சோ.ச.க. மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும் நடத்தும் பகிரங்க கூட்டம்

மவுசாக்கலை தேயிலைத் தொழிற்சாலையில் விஜயகுமாரின் மரணம்: இலாபத்திற்காக தொழிலாளர்களின் உயிர்களை பறிக்காதே!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும் (PWAC) மலையகத்தில், மவுசாக்கலை தேயிலைத் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது கொல்லப்பட்ட கிருஷ்ணன் விஜயகுமாரின் துன்பகரமான மரணம் பற்றி கலந்துரையாட நவம்பர் 30 அன்று மஸ்கெலியாவில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளன.

49 வயதான விஜயகுமார், 5 நவம்பர் 2025 அன்று, அவர் இயக்கிய தேயிலை கொழுந்து அரைக்கும் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டபோது கொல்லப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கை, அவர் “பலமாக அடிபட்டதனால்” 'கழுத்து, மார்பு மற்றும் மேல் மூட்டுகளில் காயங்கள்' ஏற்பட்டு மரணித்ததாக கூறுகிறது.

அரைக்கும் இயந்திரத்தில் இன்றியமையாத பாதுகாப்பு ஆவரணங்கள் (கவசங்கள்) அகற்றப்பட்டிருந்ததாலேயே அல்லது பொருத்தப்படாமல் இந்ததாலேயே விஜயகுமார் பலியானார். இந்த துயரம் நிச்சயமாக தடுத்திருக்கக் கூடிய ஒன்றாகும். பாதுகாப்பு ஆவரணங்கள் இருந்திருந்தால், அவரது உயிர் நிச்சயமாக காப்பாற்றப்பட்டிருக்கும், என சக தொழிலாளர்கள் உறுதியுடன் கூறுகிறார்கள்.

மவுசாக்கலை தொழிற்சாலை இலங்கையின் மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் (ARPICO) ஒரு பகுதியான மஸ்கெலியா பெருந்தோட்டங்களுக்கு சொந்தமானதாகும். பல ஆண்டுகளாக, அதன் ஆபத்தான நிலையை முழுமையாக அறிந்திருந்தும், தொழிற்சாலை நிர்வாகம் தெரிந்தே விஜயகுமாரையும் ஏனைய தொழிலாளர்களையும் இந்த ஆபத்தான இயந்திரத்தை இயக்க நிர்ப்பந்தித்துள்ளது. ஒவ்வொரு புகாரையும் புறக்கணித்த நிர்வாகம், மிக அடிப்படையான திருத்த நடவடிக்கைகளை கூட எடுக்க மறுத்துவிட்டது.

செலவுகளைக் குறைப்பதற்கும் பெருநிறுவன இலாபத்தை அதிகரிப்பதற்கும் வேண்டுமென்றே பாதுகாப்பு தரங்களை குறைத்ததில் இருந்து நேரடியாக உருவாகும் இத்தகைய பேரழிவுகள் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் வேகமாக அதிகரித்து வருகின்றன. பெருந்தோட்டங்களிலும் ஏனைய வேலைத் தளங்களிலும் நிலவும் கொடிய நிலைமைகளுக்கு விஜயகுமாரின் மரணம் சமீபத்திய எடுத்துக்காட்டு ஆகும்.

விஜயகுமார் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, நவம்பர் 2 அன்று, யட்டியந்தொட்டையில் உள்ள கிரிபோருவ தோட்டத்தில் இறப்பர் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஒரு இயந்திரம் வெடித்ததில் 25 வயது ரஜினிகாந்த் படுகாயமடைந்து சிறிது நேரத்தில் மரணமானார். 2025 ஆகஸ்ட்டில், கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்திலும், சப்புகஸ்கந்த மாகொலவில் உள்ள ஒரு தொழிற்சாலையிலும் நடந்த தனித்தனி தொழில்துறை விபத்துக்களில் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

இவை வெறும் 'தொழில்துறை விபத்துக்கள்' அல்ல -இவை இலாப நோக்கத்திற்காக, முதலாளித்துவ வர்க்கம் இன்றியமையாத பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மறுப்பதன் விளைவாக ஏற்பட்ட தொழில்துறை கொலைகள் ஆகும்.

தங்கள் உயிர்களைப் பாதுகாக்கவும், தொழில்கள், ஊதியங்கள் மற்றும் கண்ணியமான வேலை நிலைமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க, கம்பனி-சார்பு தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக ஒவ்வொரு தொழிற்சாலை, பெருந்தோட்டம் மற்றும் வேலைத் தளத்திலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சியும் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றன.

இந்தக் குழுக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உற்பத்தியை நிறுத்தி, பாதுகாப்புத் தரவை முழுமையாக வெளியிடக் கோருவதோடு, மரணங்கள் மற்றும் காயங்களுக்குப் பொறுப்பான அனைவரையும் குற்றவியல் பொறுப்பேற்க வைக்க போராட வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் தீர்க்கமான விடயம், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியமாகும். முதலாளித்துவத்திற்கு எதிராக, சோசலிசத்திற்கான போராட்டத்தில் உலகளவில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதே தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியின் நோக்கமாகும்.

இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்து கொண்டு கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறு அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனையோரையும் சோசலிச சமத்துவக் கட்சியும் பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் கேட்டுக்கொள்கின்றன.

திகதி: ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2025

நேரம்: பிற்பகல் 2:00 மணி

இடம்: பி.எம்.டி. மண்டபம், சாமிமலை வீதி, மஸ்கெலியா

Loading