முன்னோக்கு

இரண்டாவது மாதமும் தொடரும் இலங்கை மின்சாரத் தொழிலாளர்களின் போராட்டம்: முன்நோக்கிய பாதை எது?

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) ஊழியர்கள், செப்டம்பர் 4 முதல் தொடங்கிய 'ஒத்துழைமை' போராட்டம் இரண்டாவது மாதத்தை எட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவின் பேரில், மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட இ.மி.ச. மறுசீரமைப்பின் கீழ், தங்கள் தொழில்கள், சம்பளம், வேலை நிலைமைகள் மற்றும் ஏனைய உரிமைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக இ.மி.ச. ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலில் இ.ம.ச.யை அரசுக்கு சொந்தமான நான்கு நிறுவனங்களாக உடைத்து, பின்னர் அதை தனியார்மயமாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

செப்டம்பர் 17 அன்று மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக கொழும்பு தலைமை அலுவலகம் முன் மின்சார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது.

இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள 'இ.மி.ச.யின் அனைத்து தொழிற்சங்கங்கள்' எனப்படும் கூட்டணி, மறுசீரமைப்பை எதிர்க்கவில்லை; அவர்கள் அது 'சட்டப்பூர்வமாகவும்' 'முறைப்படியும்' செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுமே கோருகின்றனர். புதிய நிறுவனங்களின் கீழ் வேலைவாய்ப்பு, ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளுக்கு உத்தரவாதம் மற்றும் சுயவிருப்பில் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக 7 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குதல் உட்பட 24 கோரிக்கைகளை தொழிற்சங்க கூட்டணி முன்வைத்துள்ளது.

இந்த கோரிக்கைகளை நிராகரிக்கும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், அதன் திட்டத்திலிருந்து ஒரு படி கூட பின்வாங்காது என்று கடுமையாக அறிவித்துள்ளது. இது வெறும் அச்சுறுத்தும் அறிக்கைகளாக மட்டுமன்றி, செப்டம்பர் 24 அன்று ஜனாதிபதி திசாநாயக மின்சார சபை மீது கடுமையான அத்தியாவசிய சேவைகள் விதிமுறைகளை அமுல்படுத்தி, அதன் சேவைகளைத் தடுப்பதையும் நிறுத்துவதையும் சிறைத்தண்டனைக்குரிய குற்றமாக மாற்றினார்.

இ.மி.ச.யை நிறுவனங்களாகப் பிரிப்பது உள்ளடங்கிய நடவடிக்கைகளும், 400 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பதும் சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள கட்டளைகளில் மிக முக்கியமானவை ஆகும். அக்டோபர் 9 அன்று, கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுவின் தலைவரான இவான் பாபஜெர்ஜியோ, “இ.மி.ச. கலைக்கப்படுவதை சூழவுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் 2026 மற்றும் அதற்குப் பின்னரும் எரிசக்தித் துறையின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் நாங்கள் உன்னிப்பாகக் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.

இ.மி.ச.யை மறுசீரமைப்பதற்கான கட்டாயத் தேவையை வலியுறுத்திய அவர், 'மின்சார நிறுவனம் ஒரு தனியார் நிறுவனத்தை போலவே வணிக அடிப்படையில் செயல்படுவதையும், நிதி ரீதியாக நல்ல மற்றும் செயல்பாட்டு ரீதியாக சிறந்த முடிவுகளை எடுப்பதையும்' உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கைகள் அவசியம், என்றார்.

இ.மி.ச. ஊழியர்களின் போராட்டத்தைப் பற்றி குறிப்பிடாவிட்டாலும் அதை பற்றி நன்கு அறிந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி, அரசாங்கத்திற்கு மட்டுமன்றி, தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் மீண்டும் தெரிவிக்க வேண்டிய தனது ஆணையை நினைவு கூர்ந்தார். மின்சாரத் தொழிலாளர்கள் திசாநாயக அரசாங்கத்தை மட்டுமன்றி, எல்லாவற்றிற்கும் மேலாக, அதற்கு கட்டளையிடுகின்ற சர்வதேச நாணய நிதியத்தையும் எதிர்கொள்கின்றனர். அதன் பரிந்துரைகளின்படி, அரசாங்கம் சில நாட்களில் மின்சாரக் கட்டணங்களை 7 சதவீதம் அதிகரிக்க உள்ளது.

அரசாங்கம் தங்களது கோரிக்கைகளை முற்றிலுமாக நிராகரித்த போதிலும், அனைத்து இ.மி.ச. சங்கங்களின் சார்பாக அக்டோபர் 8 அன்று ஊடகங்களுக்கு முன் உரையாற்றிய இ.மி.ச. பொறியாளர்கள் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் தனுஷ்கா பராக்கிரமசிங்க, தங்களின் போராட்டத்தின் 'நான்காவது கட்டம்' இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். அதன்படி, அக்டோபர் 6 முதல், எரிசக்தி அமைச்சர் முதல், இ.மி.ச. தலைவர் மற்றும் துணைத் தலைவர் வரையிலான தரப்பினருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் இருக்க பொறியியல் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்கம் இதுவரை 'சாதகமான பதிலை வழங்கவில்லை' என்று ஊடக சந்திப்பில் கூறிய பராக்கிரமசிங்க, மேலும் 10 நாட்கள் காலக்கெடு கொடுத்து, அதற்கும் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றால், 'கடுமையான நடவடிக்கைகளுக்குச் செல்வது குறித்து நாங்கள் கலந்துரையாடுவோம்' என்று கூறினார். இந்த நடவடிக்கைகளுக்கு எந்த விளக்கமும் அவர் அளிக்கவில்லை. தொழில் ஆணையாளர் மற்றும் இ.மி.ச. நிர்வாகத்துடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தொழில் ஆணையாளர் 'எதிர்கால புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் எதிர்கால ஆவணங்களைத் தயாரிப்பதில் உதவுவதாக' உறுதியளித்ததாகவும் கூறிய பராக்கிரமசிங்க, எவ்வாறெனினும் வேலைநிறுத்தத்தை நாடாமலேயே தீர்க்கக்கூடிய ஒரு சிறிய பிரச்சினைதான் தங்களுக்கு இருப்பதாகவும் கூறினார்.

இந்த சுற்றிவளைப்புகளை தவிர்த்துப் பார்த்தால், ​​தொழிற்சங்கத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

மறுசீரமைப்பால் தங்கள் உரிமைகள் மீது தொடுக்கப்படக்கூடிய தாக்குதல்கள் குறித்து மின்சாரத் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்ததால், மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட தொழிற்சங்க அதிகாரத்துவம், இப்போது அவற்றை ஒவ்வொன்றாகக் கைவிட்டு, அரசு / சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டங்களை செயல்படுத்துவதற்குத் தேவையான நிலைமைகளை உருவாக்கச் செயல்பட்டு வருகின்றது. அது ஏன்? அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதிய திட்டங்களையும் அதற்கேற்ப மறுசீரமைப்பையும் ஆதரிக்கும் இந்தத் தலைவர்களால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.

மட்டுப்படுத்தப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தங்கள் தொழிற்சங்க உறுப்பினர்களின் அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதன் பேரில், இ.மி.ச. தொழிற்சங்கத் தலைவர்கள் மிகக் குறைந்த நடவடிக்கையையே எடுத்துள்ளனர். இருப்பினும், இது அரசாங்கத்துடனும் சர்வதேச நாணய நிதியத்துடனும் மோதலாக மாறும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் பீதியடைந்துள்ளனர்.

ஜனாதிபதி திசாநாயக செப்டம்பர் 24 அன்று கடுமையான அத்தியாவசிய சேவைகள் உத்தரவுகளை விதித்தமை கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம் ஆகும். இ.மி.ச. தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த உத்தரவுகளை உடனடியாக நீக்கக் கோரவில்லை. மாறாக, அவர்கள் வேகமாக பின்வாங்குகின்றனர். இதேபோல், வேறு எந்த தொழிற்சங்கத் தலைவரும் இந்த அடக்குமுறை உத்தரவுகளை நீக்கக் கோரவில்லை அல்லது மின்சாரத் தொழிலாளர்களைப் பாதுகாக்க முன்வருவதாகக் கூறவில்லை.

தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை கட்டியெழுப்புவதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவம் முற்றிலும் விரோதமாக இருப்பது, அத்தகைய போராட்டம் அரசாங்கத்துடன் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும்  போராட்டமாக இருப்பதாலாகும். இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும் முதலாளித்துவ அமைப்பு மற்றும் அரசுடன் முழுமையாக பிணைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில், தொழிலாளர்களை திருப்திப்படுத்த மேலும் கபடத்தனங்களில் ஈடுபடும் இ.மி.ச. தொழிற்சங்கத் தலைவர்கள், ஆதரவு தேடி சர்வதேச தொழிலாளர் அமைப்பை (ILO) நோக்கித் திரும்பி, அதன் ஊடாக அழுத்தம் கொடுப்பதன் மூலம், அரசாங்கத்தை தங்கள் கோரிக்கைகளுக்கு அடிபணியச் செய்ய முடியும் என்ற மாயையை தொழிலாளர்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு முகவரமைப்பான ஐ.எல்.ஓ., அரசாங்கங்கள், பெருவணிகங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்து சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களுக்கு சேவை செய்யும் ஒரு அமைப்பாகும்.

இ.மி.ச. தொழிலாளர்கள், இரண்டாவது மாதமாக தொடரும் தங்கள் போராட்டத்தை பற்றியும், அதேபோல் மறுசீரமைப்பு அச்சுறுத்தலுக்கு எதிராக கடந்த ஆண்டு முதல் அவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் பற்றியும் மதிப்பாய்வு செய்து, தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதை இனியும் தாமதிக்க முடியாது.

இ.மி.ச. போராட்டத்தின் படிப்பினைகள் என்ன?

முதலாவதாக, மறுசீரமைப்பின் கீழ் தொழில்கள், சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பிற உரிமைகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலுக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை அமுல்படுத்தம் அரசாங்கத்தின் கீழ் -இப்போது ஜே.வி.பி/தே.ம.ச. அரசாங்கத்தின் கீழ்- தீர்வு காண முடியாது. மறுசீரமைப்பு என்பது இ.மி.ச.யை கலைத்து, தேவைக்கேற்ப புதிய நிறுவனங்களை உருவாக்கி, இந்த உரிமைகளை வெட்டி இலாபத்தை ஈட்டுவதாகும்.

இரண்டாவதாக, நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் சர்வதேச நிதி மூலதனத்திற்கும் மறுசீரமைப்பு அவசியமானதாகும். முதலாளித்துவ அமைப்பில் அதற்கு மாற்றீடு இல்லை.

மூன்றாவதாக, அரசாங்கமும் அனைத்து எதிர்க்கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றன. அதிலிருந்து எழும் பிரச்சினைகள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றிய அவற்றின் கருத்துக்கள், பொதுமக்களின் எதிர்ப்பை அரசியல் ஆதாயத்திற்காக சுரண்டிக்கொள்ளும் இழிவான முயற்சிகள் மட்டுமே.

நான்காவதாக, சர்வதேச நாணய நிதிய திட்டத்தையும் அதற்கேற்ப மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பையும் ஏற்றுக்கொள்ளும் தொழிற்சங்க அதிகாரத்துவம், இ.மி.ச. ஊழியர்களை வெளியேற வழியில்லாத ஒரு முட்டுச்சந்திற்கு கொண்டு வந்துள்ளது.

அனைத்து மின்சாரத் தொழிலாளர்களும் இந்தப் பொறியை தகர்க்க வேண்டும்; தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை வென்றெடுக்கும் நடவடிக்கைக்கா முன்வர வேண்டும். தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிற்சங்கங்களுடனான தங்கள் தொடர்பைப் பயன்படுத்திக் கொண்டு, தொழிலாளர்களை துரோகப் பாதையில் இட்டுச் செல்ல இனி அனுமதிக்கக் கூடாது.

இதை எப்படிச் செய்ய முடியும்?

இது அபத்தமானது அல்ல; தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு தங்கள் உறுப்பினர்களை மட்டுமே கொண்ட தங்களது சொந்த அமைப்புகளை ஒவ்வொரு நிறுவனத்திலும், வேலைத் தளங்களிலும் சுற்றுப்புறங்களிலும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

இந்தக் கட்டுரையில் மின்சாரத் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டிய அவசியத்தை நாங்கள் சுட்டிக்காட்டி இருந்தாலும், அது அனைத்து தொழிலாளர்களுக்குமான ஒரு வேலைத்திட்டமாகும். அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களும், முதலாளித்துவத்தின் நெருக்கடியைத் தங்கள் மீது சுமத்துவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தால் கட்டவிழ்த்து விடப்படும் தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். அத்தகைய குழுக்களை உருவாக்குவதன் மூலம், தங்களைப் போலவே அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்களை நாடி, ஒரு பரந்த போராட்டத்தை ஏற்பாடு செய்வது அவசியமாகும். அத்தகைய போராட்டத்திற்காக பின்வரும் வேலைத் திட்டத்தை நாங்கள் முன்மொழிகிறோம்:

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டமைப்பும் அக்டோபர் 4 அன்று 'இ.மி.ச. மறுசீரமைப்பை எதிர்த்திடு! இ.மி.ச. ஊழியர்களின் போராட்டத்தைப் பாதுகாத்திடு!' என்ற தலைப்பில் ஒரு சக்திவாய்ந்த நிகழ்நிலை கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பிரதான உரையை ஆற்றிய சோ.ச.க. துணைச் செயலாளர் சமன் குணதாச, தங்கள் போராட்டத்தை துரோக அதிகாரத்துவத்திடம் இருந்து தொழிலாளர்கள் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார்:

'முதலாளித்துவ அரசுடன் பிணைந்துள்ள, தர அடிப்படையில் பிரிந்துள்ள, நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட மற்றும் தொழில் திணைக்கள சட்டங்களால் நிர்வகிக்கப்படும் தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர்களை கட்டி வைக்கும் அவற்றின் தலைமைத்துவங்களில் இருந்து சுயாதீனமாக, இ.மி.ச. பொறியாளர்கள் முதல் அடிமட்ட தொழிலாளர் வரை பிரதிநித்துவம் செய்கின்ற, மற்றும் உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை முதன்மையாக கொண்டு கட்டமைக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்கள் மூலம், அனைவரையும் ஒன்றிணைப்பது அவசியமாகும். சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் கைகோர்ப்பதன் மூலமே இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய முடியும்.'

இலங்கையில் தொழிலாளர்கள், தொழிற்சங்கத் தலைமைகளால் பெருமையுடன் ஊக்குவிக்கப்பட்டுவருகின்ற, உலக முதலாளித்துவத்திற்காக பாடுபடுகின்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பை நோக்கி அன்றி, சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் பக்கமே திரும்ப வேண்டும். ஏனைய நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க பொது வேலைநிறுத்தங்கள் உட்பட வர்க்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம், இத்தாலி, ஸ்பெயின் உட்பட நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், காசாவில் நடந்த இனப்படுகொலையை நிறுத்தக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணைவதற்காக ஏற்கனவே உருவாக்கத் தொடங்கியுள்ள 'தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேச கூட்டணியில்' தங்கள் நடவடிக்கை குழுக்களின் ஊடாக இலங்கைத் தொழிலாளர்களும் சேர வேண்டும் என்று, மேற்கூறிய சோ.ச.க. கூட்டத்தில் குணதாச கூறினார்.

பின்வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டத்தை ஒழுங்கமைக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் அழைக்கின்றோம்.

  • மறுசீரமைப்பு / தனியார்மயமாக்கலை நிறுத்து! அவை மறுசீரமைப்பிற்கு உட்பட்டவையா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அனைத்து அரச நிறுவனங்களையும், தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திடு!
  • தொழில் பாதுகாப்பு, வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற ஊதியம், ஓய்வூதியம் மற்றும் சிறந்த வேலை நிலைமைகள் வேண்டும்!
  • வெளிநாட்டுக் கடனை நிராகரித்திடு!

பெருந்தோட்டங்கள், வங்கிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கும் சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தக் கூடிய ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே இந்த வேலைத்திட்டம் வெற்றியடைய முடியும். இந்தப் போராட்டத்திற்காக, தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்பிக்கொண்டு, முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் தூர விலகி, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப சோ.ச.க. உடன் இணையுமாறு நாங்கள் உங்களை அழைக்கின்றோம்.

Loading