்பினர்கள் பலர் வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். இப்போது ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் அடக்குமுறையை நியாயப்படுத்த இதேபோன்ற ஒரு அவதூறு பயன்படுத்தப்படுகிறது: இப்போது, இ.மி.ச. தொழிற்சங்க நடவடிக்கை 'பழைய தோற்கடிக்கப்பட்ட மற்றும் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளின்' சதி எனப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு சற்று முன்னதாக, வேலைநிறுத்தங்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் என்பதால், ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள் அனைத்து தொழில்துறை நடவடிக்கைகளையும் அடக்க வேண்டும் என்று வலியுறுத்தின. இப்போது அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருக்கும் லால் காந்தவும் ஏனைய ஜே.வி.பி. தலைவர்களும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை பொருளாதார மீட்சிக்கு அச்சுறுத்தல் என்று முத்திரை குத்துகிறார்கள் -உண்மையில், பெருநிறுவன இலாபங்களுக்கும் இலங்கை முதலாளித்துவத்திற்கும் அச்சுறுத்தலாகும்.

ஏனைய இ.மி.ச. தொழிற்சங்கங்கள், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவை உத்தரவுகளுக்கு அடிபணிய முடிவு செய்திருப்பது, தொழிலாளர்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உண்மையான போராட்டத்தை நாசமாக்குவதில் அவர்களின் துரோகப் பங்கை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது. இந்த முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள் அனைத்தும், அவற்றில் பல சார்ந்திருக்கும் எதிர்க்கட்சிகளைப் போலவே, சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்ட இ.மி.ச. மறுசீரமைப்பை ஆதரிக்கின்றன. மறுசீரமைப்பு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தவே அவை வேண்டுகோள் விடுக்கின்றன.

இ.மி.ச. தொழிலாளர்கள் விவகாரத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு இ.மி.ச. வேலைத் தளத்திலும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. அந்த வழியில் மட்டுமே தொழிலாளர்கள் தங்கள் நலன்களுக்காகப் போராட ஒரு உண்மையான தொழில்துறை போராட்டம் மற்றும் அரசியல் பிரச்சாரத்தை ஜனநாயக ரீதியாக கலந்துரையாடி செயல்படுத்த முடியும்.

இ.மி.ச. தொழிலாளர்கள், இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரின் பக்கம் திரும்பி, அரசாங்கத்தின் இரக்கமற்ற சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு எதிராக ஒரு கூட்டுப் போராட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.

தொழிலாளர்களும் ஏழைகளும் முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்பிற்குள் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. இ.மி.ச. தொழிலாளர்களுக்கு எதிரான திசாநாயக அரசாங்கத்தின் போர் அறிவிப்பு, ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

இதில் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பெரிய நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பெருந்தோட்டங்களை தேசியமயமாக்குவதும், அத்தகைய நடவடிக்கைகளை செயல்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதும் அடங்கும். இந்த முன்னோக்கிற்காகப் போராட விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறு நாங்கள் அழைக்கிறோம்.

Loading