இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கை மின்சார சபையை (இ.மி.ச.) மறுசீரமைப்பதற்கு எதிரான அதன் தொழிலாளர்களின் போராட்டம், ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்வதோடு மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி/தே.ம.ச) அரசாங்கம், ஆரம்பத்தில் இருந்தே அச்சுறுத்தல்கள் மற்றும் அரச அடக்குமுறைகள் மூலம் அதை நசுக்க கொடூரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
'முற்போக்கான மாற்றத்தை' ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை யாரும் சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அச்சுறுத்திய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக, இ.மி.ச. தொழிலாளர்களின் போராட்டத்தைத் தடை செய்ய, செப்டம்பர் 21 அன்று, கொடூரமான அவசரகாலச் சட்ட விதிகளை அமுல்படுத்தி கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். மறுநாள், இ.மி.ச. தலைவரால் மறு அறிவிப்பு வரும் வரை, இ.மி.ச. தொழிலாளர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டன.
தொடர்ச்சியான வேலைநிறுத்தம் உட்பட தீவிர தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபடுவதாக வாய்ச்சவடால் விடுத்த தொழிற்சங்கத் தலைவர்கள், அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைக்கு முன்னால் மண்டியிட்டுள்ளதோடு இ.மி.ச. தொழிலாளர்களின் போராட்டத்துக்கு குழிபறித்து, கலைத்துவிடும் துரோக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மறுசீரமைப்பினால் ஆபத்துக்குள்ளாகும் தங்கள் தொழில்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாக்கப் போராடுவதற்கு, இ.மி.ச. தொழிலாளர்கள் விருப்பமும் உறுதியும் கொண்டிருந்தாலும், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆரம்பத்தில் இருந்தே அதை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு பயனற்ற எதிர்ப்பு பிரச்சாரமாக மட்டுப்படுத்தி, இப்போது அதை சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு (ILO) வேண்டுகோள் விடுக்குமளவுக்கு கீழிறக்கியுள்ளனர். செப்டம்பர் 25 அன்று அதன் இலங்கை பிரதிநிதி ஜோனி சிம்ப்சன் மற்றும் இலங்கை தொழில் ஆணையாளர் நாயகத்துக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் 'சாதகமானது' என்று தொழிற்சங்கத் தலைவர்கள் உறுப்பினர்களிடம் தெரிவித்தனர்.
தொழிற்சங்கத் தலைவர்கள் கூறும் 'சாதகமான' பதில் என்னவெனில், ஜோனி சிம்ப்சன், எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.எம். உதயங்க ஹேமபாலவுக்கு கடிதம் எழுதி, 'ஊழியர்கள் குறித்த துறையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புகளை எதிர்க்கவில்லை என்றும் ... இது தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் அவசர அவசரமாக எடுக்காமல், உரிய நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சட்டத்தின்படி மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளார் என இ.மி.ச. பொறியியலாளர் சங்கத் தலைவர் கோசல அபேசிங்கே தனது முகநூல் பக்கத்தின் மூலம் ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
ஐ.எல்.ஓ. கேட்டுக்கொண்டதற்கு இணங்க குறித்த கடிதம் பகிரங்கப்படுத்தப்படாது என்றும் அபேசிங்கே கூறியுள்ளார். அப்படியெனில், அது இ.மி.ச. ஊழியர்கள் அறியக்கூடாத ரகசியமாகும்.
'ஒரு உறுதியான தீர்வு கிடைக்கும் வரை, ஒத்துழையாமை போராட்டம் தொடரும்' என்றும், 'ஐ.எல்.ஓ.வின் தலையீட்டிற்கு அரசாங்கம் சாதகமாக பதிலளிக்கவில்லை என்றால், தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும் வேலைநிறுத்த திட்டத்தை செயற்படுத்த இ.மி.ச. தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்' என்றும் அபேசிங்கே கூறினார்.
தொழிற்சங்கத் தலைவர்களைப் போலவே ஐ.எல்.ஓ.வும் மறுசீரமைப்பை எதிர்க்கவில்லை என்பது தெளிவாகிறது. மறுசீரமைப்பானது 'சட்டப்பூர்வமாக' மற்றும் 'முறைப்படி' செய்யப்பட வேண்டும் என்றும், தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இரு தரப்பினரும் ஒரேவிதமாக கோருகின்றனர். இது தொடர்பாக, புதிய நிறுவனங்களின் கீழ் தொழில்வாய்ப்பு, ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளுக்கு உத்தரவாதம் மற்றும் தானாக முன்வந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக 7 மில்லியன் ரூபா இழப்பீடு உட்பட 24 கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.
அவை நியாயமற்ற மற்றும் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகள் என்று நிராகரித்த அரசாங்கம், அதன் திட்டத்தின் படி மறுசீரமைப்பு செயல்முறையை முன்னெடுத்து வருகிறது. இ.மி.ச. தற்போது 4 நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 2 நிறுவனங்கள் அடுத்த ஆண்டு அதனுடன் சேர்க்கப்படும். பின்னர் இ.மி.ச. கலைக்கப்படும் என்று மின்சாரத் துறை மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது நிரோஷன் சமீபத்தில் ஐ.டி.என். தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைப்படி செயல்படுத்தப்படும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதன் ஒரு பகுதியாகவே, இ.மி.ச..யை தனியார்மயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழிற்சங்கத் தலைவர்கள் அதை ஊழியர்களிடமிருந்து முற்றிலுமாக மூடி மறைக்கின்றனர். ஊழியர்கள் ஏற்கனவே நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களதும் விருப்பத்தை அல்லது விருப்பமின்மையை இரண்டு மாதங்களுக்குள் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் என்றும் இ.மி.ச.யின் பொது மேலாளர் கடிதம் மூலம் ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
விரும்பாதவர்கள் சுயவிருப்பில் ஓய்வுபெறும் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற்று சேவையில் இருந்து விலக வேண்டும் என்றும் அது மேலும் கூறுகிறது.
நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊழியர்களின் வேலைவாய்ப்பு, சம்பளம் மற்றும் வேலை நிலைமைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் ஊழியர்கள் கூறுகின்றனர்.
அரசாங்கத்தின் மறுசீரமைப்பு மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களின் செயற்பாடுகள் சம்பந்தமாக இ.மி.ச.யிலும் ஏனைய தொழிலாளர்கள் மத்தியிலும், பரவலான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
காலி தபால் நிலைய ஊழியரான சமிந்த, இ.மி.ச. ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதாகக் கூறினார்:
'அரசாங்கம் தபால் ஊழியர்களின் போராட்டத்தையும் அடக்கியது. இப்போது இ.மி.ச. ஊழியர்களும் அதையே எதிர்கொள்கின்றனர். அரசாங்கம் தொழிலாளர்கள் மீது பெரும் அழுத்தத்தை திணிக்கின்றது. அது தொழிலாளர்களுக்கு எதிராக பொதுமக்களைத் தூண்டி விடுகின்றது. அதை முறியடிக்க தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டம் ஒன்று அவசியம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தொழிற்சங்கங்கள் அத்தகைய போராட்டத்தை நடத்துவதில்லை. அஞ்சல் ஊழியர்களின் போராட்டத்தில், தொழிற்சங்கங்கள் ஏனைய தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவதற்கு எதுவும் செய்யவில்லை. நாங்கள் தனியாகவே இருந்தோம். இ.மி.ச. தொழிற்சங்கங்களும் அதையே செய்கின்றன.'
தங்களது வாக்குகளால் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை 'ஓரத்தில் போட்டுவிட்டது' என்றும் அவர் கூறினார்.
மின்சார சபையில் ஒரு முற்போக்கான மாற்றத்தை மேற்கொள்வதாக அரசாங்கம் கூறினாலும், சபையை ஒரு நிறுவனமாக மாற்றுவதன் மூலம் அதை தனியார்மயமாக்குவதற்கே செய்யப்படுகிறது என்று ரத்மலானை இ.மி.ச. அலுவலக ஊழியர் ஒருவர் கூறினார்.
'அரசாங்கம் அதே பழைய (விக்ரமசிங்கே அரசாங்கத்தின்) பாதையைப் பின்பற்றுகிறது. கடந்த ஆண்டு மின்சார சபையில் போராட்டங்கள் நடந்தன. ரஞ்சன் ஜயலால் (ஜே.வி.பி.-சார்ந்த இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் தலைவர்) ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தவுடன் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று கூறி அவற்றைத் தடுத்தார். இப்போது அவர்களுக்கு பாராளுமன்றத்தில் அதிக அதிகாரம் உள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளை மிதித்து, முதலாளிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.'
அரசாங்கம் இ.மி.ச. தொழிலாளர்கள் மீது மட்டுமன்றி, தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவினர் மீதும் தாக்குதல் தொடுக்கின்றது என்று அவர் கூறினார். 'அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டதாகக் கூறி அவர்கள் மேலதிக நேரத்தைக் குறைத்தனர். அதனால், கையில் கிடைக்கும் பணத்தில் எந்த அதிகரிப்பும் இல்லை. தொழிற்சங்கங்களின் துரோகத்தைப் பொறுத்தவரை, சிறந்த உதாரணம் இலங்கை மின்சார தொழிலாளர் சங்கம் ஆகும். அவர்கள் எங்களை முட்டாளாக்கிவிட்டார்கள், இப்போது தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் மீது அதிக நம்பிக்கை இல்லை.'
தொழிற்சங்கங்கள் சர்வதேச தொழிலாளர் அமைப்பை நாடுவது ஒரு 'தந்திரமே' என்றும், அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகளுக்குக் கீழ்ப்படிந்த ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு முகவரமைப்பான இந்த அமைப்பினால் தொழிலாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் கூறினார். 'ஐக்கிய நாடுகள் சபை உலக அமைதிக்காகப் பாடுபடுவதாகக் கூறினாலும், உலகில் போர்களை நிறுத்த முடியவில்லை. பாலஸ்தீனத்தில் ஒரு பெரிய அளவிலான இனப் படுகொலை நடந்து வருகிறது,' என்று அவர் கூறினார்.
தொழிற்சங்கத் தலைவர்களிடமிருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டியதன் அவசியத்தை எங்கள் நிருபர்கள் விளக்கியபோது, அதற்கு உடன்பட்ட இ.மி.ச. ஊழியர் கூறியதாவது: 'ஆம், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாம் ஒரு தனி அமைப்பை உருவாக்க வேண்டும். அரசியல் தேவையில்லை என்றே தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. ஆனால் நீங்கள் விளக்கியது போல், தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் அவசியம். தொழிற்சங்கங்களுக்கு ஒரு அரசியல் உண்டு. அவை அரசாங்கத்தின் திட்டமான சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளின்படி செயல்படுகின்றன. தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த அரசியல் தேவைப்படுகிறது.'
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் கூறியதாவது: “இ.மி.ச. நான்கு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு தனியார்மயமாக்கப்படும் என்று கூறப்படுகின்றது. அப்படியெனில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும். தொழிலாளர்கள் உரிமைகளை இழக்க நேரிடும். இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கும் இதேதான் நடக்கும். கூட்டுத்தாபனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.”
இ.மி.ச. தொழிலாளர்களின் போராட்டத்திற்கு எதிராக அத்தியாவசிய சேவை உத்தரவுகளை பிறப்பித்ததைக் கண்டித்த அவர், ஏனைய தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்கவும் இது பயன்படுத்தப்படும் என்றார்.
யாழ்ப்பாணம் வியாவில் இந்து கல்லூரியின் விளையாட்டு ஆசிரியரான கே. அன்பரசன், “மின்சாரம் எங்களுக்கு ஒரு அத்தியாவசிய சேவை. நாங்கள் இளமையாக இருந்தபோது, எங்களிடம் குப்பி லாம்புகளே இருந்தன. ஆனால் இப்போது அந்த சகாப்தத்திற்கு நாம் திரும்பிப் போக முடியாது. மின்சாரத் துறை தனியார்மயமாக்கப்பட்டால், அனைவரும் பாதிக்கப்படுவார்கள். இந்தப் போராட்டம் நிச்சயமாக அனைவருக்குமான ஒரு போராட்டமாகும்.”
'அரசாங்கம் மின்சார சபையை நான்கு நிறுவனங்காள பிரிப்பது, தனியார்மயமாக்கலுக்காக அல்ல, மாறாக துஷ்பிரயோகத்தை நிறுத்துவதற்காகவே என்ற பொய்யை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது,' என்று காரைநகரில் உள்ள ஒரு துணை தபால் அதிகாரி கூறினார். “அஞ்சல் சேவையை இலாபகரமான துறையாக மாற்றுதல் என்பதில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். எங்கள் வேலையை விரைவுபடுத்துவதன் மூலம் வருவாயை அதிகரித்துக் காட்டுமாறு எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆனால் DHL போன்ற சர்வதேச விநியோக நிறுவனங்களுடன் போட்டியிட வசதிகளும் வளங்களும் எங்களிடம் இல்லை.'
வருமானம் இல்லாமைக்கு தபால் ஊழியர்கள் மீது குற்றம்சாட்டுவதன் மூலம், மறுசீரமைப்பை தீர்வாக ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் அஞ்சல் ஊழியர்களை நெருக்குவதாக அவர் கூறினார். 'கடந்த தபால் வேலைநிறுத்தத்தில் மற்ற தொழிற்சங்கங்கள் தங்களுக்கு ஆதரவளிக்கவில்லை என்று கூறி, உப-தபால் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எங்கள் வேலைநிறுத்தங்களில் ஆதரவளிக்கவில்லை. அது பிழை. மறுசீரமைப்பு என்பது அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை என்பதால் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்,' என அவர் தெரிவித்தார்.
மாத்தறை இ.மி.ச. அலுவலக ஊழியர் பஞ்சனி, இ.மி.ச. போராட்டத்தில் தானும் பங்கேற்றதாகக் கூறினார். “ஆனால் தொழிற்சங்கங்களின் வேலைத்திட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் ஆரம்பத்திலிருந்தே ரஞ்சன் ஜயலாலின் தொழிற்சங்கத்திற்கு எதிராக இருந்து வருகிறேன். அனைத்தும் நடந்த பிறகே தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. உறுப்பினர்களுடன் எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை. உறுப்பினர்களுக்கு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை.”
தொழிற்சங்கங்கள் செய்வதெல்லாம் உறுப்பினர்களிடமிருந்து சந்தாவை எடுத்துக்கொள்வதுதான் என்றும், “அதனால்தான் பணத்தைக் கழிக்க வேண்டாம் என்று தொழிற்சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும்” அவர் கூறினார். “ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபடுவதாக தொழிற்சங்கங்கள் கூறுவதில் உண்மையில்லை. உண்மையில் எந்த வித்தியாசமும் இல்லை. அனைத்து வேலைகளும் வழக்கம் போல் செய்யப்படுகின்றன. தொழிலாளர்கள் உண்மையில் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் போராட்டத்திற்கு வந்தனர். ஆனால் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை ஏற்பாடு செய்யவில்லை. நீங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்துடன் நான் உடன்படுகிறேன்” என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க
- எரிசக்தி அமைச்சரின் அச்சுறுத்தலை எதிர்த்திடு! அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்டத்தை எதிர்த்துப் போராட இ.மி.ச. நடவடிக்கைக் குழுவை உருவாக்கு!
- இலங்கை அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்ட நிரலுக்கு இலங்கை மின்சார சபை தொழிலாளர்களின் எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் அடக்குகின்றன
- இலங்கை ஜனாதிபதி மின்சாரத் தொழிலாளர்களுக்கு எதிராக அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை அமுல்படுத்துகிறார்