இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
தலவாக்கலையில் உள்ள பிலிகந்தமலை தோட்டத்தில் (CWM Estate) உள்ள 54 குடும்பங்கள் அவற்றின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவதற்கான அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன. 30 வீடுகளில் வசிக்கும் இந்தக் குடும்பங்களில் சுமார் 300 பேர் உள்ளனர்.
12 ஏக்கர் அளவுள்ள இந்த நிலம் மத்திய பெருந்தோட்ட நகரமான தலவாக்கலையில் இருந்து ஏழு கிலோ மீற்றர் துாரத்தில் அமைந்துள்ளது.
இந்தத் தோட்டத்தின் உரிமையாளர் சன்னாசி சாந்தகுமார், கடந்த மாதம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா.) உத்தியோகத்தர்களுடன் தோட்டத்துக்கு வந்து உடனடியாக தொழிலாளர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதாக அந்தத் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறியுள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் அக்கரப்பத்தன பிரதேச சபையின் இ.தொ.கா. உறுப்பினரான சாந்தகுமாரின் மருமகன் சிஷோர் தோட்டத்திற்கு வந்து தங்களை வெளியேறுமாறு அச்சுறுத்தியதாகவும் அவர்கள் கூறினர். முந்தைய உரிமையாளரால் வழங்கப்பட்ட பத்தாண்டு கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் இதை உறுதிப்படுத்த அவர் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை எனத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிலிகந்தமலை தேயிலை தோட்டமானது முன்னதாக ஹசந்த பெர்னாண்டோ குடும்பத்திற்கு சொந்தமாக இருந்தது. அப்போது இதன் மொத்த பிரதேசத்தின் அளவு 112 ஏக்கராக இருந்தது. இது 2008 இல் மூடப்பட்டு பின்னர் நான்கு பகுதிகளாப் பிரிக்கபட்டு வேறு நபர்களுக்கு விற்கப்பட்டது.
இதில் தொழிலாளர்களின் லைன் வீடுகள், கைவிடப்படட சிறுவர் பாடசாலைக் கட்டிடம், ஆசிரியர்கள் விடுதி மற்றும் கோவிலையும் உள்ளடக்கிய 12 ஏக்கர் காணியை வாங்கியுள்ளதாக சாந்தகுமார் கூறியுள்ளார். எவ்வாறாயினும் இந்தப் பகுதியின் உரிமையை உறுதிப்படுத்த அவர் எந்த ஆவணங்களையோ அல்லது உறுதிப்பத்திரத்தையோ காட்டவில்லை.
முன்னைய உரிமையாளரால் தோட்டம் விற்கப்பட்டது பற்றி எதுவும் தங்களுக்கு தெரியாது என தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறியுள்ளனர். ”தோட்டத்தில் உள்ள கோவிலின் பதிவைப் பெறுவதற்காக கிராம சேவகரிடம் சென்றபோதே எங்களுக்குத் தெரியவந்தது. அவர் இந்த தோட்டம் சாந்தகுமார் என்பவருக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்தே பதிவுக் கடிதம் பெற வேண்டும் எனக் கூறினார். இதை கேட்ட போது நாம் அதிர்சியடைந்தோம்,” என தொழிலாளர்கள் கூறினர்.
சாந்தகுமார் தலவாக்கலை நகரில் ஒரு நகை கடை வைத்திருக்கும் ஒரு சிறு வணிகர் ஆவார். அவர் இ.தொ.கா. உதவியுடனும் ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கத்துடன் அவரது மருமகன் கொண்டுள்ள அரசியல் தொடர்பை பயன்படுத்தியும் இந்தத் தொழிலாளர்களை வெளியேற்ற முயற்சிக்கின்றார்.
அவர், அங்கு கால்நடைப்பண்ணை ஒன்றைத் தொடங்கவும் மரக்கறி விவசாயம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். தமது விடுகளுக்கு மேல் உள்ள நிலத்தின் ஒரு பகுதி இதற்காக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கூறினர் “கால்நடைப் பண்ணை தொடங்கப்படுமாயின் அதன் கழிவுநீரால் குடிநீர் அசுத்தமாகும் ஆபத்து உள்ளது. மரக்கறித் தோட்டத்திற்கு நீர் வழங்க எமது லைன் அறைகளுக்கு அருகாமையில் நீர்த் தேக்கம் ஒன்றும் தோண்டப்படுகின்றது. பிரதான வீதியும் எமக்கு ஆபத்தாக உள்ளது,” என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் இதை தே.ம.ச. மற்றும் இ.தொ.கா. கூட்டணியால் ஆட்சி செய்யப்படும் கொட்டகல பிரதேச சபைக்கும் அதே போன்று தே.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீரவிற்கும் தெரிவித்துள்ளனர். ஆனால், இதைத் தடுக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை.
“தொடர்ச்சியான இந்த தொந்தரவுகளின் கீழ் அவர்கள் எம்மை வெளியேற்ற முயற்சித்தனர். நாம் இந்தத் தோட்டத்தை விட்டு வெளியேறத் தயார் இல்லை, நாம் இங்கு பல தலைமுறைகளாக வாழ்ந்துவருகின்றோம். நாம் சாந்தகுமாரின் சட்டவிரோத கட்டளையை எதிர்க்கிறோம். ஆனால் எந்த தொழிற்சங்கங்களும் எம்மைப் பாதுகாக்க முன்வரவில்லை. சக்தி தொலைக்காட்சி உட்பட ஊடகங்களும் இது தனியார் தோட்டப் பிரச்சினை என கூறி எமது பிரச்சினையை வெளியிட மறுத்துள்ளன” என அவர்கள் கூறியுள்ளனர்.
அவர்கள் தம்மைப் பாதுகாக்க வந்தமைக்காக உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்தத் தோட்டத்தில் சுமார் 60 தொழிலாளர்கள் வேலை செய்ததோடு அது மூடப்பட்டதால் அவர்களின் வேலையும் பறிபோனது. அந்தத் தொழிலாளர்கள் இ.தொ.கா. மற்றும் மலையக மக்கள் முன்னணியில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். ஆனால் அந்த சங்கங்கள் தோட்டத்தை மூடுவதை எதிர்க்கவும் இல்லை தொழிலாளர்களின் வேலையைப் பாதுகாக்க எதுவும் செய்யவும் இல்லை.
தாம் மலையக மக்கள் முன்னணி ஊடாக ஹட்டன் தொழில் நீதிமன்றில் இந்தத் தோட்டத்தை மூடுவதற்கு எதிராக ஒரு வழக்கைத் தாக்கல் செய்ததாக தொழிலாளர்கள் கூறினர். எவ்வாறாயினும், தாம் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்படவில்லை எனவும் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் இழப்பீடு வழங்கப்பட்டது எனவும் கூறினர்.
தற்போது சில தொழிலாளர்கள் வேலையை தேடி கொழும்பு மற்றும் பிற நகரங்களுக்குச் இடம்பெயர்ந்துள்ள அதேவேளை ஏனையவர்கள் அருகில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் கைக்கூலி அடிப்படையில் உழைத்துப் பிழைக்கின்றனர். அவர்களுக்கு மருத்துவம், கல்வி, போக்குவரத்து என அடிப்டை வசதிகள் எதுவும் கிடையாது. அவர்கள் தலவாக்கலை நகருக்குச் செல்ல வேண்டுமெனில் முச்சக்கர வண்டிக்கு 1,000 ரூபா செலுத்த வேண்டும்.
பெர்னாண்டோ போன்ற சிறு நில உடமையாளர்கள் உரம் மற்றும் விவசாய இரசாயனங்களின் விலை அதிகரிப்பால் ஏற்பட்ட உற்பத்திச் செலவுகளின் அதிகரிப்பு காரணமாக தமது நிலங்களை விற்றுள்ளனர். அவர்களால் சந்தையில் உள்ள பாரிய பெருந்தோட்ட கம்பனிகளுடன் போட்டியிடவும் இயலாது.
இந்தத் தொழிலாளர்கள் பல்வேறு தோட்டக் கம்பனிகள் மற்றும் தற்போதைய ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சி உட்பட அரசாங்கங்களின கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். பிலிகந்தமலை தொழிலாளர்களின் பிரச்சினைகள் இந்த நிலைமையின் ஒரு பாகம் ஆகும்.
எவ்வாறாயினும், கண்ணியமான தொழில் மற்றும் குடிநீர், மின்சாரம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளைப் பெறும் உரிமை அவர்களுக்கு உண்டு.
தோட்டப்புற மக்களின் கண்ணியமான வாழ்விற்காக அடிப்படை உரிமைகளை கீழறுக்கின்ற அதேவேளை, கொழும்பு அரசாங்கங்கள் பல தசாப்தங்களாக, கம்பனிகளுக்கு இலாபகரமானதாகவும், அரச திறைசேரிக்கு வருமானம் ஈட்டவும் பெருந்தோட்டத் தொழில்துறையை வைத்திருக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
தோட்டத் தொழிலாளர்கள் பிரித்தானிய காலனித்துவ காலத்தின்போது தென் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு அடிமை உழைப்பு நிலைமைகளில் பராமரிக்கப்பட்டு வந்தனர். இன்னமும் அதே நிலைமைகளின் அடையாளங்கள் பெருந்தோட்ட மாவட்டங்களில் காணப்படுகின்றன.
அவர்களில் பெரும்பான்மையானோர் இன்னமும் அடிப்படை வசதிகள் அற்ற 10 X 12 சதுர அடி அளவுள்ள லைன் அறைகளிலேயே வாழ்கின்றனர். அவர்கள் நாளாந்த ஊதியமாக மிகச் சொற்பமான 1,350 ரூபா தொகையையே பெறுவதோடு 18 முதல் 22 கிலோ வரை என்ற இலக்கில் நாளாந்தம் தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும். அவர்கள் இன்னமும் இரண்டாம்தர பிரஜைகளாகவே கருதப்படுவதுடன் முன்னர் அவர்கள் போராடி வென்ற மட்டுப்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன.
1948 இல், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தும் ஒர் பாரிய அரசியல் தாக்குதலில் இந்த இந்திய வம்சாவளித் தொழிலாளர்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டு இனவாத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டனர். 1964ல் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் கீழ், அரை மில்லியனுக்கும் அதிகமான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலவந்தமாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
பிரித்தானியாவிற்குச் சொந்தமான பெருந்தோட்டக் கம்பனிகள் 1972 இல் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் கூட்டணி அரசாங்கத்தால் பொறுப்பெடுக்கப்பட்டபோது அந்த நிலங்களுக்கு அருகில் இருந்த சில செல்வந்த குடும்பங்களால் கபடத்தனமாக அந்த நிலங்கள் வாங்கப்பட்டன. சில தோட்டங்களில் தமிழ் தொழிலாளர்கள் துரத்தப்பட்டு காணி இல்லாதவர்களுக்கு கிராமங்கள் உருவாக்க பிரிக்கப்பட்டன.
1993 ஆம் ஆண்டில், பெருந்தோட்டங்கள் பெரிய பிராந்திய நிறுவனங்களின் கீழ் தனியார்மயமாக்கப்பட்டன. கம்பனிகள் வாங்குவதற்குத் தயங்கிய, சில விளிம்புநிலை தோட்டங்கள், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் கீழ் வைக்கப்பட்டன. திட்டமிட்டு தோட்டங்களை கலைப்பதே இதன் நோக்கமாக இருந்தது. இதுபோன்ற பல தோட்டங்கள் ஏற்கனவே பகிரப்பட்டுள்ளன அல்லது பாழடைந்த நிலையில் உள்ளன.
அதன் விளைவாக, பல தொழிலாளர்கள் தங்கள் தொழில்களையும் வாழ்விடங்களையும் இழந்துள்ளனர். எவ்வாறாயினும், தொழிற்சங்கங்கள் அமைதியாக இருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த பேரழிவு நடக்க அனுமதித்துள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில், இரத்தினபுரி மாவட்டத்தில் ரம்பொட, கண்டி மாவட்டத்தில் ஹந்தான மற்றும் குருணாகல் மாவட்டத்தில் படலேகொடயிலும் தனியார் குடும்பங்களுக்குச் சொந்தமான தேயிலை, இறப்பர், மற்றும் தெங்கு நிலங்கள் உட்பட பல நிலங்கள் விற்கப்பட்டுள்ளன. அதன் பெறுபேறாக தொழிலாளர்கள் தமது வேலைகளை இழந்து, பல கடுமையான துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இ.தொ.கா., மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உட்பட பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் இந்தத் தாக்குதல்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவே ஆதரவளித்துள்ளன.
வருமானம் குறைந்த தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் அல்லது பிலிகந்தமலை போன்ற மட்டுப்படுத்தப்பட்ட நிலங்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளவர்களின் வாழ்வதற்கான மற்றும் வேலை செய்வதற்கான ஜனநாயக உரிமைகள் நில உடைமையாளர்களால் மீறப்பட்டு, நசுக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனாதரவாக விடப்பட்டுள்ளனர்.
இந்தத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் ஒட்டுமொத்தமாக சகல பெருந்தோட்ட தொழிலாள வர்க்கமும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளின் ஒரு பாகம் ஆகும். நாம், அனைத்து தொழிலாளர்களும் தமது போராட்டத்தின் ஒரு பாகமாக இந்த வர்க்க சகோதர சகோதரிகளின் உரிமைகளைப் பாதுகாக்க முன்வரவேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
தோட்டத் தொழிலாளர்களோ அல்லது ஏனைய துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களோ முதலாளித்துவத்தின் கீழ் தமது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது. முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக பிரிந்து பெருந்தோட்டங்களிலும் மற்றும் ஏனைய வேலைத் தளங்களிலும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவதன் ஊடாகவும் முதலாளித்துவ முறைக்கு எதிராகவும் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் ஊடாகவே உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.
மேலும் படிக்க
- இலங்கையில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான ஜோடிக்கப்பட்ட அடக்குமுறை வழக்கு தொடர்கிறது
- "நாங்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்ததில்லை" என இலங்கை தோட்டத் தொழிலாளி கூறுகிறார்
- உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதற்கான ஆளும் கட்சி மற்றும் இ.தொ.கா. ஒப்பந்தம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை
